
சூரியனின் மேற்பரப்பை ஆய்வு செய்வதற்காக அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசா, கடந்த 2018-ம் ஆண்டு 'ஆகஸ்ட் 12ல் பார்க்கர் சோலார் புரோப்' (Parker Solar Probe) என்ற விண்கலத்தை விண்ணில் செலுத்தியது. சூரியனின் மேற்பரப்பில் ஏற்படும் அதீத வெப்பம், சூரிய புயல் மற்றும் சூரிய துகள்கள் குறித்து ஆய்வு செய்யும் நோக்கில் இந்த விண்கலம் செலுத்தப்பட்டது.
இந்த விண்கலம் மணிக்கு 6 லட்சத்து 92 ஆயிரத்து 300 கிலோ மீட்டர் வேகத்தில் பயணம் செய்தது. இந்த வேகத்தை அடைந்ததன் மூலம் மனிதர்களால் விண்வெளிக்கு அனுப்பப்பட்ட மிக வேகமான பொருள் என்ற சாதனையை இந்த விண்கலம் படைத்தது. இந்த விண்கலத்தின் மேற்பரப்பில் உள்ள கவசமானது 1,427 டிகிரி செல்சியஸ் வெப்பத்தை தாங்கும் திறன் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
இது 2018 அக்டோபர் 29ம் தேதி சூரியனின் மேற்பரப்பில் இருந்து 4.27 கோடி தூரம் என்ற அளவை எட்டியது. அதற்கு முன் 'நாசா' சூரியனை ஆய்வு செய்ய 1974 மற்றும் 1976ம் ஆண்டுகளில் 'ஹீலியோஸ் 1 மற்றும் ஹீலியோஸ் 2' என்ற செயற்கை கோள்களை அமெரிக்காவும், ஜெர்மனியும் கூட்டாக விண்வெளியில் செலுத்தியது.
அப்போது அது சூரியனை 4.3 மில்லியன் கிமீ தொலைவில் இருந்து மட்டுமே ஆராய்ந்தது. இப்படி, சில விண்கலத்தை அனுப்பியிருந்தாலும், சூரியனை இந்தளவுக்கு நெருங்கியதில்லை. அதன் பின்னர் ஒவ்வொரு முறையும் 'பார்க்கர்' விண்கலம் உடனான சூரியனின் தூரம் குறைந்து வந்தது.
இந்த நிலையில், பார்க்கர் விண்கலம் தற்போது சூரியனுக்கு மிக அருகில் சென்று வரலாறு படைத்துள்ளது. அதாவது சூரியனின் மேற்பரப்பில் இருந்து 6.1 மில்லியன் கிலோ மீட்டர் தூரம் வரை பார்க்கர் விண்கலம் சென்றுள்ளது. பூமியில் இருந்து 15 கோடி கிமீ தொலைவில் சூரியன் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த 'பார்க்கர் சோலார் புரோப் ' விண்கலத்திற்கு அந்த பெயர் வந்தது ஒரு சுவாரஸ்யமான கதை. நாசா முதல் முறையாக ஒரு செயற்கை கோளுக்கு உயிருடன் இருக்கும் ஒருவரின் பெயரை வைத்தது. யார் அந்த பார்க்கர்?
சூரியனில் ஏற்படும் புயல்களை பற்றி முதல் முறையாக 65 வருடங்களுக்கு முன்னர் கணித்து கூறிய யூகேன் பார்க்கரின் பெயரையே அந்த விண்கலத்திற்கு பெயராக சூட்டி அவரை பெருமைப்படுத்தியது.
இந்த செயற்கை கோளை தன் 91 வயதில் பார்த்த யூகேன் பார்க்கர், "இந்தியாவில் உள்ள தாஜ்மகாலை விண்வெளியில் பார்த்தது போல இருந்தது"என்று குறிப்பிட்டார்.
மனித வரலாற்றிலேயே இதுவரை சூரியனுக்கு இவ்வளவு நெருக்கமாக சென்ற மனிதர்களால் உருவாக்கப்பட்ட ஒரு பொருள் என்றால் அது இந்த விண்கலம்தான். தற்போது அது சூரியனின் வெளிப்புற பகுதியை புகைப்படம் எடுத்து அனுப்பியுள்ளது. அந்த விண்கலத்தில் இருந்து கிடைத்த தரவுகளை ஆய்வு செய்து வருவதாக நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
"சூரியனுக்கு மிக அருகில் நடத்தப்படும் இந்த ஆய்வில், பார்க்கர் விண்கலம் பல்வேறு அளவீடுகளை எடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அந்த அளவீடுகள், சூரியனை சுற்றியுள்ள பகுதியில் உள்ள வான்பொருட்கள் கோடிக்கணக்கான டிகிரி வரை வெப்பமடைவது எப்படி என்பதை விஞ்ஞானிகள் நன்கு புரிந்துகொள்ள உதவும்.
மேலும் சூரியக் காற்றின் (சூரியனில் இருந்து தொடர்ச்சியாக வெளிப்படும் துகள்கள்) தோற்றத்தைக் கண்டறிய இது உதவும். அதோடு, அதிலிருந்து வெளிப்படும் ஆற்றல் துகள்கள் ஒளி வேகத்திற்குக் கிட்டத்தட்ட ஈடான வேகத்தை எவ்வாறு பெறுகின்றன என்பதைக் கண்டறியவும் உதவும்" என்று நாசா கூறுகிறது.