நமது உடம்பில் நாம் பிறந்த பிறகு வளராத உறுப்புகளும் இருக்கின்றன....... இறக்கும் வரை வளரும் உறுப்புகளும் இருக்கின்றன...பார்ப்போமா...
நாம் நம் தாயின் வயிற்றில் இருக்கும் போதே நம்முடைய உறுப்புகள் வளரத் தொடங்கி விடுகின்றன. ஒரு குழந்தை பிறக்கும் போது அதன் எடை சுமார் 2.5 கிலோவிலிருந்து 3.5 கிலோ வரை இருக்கும். வளர வளர எடையும் கூடும். உயரமும் அதிகமாகும். தோலும் தடிமனாகும். ஒவ்வொரு பருவத்திலும் உறுப்புகளில் மாற்றங்கள் ஏற்படும். ஆனால் ஒரு குறிப்பிட்ட வயது வந்தவுடன் நம்முடைய வளர்ச்சி ஒரே லெவலில் இருக்கும். மாற்றம் இருக்காது. எடை மட்டும் ஏறும் அல்லது இறங்கும்.
நம்முடைய உயரமானது 19 வயதிற்கு பிறகு ஏறாது. அதைப் போல பற்களும் தாயின் வயிற்றிலிருக்கும் போதே வளரத் தொடங்கி நான்கு வயதிற்குள் எல்லா பற்களும் முளைத்து விடும். அதற்கு பிறகு பல் முளைக்காது.
ஆனால் நம்முடைய உடம்பில், பிறந்த பிறகு வளராத உறுப்புகளும், இறக்கும் வரை வளரும் உறுப்புகளும் இருக்கின்றன.
பிறந்த பிறகு வளராத உறுப்புகள்:
பிறந்ததில் இருந்து ஒரு குழந்தை எப்படி வளர்கிறதோ அதேபோல நம் உடலில் இருக்கும் உறுப்புகளும் வளரும். ஆனால் நமது உடலில் நாம் பிறந்தது முதல் இறக்கும் வரையில் வளரவே வளராத உறுப்பு நம் கண்கள் தான். ஏனென்றால் அவை நாம் கருவில் இருக்கும் பொழுதே முழுமையாக வளர்ச்சி அடைந்து விடுகின்றன.
அதைப் போல மனித உடல் பாகங்களில் வளர்ச்சியடையாமல் இருப்பது Ossicles என்று அழைக்கப்படும் சிறிய எலும்புகளாகும். நமது உடலில் 3 சிறிய எலும்புகள் இருக்கின்றன. அவை காதின் மையப்பகுதியில் அமைந்துள்ளன. இதைத்தான் செவிப்புல சிற்றெலும்பு என்று அழைப்பார்கள். அவை 3 மில்லிமீட்டர் அளவில்தான் இருக்கும்.
இரண்டு காதுகளிலும் இந்த சிறிய எலும்புகள் இருக்கும். இந்த எலும்புகள் நாம் கருவில் இருக்கும்போது வளர்ச்சி அடைந்து விடும். அதன்பிறகு நாம் இறக்கும் வரை அது வளராது. இன்னும் சொல்லப்போனால் இந்த எலும்புகள் வளர்ந்தால் நமக்கு ஆபத்தை விளைவிக்க கூடும். இந்த 3 எலும்புகள் இல்லையென்றால் நமக்கு காதும் கேட்காது.
இறக்கும் வரை வளரும் உறுப்புகள்:
நாம் சாகும் வரை நம் உடலில் இரண்டு உறுப்புகள் வளர்ந்து கொண்டே இருக்கும். மனித உடலில் சாகும் வரை வளரக்கூடிய உறுப்பு காது மற்றும் மூக்கு தான்.
நமது உடலில் உள்ள இந்த இரண்டு உறுப்புகளின் செல்கள் மட்டும் தொடர்ந்து வளர்ந்து கொண்டே தான் இருக்கின்றன. ஆனால் மற்ற உறுப்புகளின் செல்கள் தங்களது செல்களின் பெருக்கத்தை ஒரு சமயத்தில் நிறுத்திவிடுகின்றன. இதற்கு என்ன காரணம் என்றால், மூக்கு மற்றும் காதுகளில் மெல்லிய செல்கள் உள்ளன. இதனால் தான் இவை தொடந்து வளர்ந்து கொண்டே இருக்கின்றன. நமது உடலில் உள்ள உறுப்புகளில் மூக்கும், காதும் தனித்தன்மை வாய்ந்தவையாகும். இவை மெல்லிய திசுக்களாலும், குறுத்தெலும்புகளாலும் ஆனவை.
எனவே இவை இரண்டும் நாம் வாழும் வரையில் வளர்ந்து கொண்டே இருக்கும். இருபது வயதில் உள்ள ஒருவரின் மூக்கு மற்றும் காதுகளை பார்ப்பதற்கும், 80 வயதில் ஒருவரது காதுகளையும், மூக்கையும் பார்க்கும் போதும் வித்தியாசம் தெளிவாக தெரியும். வயதனாவர்களுக்கு மூக்கும், காதுகளும் பெரியதாக இருப்பதற்கும் இதுவே காரணமாகும். நம் அனைவருக்குமே பொதுவாக கடைசி வரை வளர்ந்து கொண்டே இருப்பது இந்த காதுகளும், மூக்கும் தான்...