

பெட்ரோல் பங்கில் மொபைல் போன் பயன்படுத்துவதால் பெட்ரோல் பங்க் வெடித்துவிடும் அல்லது தீப்பிடிக்கும் என்பது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்படாத ஒரு கட்டுக்கதையாகும். அமெரிக்காவின் Federal Communications Commission (FCC) மற்றும் பல சர்வதேச ஆராய்ச்சி அமைப்புகள் மொபைல் போன்களால் பெட்ரோல் பங்குகளில் தீ விபத்து ஏற்பட்டதாக எந்த ஒரு ஆதாரமும் இல்லை என்று உறுதிப்படுத்தியுள்ளன.
ஆனால் பாதுகாப்பு காரணங்களுக்காக அங்கு போன் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது உண்மைதான். பெட்ரோல் பங்குகளில் மொபைல் போன்களை பயன்படுத்த வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுவதற்குப் பின்னால் இருக்கும் உண்மையான அறிவியல் மற்றும் நடைமுறைக் காரணங்களைப் பற்றி தெரிந்து கொள்வோம்.
மனித உடலில் உள்ள நிலை மின்சாரம் (Static Electricity):
உண்மையில் பெட்ரோல் பங்குகளில் ஏற்படும் பெரும்பாலான தீ விபத்துகளுக்கு மொபைல் போன்கள் காரணம் அல்ல. நம் உடலில் உருவாகும் நிலை மின்சாரம் தான் காரணம். வாகனத்தில் இருந்து இறங்கும் போதும், உடைகள் மற்றும் இருக்கைகளுக்கு இடையே ஏற்படும் உராய்வாலும் உடலில் நிலை மின்சாரம் தேங்குகிறது.
இந்த நேரத்தில் மொபைல் போனை பாக்கெட்டில் இருந்து எடுக்கும்போது அல்லது பயன்படுத்தும்போது, அந்த நிலை மின்சாரம் சிறிய பொறியாக (Spark) வெளிப்பட்டு, காற்றில் பரவியிருக்கும் பெட்ரோல் ஆவியுடன் (Fuel Vapors) வினைபுரிந்து தீப்பற்ற வாய்ப்புள்ளது.
மொபைல் போன்கள் உள்நிலை பாதுகாப்பு ('Intrinsically Safe') கொண்டவை அல்ல:
சந்தையில் உள்ள சாதாரண மொபைல் போன்கள் உள்நிலை பாதுகாப்பு தொழில்நுட்பத்துடன் வடிவமைக்கப்படுவதில்லை. அதாவது வெடிக்கும் அபாயம் உள்ள வாயுக்கள் நிறைந்த சூழலில் பயன்படுத்துவதற்கு உகந்தவையாக இவை சான்றளிக்கப்படவில்லை.
எனவே ஸ்மார்ட்போன்கள் வெடிக்கும் அபாயம் கொண்டவை அல்ல என்றாலும், அவை வெடிபொருட்கள் நிறைந்த சூழலில் பயன்படுத்துவதற்கு ஏற்ற intrinsically safe (முழுக்க முழுக்க பாதுகாப்பானவை) என்ற சான்றிதழ் பெற்ற சாதனங்கள் அல்ல என்பதால் எதிர்பாராத விதமாக போன் கைதவறி கீழே விழுந்து பேட்டரி கழன்றாலோ அல்லது ஃபோனில் ஏதேனும் உற்பத்தி குறைபாடு இருந்தாலோ அரிதாக சிறிய மின்பொறி உருவாகலாம்.
பெட்ரோல் குழாய்க்கு மிக அருகில் பெட்ரோல் ஆவி அதிகமாக இருக்கும் என்பதால் முன்னெச்சரிக்கையாக இந்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
கவனச் சிதறல்:
பெட்ரோல் பங்க் என்பது தொடர்ந்து வாகனங்கள் வந்து செல்லும் மற்றும் எளிதில் தீப்பற்றக்கூடிய எரிபொருள்கள் கையாளப்படும் ஒரு ஆபத்தான பகுதி. மொபைல் போன் பேசிக் கொண்டோ அல்லது பார்த்துக்கொண்டோ இருக்கும் பொழுது நமது முழு கவனமும் சிதறுகிறது. பெட்ரோல் நிரப்புவது என்பது அதிக கவனம் தேவைப்படும் ஒரு செயலாகும்.
மொபைல் போன் பயன்படுத்தும்போது ஏற்படும் கவனிச்சிதறலால் எரிபொருள் வாகனத்தில் நிரம்பி வழிவதை கவனிக்காமல் விடுவது, வாகனத்தை முறையாக நிறுத்தாமல் இருப்பது அல்லது அங்கு நகரும் பிற வாகனங்களால் விபத்துக்குள்ளாவது போன்ற ஆபத்துகள் ஏற்படுவதற்கு அதிக வாய்ப்புள்ளது. இந்த கவனச் சிதறலை தவிர்க்கவே அங்கு மொபைல் போன் தடை செய்யப்பட்டுள்ளது.
ரேடியோ அலைகள்(Radio Waves):
மொபைல் போன்கள் அழைப்புகளை ஏற்கும் போதும், பேசும்போதும் அதிக ரேடியோ அலைகளை (RF Radiation) வெளியிடுகின்றன. இந்த அலைகள் மிக அரிதான சூழ்நிலைகளில் அங்குள்ள உலோகப் பொருட்களில் சிறிய மின் தூண்டலை ஏற்படுத்த வாய்ப்புள்ளதாகக் கருதப்படுகிறது.
மொபைல் போன் அலைகளால் நேரடியாக பெட்ரோல் தீப்பிடிக்காது என்றாலும், கவனச்சிதறலை தவிர்க்கவும், நிலை மின்சாரத்தால் ஏற்படும் ஆபத்துகளைக் குறைக்கவும் பெட்ரோல் பங்குகளில் மொபைல் போன் பயன்பாடு தடை செய்யப்பட்டுள்ளது.
ஆனால் நவீன பெட்ரோல் பங்குகளில் மொபைல் QR Codeஐ ஸ்கேன் செய்து பணம் செலுத்த அனுமதிக்கிறார்கள். இதற்கு காரணம் பொதுவாக க்யூஆர் கோடுகள் பெட்ரோல் ஆவி அடர்த்தியாக இருக்கும் எரிபொருள் பம்புகளில் இருந்து பாதுகாப்பான தொலைவில் வைக்கப்பட்டிருக்கும்.
மேலும் இணைய பரிவர்த்தனைகளின் பொழுது போனின் கதிரியக்க அளவுகளில் பெரிய மாற்றங்கள் ஏற்படுவதில்லை என்பதால், பாதுகாப்பான தூரத்தில் வைத்து மொபைல் போன் மூலம் பணம் செலுத்துவது விபத்துகளை ஏற்படுத்துவதில்லை.