

புல்லிங் (Bulling) எனப்படும் சக மாணவர்களால் அல்லது மற்றவர்களால் வம்புக்கு இழுக்கப்படுவது, கேலி செய்யப்படுவது அல்லது அச்சுறுத்தப்படுவது பிள்ளைகளின் மனதை ஆழமாகக் காயப்படுத்தும் ஒரு கொடூரமான செயலாகும். இது ஏதோ விளையாட்டாக நடப்பதுபோலத் தோன்றினாலும், ஒரு குழந்தையின் எதிர்காலத்தை சிதைக்கும் வல்லமை கொண்டது.
இது இன்றைய காலகட்டத்தில் பிள்ளைகளின் மனநிலையை மிகக் கடுமையாக பாதிக்கும் ஒரு முக்கிய பிரச்னையாக உருவெடுத்துள்ளது. பள்ளி, விளையாட்டு மைதானம் அல்லது இணைய தளம் என எந்த இடத்திலும் இது நடக்கலாம். பிள்ளைகளின் பிஞ்சு மனதை இந்த புல்லிங் காயப்படுத்தும். எனவே அவற்றிலிருந்து நம் பிள்ளைகளை எப்படி பாதுகாக்கலாம் என்பதை தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம்.
இதனால் பிள்ளைகளின் மனதில் ஏற்படும் பாதிப்புகள்:
சுயமரியாதை இழப்பு:
தொடர்ந்து வம்புக்கு இழுக்கப்படும் பிள்ளைகள் தங்களிடம் ஏதோ குறை இருப்பதாக எண்ணத் தொடங்குவார்கள். தங்களைப் பற்றிய சுயமதிப்பையும் நம்பிக்கையையும் முற்றிலுமாக இழப்பார்கள். தங்களைப் பற்றி தாங்களே தாழ்வாக நினைக்கத் தொடங்குவார்கள். தங்களுக்குள் ஏதோ குறை இருப்பதாக எண்ணி கூனிக்குறுகிப் போவார்கள்.
மன அழுத்தம் மற்றும் பயம்:
பள்ளிக்குச் செல்லவோ, மற்ற பிள்ளைகளுடன் பழகவோ பயப்படுவார்கள். கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாவார்கள். எப்பொழுதும் ஒருவித பதற்றத்துடனும், பாதுகாப்பற்ற உணர்வுடனும் காணப்படுவார்கள்.
படிப்பில் கவனம் குறைதல்:
மனரீதியான அச்சுறுத்தல் காரணமாக எப்போதும் பயத்துடனும், கவலையுடனும் இருப்பதால் அவர்களால் படிப்பில் கவனம் செலுத்த முடியாது. மதிப்பெண்கள் குறைந்து போகும்.
தனிமைப்படுத்தல்:
யாரிடமும் பேசாமல் தங்களைத் தாங்களே ஒரு அறைக்குள் சுருக்கிக்கொள்வார்கள். தங்களுக்கு யாரும் இல்லை என்று நினைத்து, தங்களை மற்றவர்களிடமிருந்து தனிமைப்படுத்திக் கொள்வார்கள். இது நாளடைவில் கடுமையான மனச்சோர்வுக்கு வழிவகுக்கும்.
நம் பிள்ளை புல்லிங் செய்யப்படுகிறாரா என்பதை அறிவதற்கான அறிகுறிகள்:
நம் பிள்ளை புல்லிங் செய்யப்படுகிறார் என்பதை அவர்களின் சில மாற்றங்கள் மூலம் கண்டறியலாம். பிள்ளைகள் தங்களுக்கு நடக்கும் கொடுமைகளை வெளியில் சொல்ல பயப்படலாம். எனவே பெற்றோர்கள் அவர்களின் இந்த மாற்றங்களை கவனிக்க வேண்டும்.
திடீரென்று பள்ளிக்குச் செல்ல மறுப்பது அல்லது பள்ளி என்றாலே அழத்தொடங்குவது, போகமாட்டேன் என்று பிடிவாதம் பிடிப்பது.
அவர்களின் பொருட்கள் (புத்தகம், பேனா, உடைகள்) சேதம் ஏற்படுவது அல்லது அவை அடிக்கடி காணாமல் போவது.
