
இறப்பு என்பது பலருக்கு பயத்தை அளிக்கக்கூடிய ஒரு நிகழ்வு. ஏனெனில், இறப்பிற்கு பின் என்ன இருக்கிறது என்பது எவருக்குமே தெரியாது. நம்மிடம் இருக்கும் மதநூல்கள் அனைத்திலும் சொல்லக்கூடியது ஒன்று தான். அதாவது இறப்பிற்கு பின் சொர்கம், நரகம் என்று ஒன்றுள்ளது. நிறைய புண்ணியம் செய்தவர்கள் சொர்கத்திற்கும், பாவம் செய்தவர்கள் நரகத்திற்கும் செல்வார்கள் என்பது நமக்கு சொல்லப்பட்ட விஷயமாகும்.
இந்த காரணத்தால் தான் உலகில் உள்ள மக்கள் தவறான வழியை பின்பற்றி செல்ல பயப்படுகிறார்கள். வாழ்க்கையை நெறிமுறையோடு நல்ல விதமாக வாழ்ந்து சொர்கத்தை அடைய வேண்டும் என்று ஆசைப்படுகிறார்கள். ஆனால், உண்மையிலேயே இறப்பிற்கு பின் நாம் இதுப்போன்ற இடத்திற்கு செல்வோமா? இதை புரிந்துக் கொள்ள ஒரு உண்மை சம்பவத்தை பற்றி பார்ப்போம்.
Near death experience (NDE) என்பது மருத்துவ ரீதியாக நாம் இறந்து விடுவது. பிறகு சிறிது நேரம் கழித்து திரும்ப உயிர் பெற்று திரும்புவதாகும். இதுப்போன்ற சம்பவங்கள் உலகம் முழுவதும் பலருக்கு நடந்திருக்கிறது. இதுப்போன்ற அனுபவம் ஏற்பட்டவர்கள் தங்கள் உடலில் இருந்து ஆன்மா மட்டும் தனியாக பிரிந்து சென்றதாகவும், அவர்கள் ஒளி வரக்கூடிய ஒரு பாதையை பார்த்ததாகவும், நிம்மதியான மனநிலையை உணர்ந்ததாகவும் சொல்கிறார்கள்.
1991 ஆம் ஆண்டு பாம் ரெனால்ட் என்னும் பெண்மணிக்கு கடினமான மூளை அறுவை சிகிச்சை நடைப்பெற்றது. மூளை அறுவை சிகிச்சையின் போது அவருடைய மூளையின் அலைகள் நின்றன. பாம் ரெனால்ட் மருத்துவ ரீதியாக ஒரு மணி நேரம் இறந்துவிட்டதாக சொல்லப்பட்டது. பிறகு மூளை அறுவை சிகிச்சை நல்லப்படியாக முடிந்த பாம் மீண்டும் மருத்துவர்களால் காப்பாற்றப்பட்டார். அப்போது அவர் அதிர்ச்சிகரமான சில தகவல்களை மருத்துவர்களிடம் கூறினார்.
அதை கேட்ட மருத்துவர்களும் அதிர்ந்து போனார்கள். பாம் ரெனால்ட் இறந்ததாக சொல்லப்பட்ட நேரத்தில் அவர் கண்களை திறந்து பார்க்கும் போது அவருடைய ஆன்மா அவருடைய உடலுக்கு மேலே மிதந்ததாகவும், மருத்துவர்கள் அவருக்கு செய்த சிகிச்சைசை கண்கூடாக பார்த்ததாகவும், அவர்கள் பேசிய உரையாடலை கேட்டதாகவும் கூறினார். அவர் மருத்துவரின் கைகளில் இருந்த ஒரு குறிப்பிட்ட பொருளை பற்றி தெளிவாக கூறினார். இதை கேட்ட மருத்துவர்கள் அதிர்ந்து போனார்கள்.
அறுவை சிகிச்சை செய்வதற்கு முன் அந்த நபருடைய கண்கள் மற்றும் காதுகள் Tape பயன்படுத்தி நன்றாக மூடப்பட்டிருக்கும். அப்படி இருந்தும் இந்த பெண்மணி மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்ய பயன்படுத்திய அந்த குறிப்பிட்ட பொருளை பற்றி விவரித்தார் என்பது புரியாத புதிராக உள்ளது.
'தற்போது அறுவை சிகிச்சையில் ஒரு பிரச்னை ஏற்பட்டுட்டுள்ளது' என்று ஒரு பெண்ணின் குரல் கேட்டதாக கூறினார். இதுவும் உண்மை தான் என்பதை சிகிச்சை செய்த மருத்துவர்கள் ஒப்புக் கொள்கிறார்கள். பிறகு பாம் ரெனால்ட்ஸை ஏதோ ஒரு சக்தி பிடித்து இழுப்பது போன்று உணர்ந்திருக்கிறார். இவருடைய ஆன்மா ஒரு நீண்ட பாதைக்குள் செல்வதை போல இருந்ததாக கூறியுள்ளார். அந்த பாதையின் முடிவில் பளிச்சிடும் பிரம்மாண்ட ஒளியையும், இறந்த உறவினர்களையும் பார்த்திருக்கிறார்.
பிறகு இவரை ஒரு உருவம் தடுத்து நிறுத்தி, 'இது உனக்கான நேரம் அல்ல. திரும்பி சென்று விடு!' என்று கூறியிருக்கிறது. ஒரு பெரிய அதிர்விற்கு பிறகு பாம் ரெனால்ட்ஸ் தன் உடலுக்குள் திரும்ப சென்றுவிட்டதாக சொல்கிறார். இதைக் கேட்ட பாம் ரெனால்ட்ஸ்க்கு அறுவை சிகிச்சை செய்த மருத்துவரான ராபர்ட் ஸ்பெட்ஸ்லர் அதிர்ச்சியடைந்தார்.
ஏனெனில், அவர் பார்த்தது மருத்துவ ரீதியாக சாத்தியமேயில்லை. பிறகு மருத்துவர்கள் அவர் கூறியதை ஓப்பிட்டு பார்க்கையில் ஒவ்வொரு சத்தமும், உரையாடலும், பயன்படுத்தியதாக சொல்லைப்படும் பொருட்கள் எல்லாமே சரியாக இருந்தது. பாம் ரெனால்ட்ஸ், இது கனவு இல்லை என்றும் உண்மையாகவே தனக்கு நடந்ததாகவும் கூறினார். இன்றைக்கும் மருத்துவர்களால் விவரிக்க முடியாததாக பாம் ரெனால்ட்ஸ் கேஸ் இருக்கிறது.