

இந்தியாவில் சைபர் குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதுகுறித்து தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வந்தாலும் நன்கு படித்தவர்களே மோசடியில் சிக்கிக் கொள்கின்றனர். கடந்த 6 மாதங்களில் மட்டும் சுமார் ரூ. 1,500 கோடி முதலீடு மோசடிகளால் இழக்கப்பட்டுள்ளதாக உள்துறை அமைச்சகத்தின் தரவுகள் கூறுகின்றன.
வாட்ஸ்ஆப், டெலிகிராம் போன்ற செயலிகள் மூலமாகவே சுமார் 20% குற்றங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதன் மூலமாக மக்களை எளிதாக சென்றடைய முடிகிறது என்ற ஒரு கருத்து முன்வைக்கப்படுகிறது.
இந்தியாவில் சைபர் குற்றங்கள் அதிகரித்து வரும் அதேவேளையில் அதிலிருந்து உங்கள் ஸ்மார்ட்போனை பாதுகாப்பது மிகவும் முக்கியமானதாகி விட்டது. வழக்கமாக, ஒரு பயனர் தனது ஸ்மார்ட்போனை பாஸ்வேர்டு, கைரேகை, முக ஐடி போன்ற பாதுகாப்பு அம்சங்களை பயன்படுத்தி ஒரளவு பாதுகாப்பாக பயன்படுத்தினாலும், அது நம்முடைய போனை பாதுகாக்க போதுமானதாக இல்லை என்பது தான் உண்மை.
ஒரு ஹேக்கரால் நம்முடைய போனில் உள்ள அனைத்து முக்கியமான தகவல்களை சுலபமாக திருடமுடியும்.
அதனால் தான் நாட்டில் உள்ள பயனர்களின் செல்போன்களில் உள்ள தனிப்பட்ட தரவுகளை பாதுகாக்க உதவும் வகையில் இந்திய அரசு 2019-ல் M-Kavach என்ற செயலியை அறிமுகப்படுத்தியது. இதன் புதிய பதிப்பான M-Kavach 2, 2024-ம் ஆண்டு வாக்கில் புதுப்பிக்கப்பட்டது.
M-Kavach 2 செயலி என்பது இந்திய அரசின் எலக்ட்ரானிக்ஸ் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் ஆதரவுடன் C-DAC-ல் உருவாக்கப்பட்ட ஒரு மொபைல் பாதுகாப்பு செயலி ஆகும். M-Kavach 2 செயலியின் வெளியீடு நாட்டின் சைபர் மோசடிகளில் இருந்து பயனர்களின் பாதுகாப்பை நோக்கமாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.
மேலும் இது ஆண்ட்ராய்டு சாதனங்களை வைரஸ்கள், ஸ்பைவேர் மற்றும் பிற இணைய அச்சுறுத்தல்களில் இருந்தும் பாதுகாக்கிறது. இந்த செயலி பாதுகாப்பான மொபைல் உள்ளமைவுகளுக்கு வழிகாட்டி, தீங்கிழைக்கும் பயன்பாடுகளைக் கண்டறிந்து, சாதனங்களின் பாதுகாப்பு மற்றும் தனியுரிமையை மேம்படுத்த உதவுகிறது. மேலும் ஹேக்கர்கள் மற்றும் மோசடிகளிலிருந்து உங்கள் தனிப்பட்ட தரவைப் பாதுகாக்கிறது.
மொபைல் வர்த்தகம், மொபைல் பேங்கிங் போன்றவற்றுக்கான பாதுகாப்பான தளத்தை உருவாக்குகிறது. மேலும் பாதுகாப்பு தவறான உள்ளமைவுகள் மற்றும் தீங்கிழைக்கும் பயன்பாடுகளிலிருந்து பயனர்களைப் பாதுகாப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
M-Kavach 2 செயலி உங்களது ஸ்மார்ட்போனில் உள்ள வைஃபை, கேமரா, புளூடூத் போன்றவற்றில் உள்ள தரவுகளை யாரும் திருடமுடியாத வகையில் பாதுகாப்பு வழங்குகிறது.
மொபைல் வாலட்கள், சமூக ஊடக செயலிகள் மற்றும் பல முக்கியமான செயலிகளுக்கான அணுகலை கட்டுப்படுத்தும் அம்சங்களுடன் M-Kavach 2 செயலி வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த செயலி மால்வேர் தாக்குதல்களிலிருந்து (malicious software) ஸ்மார்ட்போனைப் பாதுகாக்கிறது. மேலும் M-Kavach 2 பயனர்களுக்கு வரும் தேவையற்ற அழைப்புகள் மற்றும் எல்எம்எஸ்களை தடுத்து பாதுகாப்பு அளிக்கிறது.
M-Kavach 2 செயலி பயனர்கள் தங்கள் ஸ்மார்ட்போனின் தரவை காப்புப் பிரதி எடுக்கவும் மீட்டெடுக்கவும் உதவுகிறது. M-Kavach 2 செயலியை எளிதாக பதிவிறக்கம் செய்யலாம். அதேபோல் நீங்கள் இந்த M-Kavach 2 செயலியை பதிவிறக்கம் செய்திருந்தால் உங்கள் செல்போன் தொலைந்து போனாலோ அல்லது
திருடப்பட்டாலோ உங்கள் ஸ்மார்ட்போனில் உள்ள தரவுகள் திருடர்கள் கையில் கிடைக்காமல் அழிக்கவும் முடியும். இதன் மூலம் உங்கள் போனில் உள்ள தரவுகள் பாதுகாக்கப்படுவதுடன், மோசடி நபர்களின் கையில் சிக்கினாலும் உங்கள் தரவுகள் பாதுகாக்கப்படும்.
முக்கிய அம்சங்கள்
* M-Kavach 2 உங்கள் போனில் உள்ள தீங்கிழைக்கும் பயன்பாடுகளைக் கண்டறிய ஸ்கேன் செய்கிறது.
* உங்கள் போனில் ஏதேனும் மறைக்கப்பட்ட அல்லது தடைசெய்யப்பட்ட செயலிகள் இருந்தால் அதை உங்களுக்கு அடையாளம் காட்டுகிறது.
* உங்களது போனில் இருக்கும் hardware குறித்து எச்சரிக்கை செய்கிறது.
* தவறான SMS, அழைப்புகள் வந்தால் எச்சரிக்கை செய்கிறது.
* நீண்ட காலமாக புதுப்பிக்கப்படாத பயன்பாடுகள் குறித்து பயனர்களுக்கு அறிவிக்கிறது.
* உங்களின் முக்கியமான பயன்பாடுகளுக்கு அதாவது, டிஜிட்டல் பரிவர்த்தனை போன்றவற்றிற்கு பாதுகாப்பு தருகிறது.
இந்த M-Kavach 2 செயலியை கூகிள் பிளே ஸ்டோர் போன்ற தளங்களில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். ஆங்கிலம் மற்றும் இந்தியில் கிடைக்கிறது.