நீலப் புரட்சி: இந்திய மீனவர்களின் வாழ்க்கையை மாற்றும் நவீனத் தொழில்நுட்பங்கள்!

குறைந்த நீர் மற்றும் குறைந்த நிலப்பரப்பில் அதிக லாபம் தரும் மறுசுழற்சி நீர்வாழ் முறை!
நீலப் புரட்சி - Aquaculture India
நீலப் புரட்சி - Aquaculture India
Updated on

ISRO வழிகாட்டுதலுடன் PFZ தகவல், ஆழ்கடல் மீன்பிடி கருவிகள், சூரிய குளிர்பதன வசதிகள், தானியங்கி தீவன மற்றும் ஆக்சிஜன் வழங்கும் அமைப்புகள் மூலம் மீனவர்களின் செலவு குறைந்து, லாபம் அதிகரிக்கிறது. பயோஃப்ளாக், RAS மூலம் சிறு விவசாயிகளுக்கும் மீன் வளர்ப்பு வாய்ப்பு கிடைத்து, வேலைவாய்ப்பு, ஊட்டச்சத்து பாதுகாப்பு, அந்நியச் செலாவணி வருவாய் ஆகியவை உயர்ந்து, இந்தியா உலகின் 2-வது பெரிய மீன் உற்பத்தி நாடாக உயர்ந்துள்ளது.

நீலப் புரட்சி (Blue Revolution) என்பது நாட்டின் கடல்சார் வளங்கள், ஆறுகள், ஏரிகள் மற்றும் குளங்கள் மூலம் மீன் உற்பத்தி மற்றும் நீர்வாழ் உயிரினங்களின் உற்பத்தியை இரட்டிப்பாக்கி, நாட்டின் பொருளாதாரத்தையும் மீனவர்களின் வாழ்வாதாரத்தையும் உயர்த்த கொண்டுவரப்பட்ட மாபெரும் திட்டமாகும்.

பாரம்பரிய மீன்பிடி முறைகளில் இருந்து விலகி, மீன் உற்பத்தியைப் பெருமளவில் அதிகரிக்க அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் இதில் மிக முக்கியப் பங்காற்றுகிறது. அதன் பங்களிப்பைப் பற்றி இப்பகுதியில் காண்போம்.

நீலப் புரட்சியில் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தின் பங்கு;

நீலப் புரட்சியை வெற்றிகரமாகச் செயல்படுத்துவதற்குப் பல்வேறு நவீன தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படுகின்றன:

சாட்டிலைட் & ஜி.பி.எஸ் தொழில் நுட்பம் :

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (ISRO) வழிகாட்டுதலின் படி, செயற்கைக்கோள்கள் மூலம் கடலில் எந்தப் பகுதியில் மீன்கள் அதிகம் கூடும் (Potential Fishing Zones - PFZ) என்ற தகவல்கள் துல்லியமாகக் கணக்கிடப்பட்டு மீனவர்களின் கைபேசிகளுக்கு அனுப்பப்படுகின்றன. இதனால் மீனவர்களின் தேடல் நேரம், படகின் எரிபொருள் விரயம் குறைகிறது.

பயோஃப்ளாக் தொழில் நுட்பம்: மிகக் குறைந்த நிலப்பரப்பில், குறைந்த தண்ணீரைப் பயன்படுத்தி மீன் வளர்க்கும் ஒரு நவீன அறிவியல் முறை இது.தண்ணீரில் உள்ள கழிவுகளை நுண்ணுயிரிகள் மூலம் புரதச்சத்துமிக்க உணவாக மாற்றி, தண்ணீரை மாற்றத் தேவையில்லாமல் மீன்களை வேகமாக வளர்க்க இது உதவுகிறது.

மறுசுழற்சி நீர்வாழ் உயிரின அமைப்பு:

தொட்டிகளில் உள்ள கழிவுநீரை நவீன வடிகட்டிகள் (Filters) மூலம் சுத்திகரித்து மீண்டும் மீண்டும் பயன்படுத்தும் முறை. இதில் வெப்பநிலை, ஆக்சிஜன் அளவு ஆகியவை கணினி மூலம் கண்காணிக்கப்படும்.

