

நாம் சமையலறையில் வேலை செய்யும்போது தவறுதலாக ஒரு சூடான பாத்திரத்தைத் தொட்டுவிட்டால் என்ன செய்வோம்? "இது சூடாக இருக்கிறது, இதிலிருந்து கையை எடுக்க வேண்டும்" என்று நம் மூளை கட்டளையிடும் வரை நாம் காத்திருப்பதில்லை. தொட்ட மறுவினாடியே, மின்னல் வேகத்தில் நம் கை தானாகவே பின்வாங்கிவிடும். இதுவே 'அனிச்சை செயல்' (Reflex Action).
இயற்கையாகவே மனிதர்களுக்கு இருக்கும் இந்தத் தற்காப்புத் திறனை, இப்போது உயிரற்ற ரோபோக்களுக்கும் கொண்டு வர விஞ்ஞானிகள் தீவிரமாக முயன்று வெற்றியும் கண்டுள்ளனர். இது ரோபோட்டிக்ஸ் உலகில் ஒரு மைல்கல்லாகப் பார்க்கப்படுகிறது.
தற்போதைய இயந்திரங்கள்!
இன்று தொழிற்சாலைகளிலும், மருத்துவத் துறையிலும் பயன்படுத்தப்படும் ரோபோக்கள் எந்திரத்தனமானவை. அவற்றின் உடலில் பொருத்தப்பட்டுள்ள சென்சார்கள் மூலம் அழுத்தத்தை மட்டுமே உணர முடியும். மென்மையான தொடுதல் எது, ஆபத்தான வலி எது என்பதைப் பிரித்தறியும் ஆற்றல் அவற்றுக்கு இல்லை.
உதாரணமாக, ஒரு ரோபோவின் கையில் பலத்த அடிபட்டால், அது குறித்த தகவல் அதன் CPU-க்கு சென்று, அங்குப் பகுப்பாய்வு செய்யப்பட்டு, பிறகு என்ன செய்ய வேண்டும் என்ற கட்டளை வரும் வரை அந்த ரோபோ காத்திருக்கும். இந்தத் தாமதம், அந்த ரோபோவிற்கும் அதன் அருகில் வேலை செய்யும் மனிதர்களுக்கும் ஆபத்தை விளைவிக்கலாம்.
ஹாங்காங் விஞ்ஞானிகளின் சாதனை!
இந்தக் குறையைப் போக்குவதற்காக, ஹாங்காங் நகரப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் ஒரு புரட்சிகரமான மாற்றத்தைக் கொண்டு வந்துள்ளனர். மனிதர்களின் நரம்பு மண்டலம் எப்படிச் செயல்படுகிறதோ, அதே தத்துவத்தைப் பயன்படுத்தி 'நியூரோமார்ஃபிக் எலக்ட்ரானிக் ஸ்கின்' (Neuromorphic E-Skin) என்ற புதிய வகைச் செயற்கைத் தோலை அவர்கள் உருவாக்கியுள்ளனர்.
இந்தப் புதிய செயற்கைத் தோலின் சிறப்பு என்னவென்றால், இது வலியை உணர்ந்தவுடன் தலைமை மென்பொருளின் உத்தரவுக்காகக் காத்திருக்காது. ஆபத்து என்று உணர்ந்தவுடனேயே, அந்தப் குறிப்பிட்ட பாகம் தானாகவே விலகிக்கொள்ளும்.
மேலும், இந்தத் தோல் பல சிறிய தொகுப்புகளாக வடிவமைப்பட்டுள்ளது. ஒவ்வொரு தொகுப்பும், "நான் நன்றாக இயங்குகிறேன்" என்ற சிக்னலைத் தொடர்ந்து அனுப்பிக்கொண்டே இருக்கும். ஒருவேளை ரோபோவின் கையில் வெட்டுக்காயமோ அல்லது கிழிசலோ ஏற்பட்டால், அந்தச் சிக்னல் துண்டிக்கப்படும். மனிதர்களுக்குக் காயம் பட்டால் வலிப்பதைப் போல, ரோபோவும் தனது உடலில் எங்குப் பழுது ஏற்பட்டுள்ளது என்பதைத் துல்லியமாகக் கண்டறிந்துவிடும்.
மனிதர்களுக்கு அருகில் பாதுகாப்பாக வேலை செய்யும் Humanoid ரோபோக்களை உருவாக்க இந்தத் தொழில்நுட்பம் பெரிதும் உதவும். இதுவரை ரோபோக்கள் என்றால் ஜடப்பொருள் என்று இருந்த நிலை மாறி, சூழலை உணர்ந்து, ஆபத்தைத் தவிர்த்து, புத்திசாலித்தனமாகச் செயல்படும் இயந்திரங்களாக அவை மாறும்.
இந்தக் கண்டுபிடிப்பு தொழிற்சாலை விபத்துகளைக் குறைப்பது மட்டுமல்லாமல், எதிர்காலத்தில் போர்க்களங்கள் மற்றும் மீட்புப் பணிகளில் ஈடுபடும் ரோபோக்களின் செயல்திறனைப் பல மடங்கு அதிகரிக்கும்.