

"பாட்டி நான் இப்போது அலுவலகத்தில் இருக்கிறேன். நீங்கள் கவலைப்படாமல் இருங்கள். உங்களுக்கு மருந்து சாப்பிட வேண்டிய நேரம் வந்ததும் உங்கள் மொபைல் போன் நினைவூட்டி விடும்" என்று பேரன் கூறினான். சில நிமிடங்களில் மொபைல் போனில் மணி ஒலித்தது "மருந்து எடுத்துக்கொள்ள வேண்டிய நேரம்"என்ற அறிவிப்பு வந்தது.
பாட்டி ஒரு மெலிதான புன்னகையுடன் மருந்தை எடுத்துக் கொண்டார் . "இப்போது இந்த மொபைல் எனக்கு எவ்வளவு உதவி செய்கிறது"என்று மகிழ்ச்சியாக கூறினார். சில ஆண்டுகளுக்கு முன்பு இது கற்பனையாகத் தோன்றி இருக்கலாம். ஆனால் இன்று செயற்கை நுண்ணறிவு AI தொழில்நுட்பத்தின் உதவியால் இது போன்ற வசதிகள் நம் அன்றாட வாழ்க்கையின் ஒரு பகுதியாக மாறிவிட்டன. குறிப்பாக மூத்த குடிமக்களின் வாழ்க்கையை எளிதாகவும் பாதுகாப்பாகவும் தன்னம்பிக்கையுடனும் மாற்றுவதில் AI பயன்பாடு முக்கிய பங்கு வகிக்கிறது.
செயற்கை நுண்ணறிவு AI என்பது இளைஞர்களுக்கு மட்டும் அல்ல மூத்த குடிமக்களுக்கும் வாழ்க்கையை எளிதாக்கும் ஒரு பயனுள்ள தொழில்நுட்பமாக மாறி வருகிறது. இதை பயன்படுத்துவதற்கு கணினி நிபுணராக இருக்கவேண்டிய அவசியமில்லை.
குரல் மூலம் கேள்விகளைக் கேட்டு தகவல்களை பெறுவது, தங்களுக்கு புரியும் மொழியில் பதில்களை அறிந்துகொள்வது, புதிய விஷயங்களை கற்றுக்கொள்வது போன்ற பல வசதிகள் இன்று கிடைக்கின்றன.
தனிமையில் வாழும் முதியவர்களுக்கு உரையாடல் துணையாகவும் தினசரி தேவைகளை நினைவூட்டும் உதவியாளராகவும் AI செயல்படுகிறது. இருப்பினும் தனிப்பட்ட தகவல்கள், வங்கிக் கணக்கு விபரங்கள், கடவுச்சொற்கள் போன்றவற்றை எந்த AI செயலியிலும் பகிரக்கூடாது என்பதில் விழிப்புணர்வோடு இருக்க வேண்டும். சரியான முறையில் பயன்படுத்தினால் மூத்த குடிமக்களின் சுயசார்பையும் வாழ்க்கை தரத்தையும் மேம்படுத்தும் சிறந்த கருவியாக AI அமையும்.
சரி மூத்த குடிமக்கள் இந்த AIஐ எப்படி எல்லாம் பயன்படுத்தலாம் என்று பார்ப்போம். உதாரணமாக சமையல் குறிப்புகள், உடற்பயிற்சி ஆலோசனைகள், பழைய திரைப்பட பாடல்கள், புத்தக சுருக்கங்கள், செய்திகளின் விளக்கங்கள் போன்றவற்றை எளிதாக பெறலாம்.
ஆங்கிலத்தில் வரும் தகவல்களை தமிழில் மொழி பெயர்த்துப் புரிந்து கொள்ளலாம். குடும்பத்தினருக்கு அனுப்பவேண்டிய செய்திகளை எழுத உதவிபெறலாம். புதிய தொழில் நுட்பங்களைக் கற்றுக் கொள்வதற்கும், பொழுது போக்கிற்கும், அறிவை வளர்த்துக் கொள்வதற்கும் AI ஒரு நல்ல துணையாக இருக்கும். ஆனால் மனித உறவுக்கு மாற்றாக அல்ல. வாழ்க்கையை எளிமையாக்கும் ஒரு உதவியாளராக இதை பயன்படுத்துவது சிறந்தது.
