

Japan Luna Ring Project: பூமியில் நாம் பயன்படுத்தும் சூரிய சக்தி மின்சாரத்தில் ஒரு நடைமுறைச் சிக்கல் உள்ளது. பகல் முழுவதும் மின்சாரம் கிடைக்கும், ஆனால் சூரியன் மறைந்தவுடன் இருட்டிய பிறகு மக்கள் வீடுகளுக்குத் திரும்பி மின்சாதனங்களை ஆன் செய்யும் நேரத்தில் உற்பத்தி முற்றிலுமாக நின்றுவிடும். இரவு நேரங்களிலும் பேட்டரி சேமிப்பு இல்லாமல் நேரடியாகச் சூரிய ஒளியில் இருந்து மின்சாரம் கிடைத்தால் மின்சார பில்லும் குறையும், சுற்றுசூழலும் பாதுகாக்கப்படும்.
இந்த மாபெரும் தேவையைப் பூர்த்தி செய்ய ஜப்பான் ஒரு பிரம்மாண்டமான யோசனையை முன்வைத்துள்ளது. நிலவைச் சுற்றி ஒரு மாபெரும் சோலார் வளையத்தை அமைத்து, அங்கிருந்து பூமிக்குத் தடையின்றி வயர்லெஸ் மூலம் மின்சாரத்தை அனுப்பும் அந்த விசித்திரமான திட்டத்தைப் பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க.
லூனா ரிங் மெகா திட்டம் (Luna Ring Project)!
ஜப்பானின் இந்த லட்சியத் திட்டத்திற்கு லூனா ரிங் (Luna Ring) என்று பெயரிடப்பட்டுள்ளது. நிலவின் பூமத்திய ரேகையைச் சுற்றி சுமார் பதினோராயிரம் கிலோமீட்டர் நீளத்திற்கும், இருநூற்று ஐம்பது மைல் அகலத்திற்கும் ஒரு பிரம்மாண்டமான சோலார் பேனல் வளையத்தை அமைப்பதே இதன் முக்கிய இலக்காகும். நிலவில் ஒரு நாள் என்பது பூமியின் கணக்குப்படி சுமார் இரண்டு வார பகல் மற்றும் இரண்டு வார இரவு ஆகும்.
ஆனால் நிலவைச் சுற்றி வளையம் அமைக்கும்போது ஒரு பகுதியில் இருள் சூழ்ந்தாலும், மற்றொரு பகுதியில் சூரிய ஒளி பட்டுக்கொண்டே இருக்கும். இதனால் இந்த சிஸ்டம் எப்போதுமே மின்சாரத்தை உற்பத்தி செய்துகொண்டே இருக்கும். நிலவில் உள்ள மண்ணையே பயன்படுத்தி கட்டுமானங்களை உருவாக்கி, அதன் மீது பேனல்களை பொருத்த திட்டமிட்டுள்ளனர்.
பூமிக்கு மின்சாரம் வரும் பாதை!
நிலவில் மின்சாரம் தயாரிப்பது ஒரு பாதி வேலை என்றால், அதை எவ்வித இழப்பும் இன்றி பூமிக்குக் கொண்டு வருவதுதான் மிகவும் கஷ்டமான காரியமாகும். மைக்ரோவேவ் அல்லது லேசர் கதிர்கள் மூலம் வயர்லெஸ் முறையில் மின்சாரம் பூமிக்கு அனுப்பப்படும். லேசரை விட மைக்ரோவேவ் கதிர்கள் மேகங்களை எளிதாக ஊடுருவி வரும் சக்தி கொண்டவை.
ஜப்பான் விண்வெளி ஆய்வு நிறுவனம் இந்தத் தொழில்நுட்பத்தை ரெக்டென்னா (Rectenna) என்ற பிரத்யேக ஆன்டெனாக்கள் மூலம் பூமியில் ரிசீவ் செய்வதற்கான ஆய்வுகளைத் தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. பீட்டர் கிளேசர் என்பவர் 1968 ஆண்டிலேயே ஸ்பேஸ் சோலார் பவர் பற்றிய கருத்தை உலகிற்கு அறிமுகப்படுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.
சவால்கள், சோதனைகள்!
நிலவில் வளிமண்டலம் மற்றும் மேகங்கள் இல்லாததால் சூரிய ஒளி எவ்வித தடையுமின்றி முழுமையாகக் கிடைக்கும். ஆனால் இந்த திட்டத்தை செயல்படுத்துவதில் ஏராளமான நடைமுறைச் சிக்கல்கள் உள்ளன. இதற்கான பல கோடி ரூபாய் செலவு, ரோபோக்களை வைத்து நிலவின் தூசு நிறைந்த கடினமான சூழ்நிலையில் வருடக் கணக்கில் வேலை வாங்குவது போன்றவை இப்போதைக்கு மிகப்பெரிய சவாலாகும்.
இருப்பினும், கலிபோர்னியா தொழில்நுட்ப நிறுவனம் (California Institute of Technology) விண்வெளியில் வயர்லெஸ் மின்சாரப் பரிமாற்றத்தை அண்மையில் வெற்றிகரமாகச் சோதித்துள்ளது. அதேபோல ஐரோப்பிய விண்வெளி நிறுவனமும் சொலாரிஸ் (SOLARIS) என்ற திட்டத்தின் கீழ் இது குறித்த ஆய்வுகளை தீவிரமாக நடத்தி வருகிறது.
இத்திட்டத்தை 2035 ஆண்டுக்குள் தொடங்க சிலர் ஆதரவு தெரிவித்தாலும், இன்னும் அதற்கான முழுமையான நிதி ஒதுக்கீடு உறுதி செய்யப்படவில்லை. ஆனால் தற்போதைய நவீன தொழில்நுட்ப வளர்ச்சியைக் காணும்போது இது எதிர்காலத்தில் சாத்தியமாக அதிக வாய்ப்புகள் உள்ளன. தடையில்லா சுத்தமான மின்சாரம் கிடைத்தால் அது மனித குலத்தின் வளர்ச்சிக்கு ஒரு மாபெரும் திருப்புமுனையாக அமையும்.
Kalkionline-ஐ Google செய்திகளில் பின்தொடர... Google News
Kalkionline-ஐ முகநூலில் பின்தொடர... Kalkionline Facebook, Mangayar Malar Facebook
Kalkionline-ஐ இன்ஸ்டாகிராமில் பின்தொடர... Kalkionline Instagram, Mangayar Malar Instagram
Kalkionline-ஐ வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
Kalkionline-ஐ பின்தொடர: Youtube, Twitter
Add KalkiOnline as a preferred source on Google... Click Here