ஸ்போர்ட்ஸ் பைக் பிரியர்களை சுண்டி இழுக்கும் கான்டினென்டல் GT 650... அப்படி என்ன ஸ்பெஷல்!

continental-gt-650
continental-gt-650
Published on

மார்க்கெட்டில் எத்தனையோ பைக்குகள் வந்து சென்றாலும் ராயல் என்ஃபீல்டு வண்டிகளுக்கு என்றுமே ஒரு தனி மவுசு தான். மைலேஜ் மற்றும் தினசரி பயன்பாட்டை தாண்டி ஒரு பைக் ஓட்டுவதில் உள்ள உண்மையான சுகத்தை முழுமையாக அனுபவிக்க நினைப்பவர்களுக்காகவே பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட ஒரு மாடல் தான் Continental GT 650. 

அறுபதுகளில் மிகவும் பிரபலமாக இருந்த கஃபே ரேஸர் எனப்படும் குறுகிய தூர ரேஸ் பைக்குகளின் டிசைனை கொஞ்சம் கூட பழமை மாறாமல் இன்றைய நவீன தொழில்நுட்பங்களைக் கலந்து ஒரு சூப்பரான பேக்கேஜாக நிறுவனம் வடிவமைத்துள்ளது. சுமார் மூன்றரை லட்சம் ரூபாய் எக்ஸ் ஷோரூம் விலையில் கிடைக்கும் இந்த வண்டியின் தரமான அம்சங்களை பற்றி இந்தப் பதிவில் பார்க்கலாம்.

பவர் மற்றும் இன்ஜின்!

இந்த வண்டியின் இதயமே அதன் பிரம்மாண்டமான இன்ஜின் தான். 648 CC திறன் கொண்ட பேரலல் ட்வின் இன்ஜின் இதில் கொடுக்கப்பட்டுள்ளது. இது கிட்டத்தட்ட 47 PS பவரையும் 52 NM டார்க்கையும் அள்ளிக்கொடுக்கிறது. ஆக்சிலேட்டரை சும்மா லேசாக முறுக்கினாலே வண்டி சீறிப்பாய்ந்து செல்வதை நீங்கள் ஓட்டும் போது நன்றாகவே உணர முடியும். 

இதில் ஆறு ஸ்பீடு கியர் பாக்ஸுடன் ஸ்லிப்பர் கிளட்ச் வசதியும் இருப்பதால் டிராபிக்கில் கியர் மாற்றுவது ஸ்மூத்தாக இருக்கும். அதிக பவர் கொண்ட வண்டியை புதிதாக ஓட்ட பழகுபவர்களுக்கு கூட இது எந்த ஒரு பெரிய சிரமத்தையும் கொடுக்காது. ஹைவேயில் மட்டுமில்லாமல் சிட்டி நெரிசலிலும் அடிக்கடி கியரை குறைக்க வேண்டிய அவசியம் இதில் இருக்காது.

ஸ்போர்ட்டியான டிசைன்!

பழைய காலத்து பைக் போன்ற ஒரு அட்டகாசமான கிளாசிக் லுக்கில் இந்த மாடல் பலரையும் ஆச்சரியப்படுத்துகிறது. இதன் ஹேண்டில் பார் கொஞ்சம் தாழ்வாகவும் கால்களை வைக்கும் ஃபுட்பெக் சற்று பின்னோக்கியும் அமைக்கப்பட்டிருக்கும். இதனால் பைக் ஓட்டுபவர் வண்டியோடு ஒன்றி சற்று முன்னோக்கி சாய்ந்து அமரும்படி ஒரு பக்கா ஸ்போர்ட்டி பீல் கிடைக்கும். 

காற்றின் எதிர்ப்பை கிழித்துக்கொண்டு அதிவேகமாக பயணிக்க இந்த ஏரோடைனமிக் டிசைன் உதவும். பார்க்க மிகவும் கனமாக தெரிந்தாலும் இதன் சீட் உயரம் வெறும் 804 மில்லிமீட்டர் தான் என்பதால் நடுத்தர உயரம் கொண்டவர்கள் கூட இதை ரொம்ப ஈஸியாக பேலன்ஸ் செய்து ஓட்டிவிட முடியும்.

இதையும் படியுங்கள்:
பால் உற்பத்தியின் தொடக்கமும் அதன் நவீன மாற்றங்களும்!
continental-gt-650

நவீன வசதிகள் & பாதுகாப்பு!

ஹாரிஸ் பெர்ஃபார்மென்ஸ் நிறுவனம் உருவாக்கிய மிக உறுதியான ஸ்டீல் பிரேமில் இந்த பைக் நேர்த்தியாக கட்டமைக்கப்பட்டுள்ளது. வண்டியின் ஒட்டுமொத்த எடை 214 கிலோவாக இருந்தாலும் ஒருமுறை வண்டி நகர ஆரம்பித்துவிட்டால் அந்த எடையே நமக்கு சுத்தமாக தெரியாது. அதிக வேகத்தில் சென்றாலும் வண்டி துளி கூட அதிர்வு இல்லாமல் தரையோடு தரையாக ஒட்டிக்கொண்டு சீராக செல்லும். 

பாதுகாப்பைப் பொறுத்தவரை முன்புறம் 320 மில்லிமீட்டர் மற்றும் பின்புறம் 240 மில்லிமீட்டர் அளவிலான டிஸ்க் பிரேக்குகள் உள்ளன. இத்துடன் டூயல் சேனல் ஏபிஎஸ் வசதி இருப்பதால் எதிர்பாராத நேரங்களில் சடன் பிரேக் போடும்போது வண்டி சறுக்காமல் இருக்க இது ஒரு மாபெரும் அரணாக செயல்படுகிறது.

பழமையான தோற்றம் என்றாலும் வாடிக்கையாளர்களைக் கவர LED ஹெட்லைட், மொபைல் சார்ஜிங் போர்ட் என ஏகப்பட்ட மாடர்ன் வசதிகள் இதில் புகுத்தப்பட்டுள்ளன. ஸ்பீடோமீட்டரை பொறுத்தவரை அனலாக் மற்றும் டிஜிட்டல் கலந்த இரட்டை டயல் டிசைன் கொடுக்கப்பட்டுள்ளது. டயர்களில் ஸ்போக் மற்றும் டியூப்லெஸ் அலாய் வீல் என உங்களின் விருப்பத்திற்கு ஏற்ப இரண்டு ஆப்ஷன்கள் கிடைக்கிறது. 

இதையும் படியுங்கள்:
தள்ளு வண்டியில் தட்டு வடை!
continental-gt-650

இந்த வண்டியில் அதிகபட்சமாக மணிக்கு சுமார் 169 கிலோமீட்டர் வேகம் வரை பறக்க முடியும். இவ்வளவு பவர் கொண்ட வண்டியில் 25-27 கிலோமீட்டர் மைலேஜ் கிடைப்பது உண்மையிலேயே ஒரு பெரிய விஷயம் தான். சுருக்கமாகச் சொல்லப்போனால் பைக் ஓட்டுவதை ஒரு காதலாகவே நினைத்து ரசித்து ஓட்டுபவர்களுக்கு இந்த வண்டி நிச்சயம் ஒரு பெரிய வரப்பிரசாதம் தான்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com