வயது என்பது புதிய விஷயங்களைக் கற்றுக்கொள்ள தடையில்லை. சரியான முறையில் பயன்படுத்தப்படும் இந்த AI மூத்த குடிமக்களின் அனுபவத்துடன் இணைந்து அவர்கள் வாழ்க்கையை எளிதாக மாற்றும் நல்ல துணையாக அமையும். அதனால் இதை அச்சத்துடன் அணுகாமல் ஆர்வத்துடன் கற்றுக்கொள்ள துவங்கினால் புதிய உலகம் ஒன்று அவர்களுக்காக திறக்கும். சரியான வழிகாட்டுதலுடன் பாதுகாப்பான பயன்பாட்டுடனும் AI செயல்படும் என்பதில் ஐயமில்லை.
இன்று பல மூத்த குடிமக்கள் AIஉதவியுடன் ரயில், விமான டிக்கெட்டுகளை முன்பதிவு செய்கின்றனர். மொழிபெயர்ப்பு வசதி மூலம் தங்களுக்கு புரியும் மொழியில் தகவல்களைப் பெறுகின்றனர். மின் கட்டணம் செலுத்துதல், வீடியோ அழைப்புகள் போன்றவற்றையும் எளிதாக மேற்கொள்ளுகின்றனர்.
அதில் யோகா கற்றுக்கொள்ளலாம். ஆன்மீக உரைகள் தோட்டக்கலை போன்ற விருப்பமான தலைப்புகளை எளிதாக ஆராயலாம்.
பல மூத்த குடிமக்கள் தங்கள் வாழ்க்கை அனுபவங்களை எழுத்து வடிவில் பதிவு செய்ய விரும்புகிறார்கள். AI அதற்கும் சிறந்த உதவியாளராக உள்ளது. அவர்கள் கூறும் கருத்துகளை ஒழுங்குபடுத்தி அவர்கள் அனுபவங்களை பதிவு செய்ய உதவி செய்கிறது. புதிய சொற்களின் பொருள் அறிதல், சந்தேகங்களுக்கு உடனடி விளக்கம் பெறுதல், பயணத்திட்டங்களை அமைத்தல் போன்ற வற்றிலும் AI பயனுள்ளதாக இருக்கிறது. குடும்ப உறுப்பினர்களின் சிறிய உதவியுடன் இதை பயன்படுத்த கற்றுக் கொண்டால் தொழில்நுட்ப உலகம் மூத்த குடிமக்களுக்கும் எளிதில் அணுகக்கூடியதாக மாறும்.
AI என்ற பெயரைக் கேட்டவுடன் பல முதியோர்கள் இது மிகவும் சிக்கலான தொழில்நுட்பம் என்று நினைக்கலாம். உண்மையில் இது நம்முடைய கேள்விகளுக்குப் பதில் சொல்லும், தகவல்களைத் தேடித்தரும், ஒரு புத்திசாலித்தனமான உதவியாளர் போன்றது. ஒரு காலத்தில் மொபைல் போன் பயன்படுத்துவதற்கே தயங்கிய பலர் இன்று அது இல்லாமல் தாங்கள் இல்லை என்று ஆகிவிட்டார்கள். அதுபோலவே சிறிது ஆர்வமும் பயிற்சியும் இருந்தால் AIஐ எளிதாக பயன்படுத்த முடியும்.
எதில் எச்சரிக்கையாக இருக்கவேண்டும்?
இணைய மோசடிகள் குறித்து விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். OTP, வங்கி கடவுச்சொல் போன்ற தனிப்பட்ட தகவல்களை பகிரக் கூடாது. AI வழங்கும் தகவல்களை நம்பகமான ஆதாரங்களுடன் ஒப்பிட்டு உறுதிப் படுத்துவது நல்ல பழக்கமாகும். இதைப் பின்பற்றி AIஐ பயன்படுத்தினால் அனைவருக்கும் குறிப்பாக மூத்த குடிமக்களின் அன்றாட வாழ்க்கையை எளிதாக்கும் பல வசதிகளை AI கண்டிப்பாக வழங்கும்.