

"கல்யாணம் என்பது ஆயிரம் காலத்துப் பயிர்" என்று சொல்வார்கள். ஆனால், இன்றைய காலகட்டத்தில் அந்தக் கல்யாணப் பயிரை ஆன்லைனில் வளர்க்கப் போய், இருக்கும் பணத்தையும் இழந்து நடுத்தெருவில் நிற்கும் அவலம் அதிகரித்து வருகிறது. ஒரு நல்ல வாழ்க்கைத்துணையைத் தேடி நாம் மேட்ரிமோனி தளங்களுக்கோ அல்லது டேட்டிங் செயலிகளுக்கோ செல்கிறோம்.
ஆனால், அங்கே காத்திருப்பதோ நம் உணர்வுகளோடு விளையாடி, பணத்தைப் பறிக்கும் ஒரு பெரிய மோசடிக் கும்பல். மத்திய உள்துறை அமைச்சகமே இது குறித்துக் கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளது என்றால், நிலைமை எவ்வளவு மோசமாக இருக்கிறது என்று பார்த்துக்கொள்ளுங்கள்.
வலையில் சிக்குவது எப்படி?
மோசடிக்காரர்கள் போடும் முதல் தூண்டில், 'கவர்ச்சிகரமான புரொஃபைல்'. பார்ப்பதற்கு சினிமா ஹீரோ, ஹீரோயின் போல இருக்கும் புகைப்படங்களை வைப்பார்கள். தங்களை ஒரு பெரிய தொழிலதிபர் என்றோ, வெளிநாட்டில் வேலை பார்க்கும் NRI என்றோ, அல்லது ராணுவ அதிகாரி என்றோ அடையாளப்படுத்திக் கொள்வார்கள்.
இவர்கள் யாரையும் சும்மா தேர்ந்தெடுப்பதில்லை. யாருக்கெல்லாம் நல்ல வேலை, கை நிறையச் சம்பளம், குறிப்பிட்ட வயது இருக்கிறதோ, அவர்களைத் தேடிப் பிடித்து 'ஃபில்டர்' செய்துதான் குறிவைக்கிறார்கள்.
பேச்சு, பழக்கம்... அப்புறம் பண மோசடி!
ஒருமுறை நீங்கள் அவர்களின் வலைக்குள் விழுந்துவிட்டால், அதாவது 'மேட்ச்' ஆகிவிட்டால், உடனே அவர்கள் அந்தத் தளத்தை விட்டு வெளியே வருவார்கள். வாட்ஸ்அப், டெலிகிராம் என்று தனிப்பட்ட முறையில் பேசத் தொடங்குவார்கள். மணிக்கணக்கில் பேசி, உங்கள் மீது அதிக பாசம் இருப்பது போல நடித்து, ஒரு நெருக்கத்தை உருவாக்குவார்கள்.
"வீடியோ காலில் பேசினால் தெரிந்துவிடுமே?" என்று நீங்கள் நினைக்கலாம். அங்கேதான் அவர்கள் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துகிறார்கள். வீடியோ காலில் பேசும்போது கூட, தாங்கள் வெளிநாட்டில் இருப்பது போலவோ அல்லது பெரிய வீட்டில் இருப்பது போலவோ காட்டுவதற்கு, போலி பின்னணிகளை பயன்படுத்துகிறார்கள். இதையெல்லாம் பார்த்து, "நமக்குக் கிடைத்த வாழ்க்கைத்துணை இவர்தான்" என்று நீங்கள் முழுமையாக நம்பும்வரை அவர்கள் நடிப்பார்கள்.
நம்பிக்கை வந்த பிறகுதான், அவர்கள் தங்கள் சுயரூபத்தைக் காட்டுவார்கள். நேரடியாகப் பணம் கேட்க மாட்டார்கள். அதற்குப் பதிலாக, "நான் கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்தேன், எனக்குப் பெரிய லாபம் கிடைத்தது. நீங்களும் போடுங்கள், நம் எதிர்காலத்திற்கு உதவும்" என்று ஆசை காட்டுவார்கள். அல்லது, "எனக்கு ஒரு பெரிய அவசர நிலை வந்துவிட்டது" என்று நாடகமாடுவார்கள். காதலும், நம்பிக்கையும் கண்ணை மறைக்க, நீங்களும் லட்சக்கணக்கில் பணத்தை அவர்களுக்கு அனுப்புவீர்கள். பணம் கைக்கு வந்த மறுகணமே, அந்த 'வருங்காலக் கணவர்' அல்லது 'மனைவி' மாயமாக மறைந்துவிடுவார்கள்.
எனவே, இணையத்தில் வரன் தேடும்போது, கண்ணை மூடிக்கொண்டு யாரையும் நம்பாதீர்கள். நேரில் சந்திக்காமல், அவர்களின் பின்னணியை விசாரிக்காமல், ஒரு ரூபாய் கூட முதலீடு செய்யவோ, அனுப்பவோ கூடாது. உணர்வுகளுக்கு அடிமையாகி, உழைத்த பணத்தை இழக்காதீர்கள். சந்தேகம் இருந்தால், உடனே சைபர் கிரைமில் புகாரளியுங்கள்.