

பேனா மூடியில் சிறிய துளை இருப்பதற்கான முக்கிய பாதுகாப்பு காரணம், ஒருவர் எதிர்பாராத விதமாக மூடியை விழுங்கும் பொழுது அல்லது தொண்டையில் மாட்டிக்கொள்ளும் பொழுது மூச்சுத்திணறலை தடுப்பதாகும். மூச்சுத்திணறலைத் தடுத்து உயிரைக் காப்பதே இதில் உள்ள முதன்மையான பாதுகாப்பு காரணமாகும்.
உயிர் காக்கும் துளை:
சிறிய குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பலரும் பேனா மூடியை வாயில் கடிப்பதுண்டு. குறிப்பாக குழந்தைகள் பேனா மூடியை வாயில் வைத்து சப்புவது அல்லது கடிக்கும் பழக்கம் உடையவர்கள். அப்போது எதிர்பாராமல் அந்த மூடி தொண்டைக்குள் சென்று காற்றுக்குழாயை அடைத்துக்கொள்ளும் அபாயம் உள்ளது. மூடியின் மேல் சிறிய துளை இருப்பதால், காற்றுக் குழாயில் மூடி மாட்டிக்கொண்டாலும் அந்தத் துளை வழியாக சிறிதளவு காற்று நுரையீரலுக்குச் செல்ல முடியும்.
பேனா மூடி தவறுதலாக தொண்டைக்குள் சென்று மூச்சுக்குழாயில் மாட்டிக்கொள்ள, மூடியின் மேற்புறத்தில் உள்ள சிறிய துளை வழியாகக் காற்று உள்ளேயும் வெளியேயும் செல்ல முடியும். இதனால் மூச்சுக்குழாய் முழுமையாக அடைபடாது.
இது மூச்சு முற்றிலுமாக நின்று விடுவதைத் தடுத்து, மருத்துவ உதவி கிடைக்கும் வரை அந்த நபர் முழுமையாக சுதாரிப்பு இழக்காமல் சிறிது நேரம் மூச்சு விட அந்தத்துளை உதவுகிறது.
மற்ற காரணங்கள்:
சாதாரணமானதாக சிறிய கேள்வி போன்று தோன்றினாலும் இதில் மிகப்பெரிய அறிவியல் இருக்கின்றது. பல்லாயிரம் அடி உயரத்தில் பறக்கும் விமானத்தில், அதன் கண்ணாடியில் இருக்கும் சிறு துளை போன்று ஒரு வேலையை பேனாவின் மூடியில் இருக்கும் சிறு துளையும் செய்கின்றது என்றால் ஆச்சரியமாக இருக்கிறதா? உண்மையில் பேனா என்பது சுவாசிக்கக் கூடிய ஒன்றுதான்.
அதில் நாம் எழுதும் பொழுது தீரும் மை உண்டாக்கும் ஒரு வெற்றிடத்தை வளிமண்டலம் நிரப்புவதற்கு தயாராகும். அந்த சமயம் அந்த வெற்றிடம் அழுத்தத்தை சமன் செய்வதற்காக பேனாவின் மூடியில் சிறு துளை உள்ளது. அதன் வழியாக சிறிய அளவில் காற்று உள்ளே சென்று அழுத்தத்தை சமன் செய்துகொண்டே இருக்கும். இதனால் எழுத்தும் தொய்வின்றி எழுதமுடியும். இல்லையெனில் மையானது ஆங்காங்கே தடைப்பட்டு தள்ளி தள்ளி இருக்கும். உதறி உதறி அல்லது ஊதி எழுத வேண்டியிருக்கும்.
சில நேரங்களில் சின்ன பிள்ளைகளும், ஏன் பெரியவர்களும் கூட ஏதேனும் சிந்திக்கிறோம் என்று அந்தப் பேனா மூடியை வாயால் சப்பி கொண்டிருக்கும் பழக்கம் உண்டு. அப்படி சுவைத்து பழகும் பொழுது சில நேரங்களில் அந்த மூடியில் இருக்கும் துளையானது அடைத்து கொண்டுவிடும். இதனால் பேனா உள்ளிருக்கும் வளிமண்டல குறைபாட்டின் காரணமாக மையானது வெளியேறி நம் சட்டைப் பையை நனைத்து கறையாக்கிவிடும்.
மை ஊற்றி எழுதும் பேனாக்களின் மூடிகளில் ஒரு சிறு துளை இருப்பதைப் பார்க்கலாம். அதேபோல் இப்போது இருக்கும் ரீஃபில் பேனாக்களில் இருக்கும் குறைபாடை களைவதற்காகத்தான் இப்பொழுது ரீஃபில் பேனாக்களின் மூடிகளிலும் துளை பயன்படுத்தப்படுகிறது. ஒருவேளை இந்தத் துளை இல்லாமல் இருந்தால் மூடியினுள் காற்றழுத்தம் அதிகமாகி அதனால் அதில் உள்ள மை வடியத் தொடங்கிவிடும்.
பேனாவை உபயோகித்து விட்டு மூடும்போது அங்குள்ள காற்று வெளியேறும். துளை இல்லாவிடில் வெற்றிடமாகி உள்ளே உள்ள மை மேல்நோக்கி வந்து கசியும். இதைத் தவிர்ப்பதற்காக துளை செய்யப்படுகிறது.
பேனா மூடியை மாட்டும்போது அல்லது எடுக்கும்போது உள்ளேயும் வெளியேயும் உள்ள காற்று அழுத்தம் சமமாக இருக்க உதவுகிறது.
பேனா மூடியை இறுக்கமாக மூடப்படும்போது அதிகப்படியான காற்றழுத்தம் காரணமாக மை வெளியே சிந்துவதைத் தடுக்கிறது.
இந்த விவரங்களை அறிந்துகொள்வதன் மூலம், குழந்தைகள் பேனா மூடிகளை வாயில் வைப்பதால் ஏற்படும் ஆபத்துகளை தடுத்து, அவசர காலத்தில் எவ்வாறு பாதுகாப்பு அளிக்கிறது என்ற அறிவியல் உண்மையையும் மை கசிவு இல்லாத பயன்பாட்டையும் நீங்கள் தெளிவாகப் பெறலாம்.