உடலில் காரணமில்லாத காயங்கள், சிராய்ப்புகள் இருப்பது.
உடல் நலக்குறைவு என்று பொய் சொல்லி, யாருடனும் பேசாமல் அமைதியாக அறையிலேயே முடங்கிக்கிடப்பது.
சரியாக சாப்பிடாமல் இருப்பது அல்லது தூக்கத்தில் அலறுவது.
எப்போதும் சோகமாக, கோபமாக அல்லது எரிச்சலாக இருப்பது.
பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் செய்ய வேண்டிய கடமைகள்:
பெற்றோர்கள்:
பிள்ளைகளுடன் தினமும் மனம் விட்டு பேசுவதும், அவர்கள் சொல்வதை பாதியிலேயே தடுக்காமல் முழுமையாக, பொறுமையாக அவர்கள் என்ன சொல்ல வருகிறார்கள் என்பதை கேட்பதும் அவசியம்.
அத்துடன் எந்த சூழ்நிலையிலும், என்ன நடந்தாலும் நான் உன்னோடு எப்போதும் இருக்கிறேன் என்ற நம்பிக்கையை பிள்ளைகளுக்கு பெற்றோர்கள் தர வேண்டியது மிகவும் அவசியம்.
"நீ ஏன் திருப்பி அடிக்கவில்லை? நீ ஏதாவது தப்பு பண்ணியிருப்பாய்" என்று அவர்களைக் காயப்படுத்த வேண்டாம். மாறாக தவறு அவர்கள் மேல் இல்லை என்பதை அவர்களுக்குப் புரிய வையுங்கள்.
எதற்கெடுத்தாலும் குழந்தையைக் குறை கூறாமல், தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க பள்ளியில் ஆசிரியரிடமோ அல்லது பள்ளி முதல்வரிடமோ புகார் அளிக்கலாம்.
தவறான வார்த்தைகளுக்குப் பயந்து ஒதுங்கிப்போகாமல், அதை தைரியமாக எதிர்கொள்ளவும், உடனே பெரியவர்களிடம் புகார் அளிக்கவும் பிள்ளைகளுக்கு கற்றுக்கொடுக்க வேண்டியது மிகவும் அவசியம்.
ஆசிரியர்கள்:
வகுப்பறையில் எந்த ஒரு குழந்தையும் கேலி செய்யப்படுவதை அனுமதிக்கக் கூடாது. புல்லிங் செய்பவர்களுக்கு கடுமையான எச்சரிக்கையும், தேவைப்பட்டால் தண்டனையும் வழங்க தயங்கக் கூடாது. பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு தகுந்த மனநல ஆலோசனை (counselling) வழங்க வேண்டும்.
முக்கியமாக பிள்ளைகளுக்கு நாம் சொல்லிக்கொடுக்க வேண்டியவை:
யாராவது அவர்களைத் தேவையில்லாமல் கேலி செய்தாலோ, அடித்தாலோ பயந்து போய் அழக்கூடாது. அதை தைரியமாக எதிர்த்து நிற்பது அல்லது உடனடியாக ஆசிரியர் மற்றும் பெற்றோரிடம் சொல்வது என்றிருக்க வேண்டும்.
பிள்ளைகளின் மனக்காயம் வெளியில் தெரிவதில்லை. எனவே அவர்களின் நடத்தையில் ஏற்படும் சிறிய மாற்றங்களையும் கவனித்து, ஆரம்பத்திலேயே பேசுவது அவர்களைப் பெரிய மன உளைச்சலில் இருந்து காப்பாற்றும். மற்றவர்களை கேலி செய்வது ஹீரோயிசம் அல்ல. அது ஒரு தவறான குணம் என்பதைப் பிள்ளைகளுக்கு ஆரம்பத்தில் இருந்தே கற்றுக் கொடுக்க வேண்டும்.
உங்கள் குழந்தை பள்ளி அல்லது இணையதளத்தில் மற்றவர்களால் வம்புக்கு இழுக்கப்படுவதையோ, கேலி செய்யப்படுவதையோ முன்கூட்டியே கண்டறிந்து, அவர்களுக்குத் தேவையான மன தைரியத்தையும் பாதுகாப்பையும் வழங்கி முழுமையாக மீட்க முடியும்.