

காரம் உண்மையில் சுவை அல்ல; கெமிசிஸ்டிசிஸ் எனப்படும் வேதியியல் உணர்வு. மிளகாயில் உள்ள கேப்சைசின் TRPV1 ஏற்பிகளை ஏமாற்றி தீக்காயம்போல உணர்வு தருகிறது. இதனால் உடல் தற்காப்பாக வியர்வை, மூக்குநீர், கண்ணீர் வெளியேற்றுகிறது. கேப்சைசின் தண்ணீரில் கரையாததால் பால், மோர் குடிப்பதே நிவாரணம்; பறவைகள் TRPV1 வேறுபாட்டால் காரத்தை உணராது.
சுவைகளில், கார உணவுகள், காரம் என்பது ஒரு வித்தியாசமான அனுபவம் தரும் சுவை. சுடச்சுட ஒரு வாய் மிளகாய் பஜ்ஜியோ அல்லது மணக்கும் காரசாரமான பிரியாணியோ சாப்பிடும்போது, நம் உடலில் திடீரென ஒரு பெரிய மாற்றமே நிகழும்.
நாக்கில் ஒருவித எரிச்சல், வழியும் வியர்வை, மூக்கில் நீர் வழிவது மற்றும் கண்களில் கண்ணீர் என எல்லாமே ஒன்றாக ஏற்படும்.
காரத்திற்கும் உடலில் ஏற்படும் இந்த திடீர் மாற்றத்திற்கும் என்ன சம்பந்தம்? காரம் என்பது உணவின் சுவையா அல்லது உடலில் ஏற்படும் வலி போன்ற உணர்வா? இதோ அதற்கான சுவாரஸ்யமான அறிவியல் காரணங்களை இந்தக் கட்டுரையில் பார்க்கலாம்.
1. காரம் ஒரு 'வேதியியல் உணர்வு':
நமது நாக்கில் இனிப்பு, புளிப்பு, கசப்பு, உப்பு ஆகிய அடிப்படை சுவைகளை உணரத் தனித்தனி ஏற்பிகள் (Receptors) உள்ளன. ஆனால், காரம் என்பது உண்மையில் சுவை இல்லை.
அறிவியல் ரீதியாக காரம் என்பது 'கெமிசிஸ்டிசிஸ்' (Chemesthesis) எனப்படும் வேதியியல் உணர்வாகும். அதாவது, உணவில் உள்ள வேதிப்பொருட்கள் நமது சருமத்தில் அல்லது சவ்வுகளில் உள்ள நரம்புகளை நேரடியாகத் தூண்டுவதால் மட்டுமே இந்த உணர்வு ஏற்படுகிறது.
2. மூளையை ஏமாற்றும் 'கேப்சைசின்':
மிளகாய் மற்றும் மிளகாய்த்தூளில் இருக்கும் காரத்திற்கு முக்கிய காரணம் 'கேப்சைசின்' (Capsaicin) என்ற நிறமற்ற, வாசனையற்ற வேதிப்பொருள் ஆகும்.
நாம் காரமான ஒன்றைச் சாப்பிடும்போது, இந்த கேப்சைசின் மூலக்கூறுகள் நமது நாக்கில் உள்ள TRPV1 (Transient Receptor Potential Vanilloid 1) என்ற பிரத்யேக நரம்பு ஏற்பிகளுடன் இணைக்கப்படுகின்றன.
இந்த TRPV1 ஏற்பிகளின் முக்கிய வேலை, 42°C வெப்பத்திற்கு மேல் உடல் வெப்பம் அதிகரிக்கும்போதோ அல்லது தீக்காயம் ஏற்படும்போதோ நம்மை எச்சரிப்பதாகும்.
ஆனால், கேப்சைசின் வெப்பம் இல்லாவிட்டாலும் TRPV1 ஏற்பிகளைச் செயல்படுத்துவதால், மூளை அதை எரிச்சல் அல்லது அதிக வெப்பமாகப் புரிந்துகொள்கிறது.
மூளைக்கு இந்தப் போலி எச்சரிக்கை சென்றடைந்ததும், உடல் உடனடியாக தற்காப்பு நடவடிக்கைகளில் இறங்குகிறது.
நாம் நிஜமாகவே நெருப்பில் சிக்கி வியர்ப்பது போல, உடல் வெப்பத்தைக் தணிக்க உடனே வியர்வையை வெளியேற்றுகிறது.
சருமப் பகுதிகளுக்கு இரத்த ஓட்டத்தை அதிகரித்து, உடல் வெப்பத்தை வெளியேற்ற முயல்கிறது. மூச்சுக்குழாய் மற்றும் நாசிப்பாதைகளில் உள்ள சவ்வு செல்கள் அதிகப்படியான திரவத்தைச் சுரப்பதால், மூக்கு ஒழுகுதல் மற்றும் கண்ணீர் வருதல் நிகழ்கிறது.
எரிச்சல் தந்தாலும், உலகெங்கிலும் உள்ள மக்கள் காரமான உணவுகளை விரும்பி உண்பதற்குக் காரணம் அதன் பின்னணியில் உள்ள அற்புதமான உளவியல் தான்.
காரம் கடுமையான வலியைத் தூண்டும்போது, நமது மூளை அந்த வலியைச் சமாளிக்க எண்டார்பின் (Endorphins) மற்றும் டோபமைன் (Dopamine) போன்ற மகிழ்ச்சியைத் தரும் ஹார்மோன்களை ரத்தத்தில் வெளியிடுகிறது.
இது ஒரு வகையான உற்சாகத்தைத் தந்து, ரோலர் கோஸ்டர் சவாரி செய்ததைப் போன்ற ஒரு குதூகலத்தையும் புத்துணர்ச்சியையும் நமக்குத் தருகிறது.
இன்னொரு சுவாரஸ்யமான தகவல் என்னவென்றால் காரம் அதிகமாகிவிட்டால் தண்ணீர் குடித்தால் காரம் குறையாது; ஏனெனில் கேப்சைசின் தண்ணீரில் கரையாது, அது ஒரு எண்ணெய் போன்ற பொருள். கடுமையான காரத்திற்குப் பதிலாக பால் அல்லது மோர் குடிப்பது சிறந்தது. ஏனெனில், பாலில் உள்ள Casein என்ற புரதம் கேப்சைசின் மூலக்கூறுகளைப் பிடித்து வெளியேற்றி உடனடி நிவாரணம் தரும்.
மேலும், பறவைகளுக்கு மிளகாய் காரமாகத் தெரியாது. காரணம், அவற்றின் TRPV1 ஏற்பிகள் கேப்சைசினுக்கு மனிதர்களைப் போல பதிலளிக்காது. இதனால் பறவைகள் மிளகாயை எந்த எரிச்சலும் இல்லாமல் சாப்பிடுகின்றன. இது மிளகாய் விதைகள் பரவுவதற்கும் உதவுகிறது.
இந்தக் கட்டுரையை வாசிப்பதன் மூலம், உணவின் சுவைக்குப் பின்னால் இருக்கும் வியக்கவைக்கும் உடலியல் ரகசியங்களை அறிந்துகொள்ளலாம்.