கூண்டு மீன் வளர்ப்பு :கடல் அல்லது பெரிய அணைகளின் நீர்ப்பரப்பில் மிதக்கும் பாதுகாப்பான கூண்டுகளை அமைத்து, அதிக அடர்த்தியில் மீன்களை வளர்க்கும் முறை.

மரபியல் மற்றும் தாய் மீன் மேம்பாடு: நோயெதிர்ப்புச் சக்தியும், விரைவாக வளரும் திறனும் கொண்ட மீன் மற்றும் இறால் ரகங்கள் (எ.கா. Vannamei வகை இறால்கள்) மரபியல் தொழில்நுட்பம் மூலம் உருவாக்கப்படுகின்றன.

நீலப் புரட்சி - Aquaculture India
நீலப் புரட்சி - Aquaculture IndiaAI Image

இது சிறப்பாகச் செயலாற்றும் முறை!

துல்லியமான கண்காணிப்பு: சென்சார்கள் (Sensors) மற்றும் மொபைல் ஆப்ஸ்கள் மூலம் நீரின் கார-அமிலத்தன்மை (pH), ஆக்சிஜன் அளவு (Dissolved Oxygen) ஆகியவை 24 மணிநேரமும் கண்காணிக்கப்பட்டு, தேவைப்படும்போது தானியங்கி முறையில் தீவனம் மற்றும் ஆக்சிஜன் வழங்கப்படுகிறது.

ஆழ்கடல் மீன்பிடிப்பு : நவீன விசைப்படகுகள், சோனார் (Sonar) மற்றும் ஜி.பி.எஸ் கருவிகள் மூலம் கடலின் ஆழமான பகுதிகளுக்குச் சென்று உயர்தர மதிப்புமிக்க மீன்களைப் பிடிக்க முடிவதோடு, புயல் போன்ற ஆபத்துக் காலங்களில் மீனவர்களுக்கு முன்னெச்சரிக்கை வழங்கிப் பாதுகாக்கிறது.

குளிர்ந்த சங்கிலி வசதிகள்: பிடிபட்ட மீன்கள் கெட்டுப்போகாமல் இருக்க, நவீன சூரிய ஒளி குளிர்பதனக் கிடங்குகள் மற்றும் குளிரூட்டப்பட்ட வாகனங்கள் மூலம் நேரடியாகச் சந்தைகளுக்குக் கொண்டு செல்லப்படுகின்றன.

நீலப்புரட்சியின் பயன்கள்:

பொருளாதார வளர்ச்சி & ஏற்றுமதி: இந்தியாவின் கடல் உணவு ஏற்றுமதி பல்லாயிரம் கோடி ரூபாய் அளவுக்கு உயர்ந்து, நாட்டுக்கு அதிக அந்நியச் செலாவணியை ஈட்டித் தருகிறது.

மீனவர்கள் மற்றும் விவசாயிகளின் வருமான உயர்வு: குறைந்த நிலமும் நீரும் கொண்ட விவசாயிகள் கூடத் தங்கள் நிலங்களில் 'பயோஃப்ளாக்' அல்லது 'RAS' மூலம் பகுதி நேரமாக மீன் வளர்த்து அதிக லாபம் ஈட்ட முடிகிறது.

உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பு: குறைந்த விலையில் உயர்தர புரதச்சத்து மற்றும் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் (Omega-3 Fatty Acids) கொண்ட மீன் உணவு மக்களுக்கு எளிதாகக் கிடைக்க வழிவகை செய்கிறது.

