

ஒரு இயந்திரத்தை வெறும் 90 நாட்கள் மட்டுமே வேலை செய்யும் என்று உருவாக்கி அனுப்பினால், அது 5000 நாட்களுக்கும் மேல், அதாவது சுமார் 15 வருடங்கள் உழைத்து, செவ்வாய் கிரகத்தில் தண்ணீர் இருந்ததற்கான ஆதாரத்தையே கண்டுபிடித்தது என்று சொன்னால் நம்ப முடிகிறதா?
அதுதான் ஆப்பர்சூனிட்டி (Opportunity) ரோவர் செய்த மாபெரும் சாதனை. உன்னால் முடியாது என்று யார் சொன்னாலும், எதிர்பார்ப்பைத் தாண்டி ஜெயிக்க முடியும் என்று நிரூபித்த அந்த இயந்திரத்தின் கதையை இப்போது பார்க்கலாம்.
இரட்டையர்களின் பயணம்!
நாசா விஞ்ஞானியான ஸ்டீவ் குவேரஸ் (Steve Squyres), செவ்வாய் கிரகத்திற்கு ரோவர்களை அனுப்ப வேண்டும் என்று 10 ஆண்டுகளாகப் போராடினார். இறுதியாக, நாசா இதற்கு ஒப்புதல் அளித்தது. ஒரே மாதிரி தோற்றமளிக்கும் 'ஸ்பிரிட்' (Spirit) மற்றும் 'ஆப்பர்சூனிட்டி' (Opportunity) என்ற இரண்டு இரட்டை ரோவர்களை உருவாக்கினார்கள். ஸ்பிரிட் ரோவர் ஜூன் 2003-லும், ஆப்பர்சூனிட்டி ஜூலை 2003-லும் பூமியிலிருந்து ஏவப்பட்டன. ஆறு மாத பயணத்திற்குப் பிறகு, ஜனவரி 2004-ல் இரண்டும் செவ்வாய் கிரகத்தின் வெவ்வேறு பகுதிகளில் பத்திரமாகத் தரை இறங்கின.
ஆரம்பமே அமர்க்களம்!
ஆப்பர்சூனிட்டி மிகவும் அதிர்ஷ்டவசமாக 'ஈகிள் கிரேட்டர்' (Eagle Crater) என்ற ஒரு சிறிய பள்ளத்திற்குள் சரியாகச் சென்று இறங்கியது. அதன் முதல் புகைப்படத்திலேயே அது 'பெட்ராக்' (Bedrock) எனப்படும் பாறைகளைக் கண்டுபிடித்தது. அது மட்டும் இல்லாமல், அங்கே 'கோலி குண்டுகள்' போலச் சிறிய, உருண்டையான கற்களைக் கண்டுபிடித்தது.
இந்தக் கற்கள், அந்த இடத்தில் ஒரு காலத்தில் தண்ணீர் இருந்தால்தான் உருவாகும். இப்படி, தனது 90 நாள் திட்டத்தின் ஆரம்பத்திலேயே, செவ்வாய் கிரகத்தில் தண்ணீர் இருந்தது என்பதை ஆப்பர்சூனிட்டி உறுதி செய்தது. ஸ்பிரிட் ரோவர் இறங்கிய இடத்தில் எரிமலைப் பாறைகளே இருந்ததால், அது 'கொலம்பியா ஹில்ஸ்' என்ற மலையை நோக்கித் தனது பயணத்தைத் தொடங்கியது.
90 நாட்கள் முடிந்தும் இரண்டு ரோவர்களும் தொடர்ந்து வேலை செய்தன. அவற்றுக்கு மிகப்பெரிய சவால், செவ்வாய் கிரகத்தில் வீசும் மணல் புயல்கள்தான். இந்தப் புயல், ரோவரின் சோலார் பேனல்களை மூடிவிடும், அதனால் மின்சாரம் கிடைக்காது. மேலும், செவ்வாய் கிரகத்தின் இரவுகள் மிகவும் குளிராக இருக்கும்.
சூடு படுத்த பேட்டரி வேலை செய்யவில்லை என்றால் இயந்திரம் உறைந்துவிடும். ஆனால், அதிர்ஷ்டவசமாக அவ்வப்போது தோன்றும் சிறிய சூறாவளிக் காற்று, சோலார் பேனல்கள் மீதுள்ள தூசியைத் தானாகவே சுத்தம் செய்துவிட்டுச் சென்றது. இதனால் ரோவர்கள் மீண்டும் மீண்டும் உயிர் பெற்றன.
பிரிந்த இரட்டையர்!
ஆண்டுகள் செல்லச் செல்ல, ஸ்பிரிட் ரோவரின் ஒரு சக்கரம் உடைந்து போனது. அதனால் அது ரிவர்ஸிலேயே பயணிக்க வேண்டியிருந்தது. 2011-ல் ஒரு பெரிய புயலுக்குப் பிறகு, ஸ்பிரிட் ரோவரிடம் இருந்து சிக்னல் வருவது நிரந்தரமாக நின்று போனது. ஆனால், ஆப்பர்சூனிட்டி மட்டும் தனியாகத் தனது பயணத்தைத் தொடர்ந்தது.
அது 'விக்டோரியா கிரேட்டர்' போன்ற பல இடங்களைக் கடந்து, 'எண்டவர் கிரேட்டர்' (Endeavour Crater) என்ற மாபெரும் பள்ளத்தை அடைய 7 வருடங்கள் பயணம் செய்தது. வயதானதால், ஆப்பர்சூனிட்டிக்கு மெமரி லாஸ் ஏற்பட்டது, அதன் கைகளும் ஒரு கட்டத்தில் ஜாம் ஆகிவிட்டன. ஆனாலும் அது தனது 5000-வது நாளை செவ்வாய் கிரகத்தில் கொண்டாடியது.
2018-ம் ஆண்டு, ஒட்டுமொத்த செவ்வாய் கிரகத்தையும் மறைக்கும் அளவிற்கு ஒரு மாபெரும் மணல் புயல் உருவானது. ஆறு மாதங்கள் நீடித்த இந்தப் புயல், சூரிய ஒளியை முழுவதுமாகத் தடுத்தது. சோலார் பேனல் மூலம் சார்ஜ் செய்ய முடியாததால், ஆப்பர்சூனிட்டி உறக்க நிலைக்குச் சென்றது.
புயல் ஓய்ந்த பிறகு, நாசா விஞ்ஞானிகள் 1000 முறைக்கும் மேல் கட்டளைகளை அனுப்பியும், ஆப்பர்சூனிட்டியிடமிருந்து எந்தப் பதிலும் வரவில்லை. பிப்ரவரி 2019-ல், ஆப்பர்சூனிட்டி ரோவரின் மிஷன் அதிகாரப்பூர்வமாக முடிவடைந்ததாக அறிவிக்கப்பட்டது. அதன் கடைசி செய்தி இதுதான்: "என் பேட்டரி குறைகிறது, இருள் சூழ்கிறது."
90 நாட்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட ஒரு இயந்திரம், 15 ஆண்டுகள் உழைத்து, ஒரு கிரகம் பற்றிய நமது மொத்தப் பார்வையையும் மாற்றியது.