இதையும் படியுங்கள்:
பசியைப் போக்கிய தொழில்நுட்பம்: பாரம்பரிய விவசாயம் நவீன விவசாயமாக மாறியது எப்படி?
நீலப் புரட்சி - Aquaculture India

வேலைவாய்ப்பு உருவாக்கம்: மீன் வளர்ப்பு, தீவன உற்பத்தி, பதப்படுத்துதல், போக்குவரத்து மற்றும் ஏற்றுமதி ஆகிய துறைகளில் கிராமப்புற இளைஞர்கள் மற்றும் பெண்களுக்குப் புதிய வேலைவாய்ப்புகள் உருவாகின்றன. இதனால் வேலை இல்லா திண்டாட்டம் குறைகிறது.

நீலப்புரட்சி தொடங்குவதற்கு முன் இருந்த மீன் உற்பத்தியை விட, நவீன தொழில் நுட்பங்களால் தற்போது இந்தியாவின் மொத்த மீன் உற்பத்தி 175 லட்ச மெட்ரிக் டன்னுக்கும் (Lakh Metric Tonnes) மேல் உயர்ந்துள்ளது.

இதனால் சீனாவுக்கு அடுத்தபடியாக, உலகின் 2-வது மிகப்பெரிய மீன் உற்பத்தி நாடாக இந்தியா உருவெடுத்துள்ளது.

சுருக்கமாக:

நீலப் புரட்சிஎன்பது அரசுக்குச் சாதாரண வரி வருவாயை மட்டும் தராமல், மாபெரும் அந்நியச் செலாவணி ஈட்டித் தரும் துறைமுகமாகவும், கிராமப்புறப் பொருளாதாரத்தை வலுப்படுத்தும் மாபெரும் பொருளாதார காரணியாகவும் உருவெடுத்துள்ளது . மேலும்நீலப் புரட்சி என்பது வெறும் மீன் பிடிப்பது மட்டுமல்ல; அறிவியல் மற்றும் தொழில் நுட்பத்தின் உதவியோடு இயற்கை வளங்களைப் பாதிக்காமல், நிலையான முறையில் கடல் மற்றும் நீர் வளங்களைப் பயன்படுத்தி நாட்டின் உணவுத் தேவையை பூர்த்தி செய்யும் ஒரு பசுமைப் புரட்சி போன்றதே நீலப் புரட்சியாகும்!

இதையும் படியுங்கள்:
வனவிலங்கு பாதுகாப்பு: இளைஞர்களின் அதிரடிப் புரட்சி!
நீலப் புரட்சி - Aquaculture India

இந்த நீலப் புரட்சி பற்றி தெரிந்து கொண்டதால் நாட்டின் அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சியால் நீலப் புரட்சி எப்படி வளர்ச்சி அடைகிறது. அதனால் எப்படி பொருளாதாரம் மேன்மை அடைகிறது. அந்நியச் செலவாணியில் அதன் பங்கு என்ன? கிராமப்புற மக்களுக்கு எப்படி வேலை வாய்ப்பு கிடைக்கிறது போன்ற விஷயங்களையும் தெரிந்துகொள்ள முடிகிறது. வீட்டில் தொட்டி மீன் வளர்ப்புக்கு அந்தத் தண்ணீரை எப்படி பயன்படுத்த வேண்டும் என்பதற்கான வழிமுறையும் கிடைக்கிறது.

மொத்தத்தில் ஒரு புரட்சிகரமான திட்டம் செயல்பட அறிவியல் தொழில்நுட்பம் எப்படி உதவி புரிகிறது என்பதை நுட்பமாக புரிந்து கொள்ள முடிகிறது. இயற்கை வளங்களை பாதுகாப்பதில் நாம் எப்படி அக்கறை கொள்ளவேண்டும் என்பதற்கு சிறந்த கல்வி கிடைக்கிறது.

சுயதொழில் தொடங்க விரும்பும் கிராமப்புற இளைஞர்களும் விவசாயிகளும் இந்தத் தகவல்களின் மூலம் குறைந்த செலவில் அதிநவீன மீன் வளர்ப்பு முறைகளைத் தொடங்கி, நிலையான லாபத்தையும் ஊட்டச்சத்து பாதுகாப்பையும் ஒரே நேரத்தில் அடையும் தெளிவைப் பெறுவார்கள்.

logo
Kalki Online
kalkionline.com