

பண்டிகை பலகாரங்கள் ஆகட்டும், நொறுக்குத் தீனி என்று எடுத்துக்கொண்டாலும், உறவினர் வீட்டு விசேஷங்களுக்குக் கொண்டு செல்வதாக இருந்தாலும் அனைவரும் அலுக்காமல் சலிக்காமல் செய்வது முறுக்கைதான். பாரம்பரிய முறுக்கு உரல் (Murukku Press / Sev Maker) என்பது எளிமையான சமையலறைக் கருவியாகத் தோன்றினாலும், அதன் பின்னால் இயற்பியல் மற்றும் பொறியியல் தத்துவங்கள் (Physics & Mechanical Engineering Principles) மிக நுணுக்கமாகச் செயல்படுகின்றன. அது செயல்படும் விதத்தைப் பற்றி இப்பதிவில் காண்போம்!
எளிய எந்திரங்களின் தொகுப்பு: முறுக்கு உரலில் இரண்டு முக்கிய எளிய எந்திரங்கள் இணைந்து செயல்படுகின்றன.
திருகு (Screw Mechanism) : முறுக்கு உரலில் மாவைப்போட்டு சுழற்றிப் பிழியும் வகை உரல்களில் (Screw-type press), கைப்பிடியைச் சுற்றும்போது அதன் நடுவில் உள்ள மரையாணி (Threaded Rod) சுழன்று, சுழற்சி இயக்கத்தை (Rotational Motion) நேர்க்கோட்டு இயக்கமாக (Linear Motion) மாற்றி மாவைக் கீழ்நோக்கித் தள்ளுகிறது. திருகின் மரைகள் (Threads) குறைந்த விசையில் அதிக அழுத்தத்தை உருவாக்கும் இயந்திர இலாபத்தை (Mechanical Advantage) தருகின்றன.
நெம்புகோல் (Lever Mechanism): முறுக்கு உரலில் மாவைப்போட்டு அழுத்திப் பிழியும் வகை உரல்களில் (Lever-type / Gun-type press), இரண்டாம் வகை நெம்புகோல் தத்துவம் செயல்படுகிறது. கைப்பிடியில் நாம் கொடுக்கும் சிறிய விசை, பன்மடங்கு அழுத்தமாக மாறி உலக்கையை (Piston) கீழ்நோக்கித் தள்ளுகிறது.
இதில் முக்கியமாக செயல்படுவது "பாஸ்கல் விதி"யாகும். பாஸ்கல் விதி என்ன என்பதை தெரிந்துகொள்வோம்:
"ஒரு மூடிய பாத்திரத்தில் உள்ள திரவத்தின் (அல்லது வாயுவின்) ஏதேனும் ஒரு பகுதியில் செலுத்தப்படும் அழுத்தம், அந்தத் திரவத்தின் அனைத்துப் பகுதிகளுக்கும் சமமாகவும் எந்தக் குறைவும் இன்றியும் முழுமையாகப் பரவச் செய்யப்படுவதுதான்" பாஸ்கல் விதி என்பது.
ஒரு பலூனில் நீரை நிரப்பி அதில் ஊசியால் சிறு சிறு துளை இட்டு அந்த பலூனை எந்த பக்கத்தில் அழுத்தினாலும் அந்த ஓட்டைகளின் வழியாக ஒரே சீராக தண்ணீர் வெளியேறுவதைத்தான் பாஸ்கல் விதி என்கிறோம். பலூனின் எந்தப்பகுதியில் அழுத்தினாலும், அந்த அழுத்தம் பலூனில் உள்ள எல்லாத் தண்ணீருக்கும் சமமாகப் பகிர்ந்தளிக்கப்படுவதை இது காட்டுகிறது. முறுக்கு பிழியும் பொழுதும் அந்த ஓட்டைகளின் வழியாக இதுதான் நடைபெறுகிறது.
முறுக்கு மாவு என்பது திடப்பொருளும் அல்லாத, நீர்மமும் அல்லாத இரண்டும் கலந்த ஒரு பசைத்தன்மை கொண்ட ஒரு பிசு பிசுப்பானபொருள். (Viscoelastic Non-Newtonian Fluid). வறுத்து அரைத்த உளுந்து மாவு அல்லது பொட்டுக்கடலை மாவில் உள்ள புரதங்களும் (Proteins), கரையக்கூடிய நார்ச்சத்துக்களும் தண்ணீருடன் சேரும்போது ஒரு மெல்லிய பிசின் போன்ற பிணைப்பை (Cohesive Matrix) உருவாக்குகின்றன. இது அரிசி மாவுத் துகள்களை ஒன்றோடு ஒன்று இறுக்கமாகப் பிடித்துக்கொள்கிறது.
இப்படிப் பிடித்துக்கொண்ட அந்த பிசுபிசுப்பான பசை போன்ற மாவுப் பொருளைத்தான் நாம் உருளைக்குள் வைத்து, உருளைக்குள் (Cylinder) உள்ள மாவின் மீது உலக்கையை வைத்து அழுத்துகிறோம். அந்த உலக்கை அழுத்தத்தைக் கொடுக்கும்போது, பாஸ்கல் விதியின்படி (Pascal's Principle) அந்த அழுத்தம் மாவின் அனைத்துப் பகுதிகளுக்கும் சமமாகப் பரவுகிறது.
இதனால் கீழே உள்ள அச்சின் (Die/Plate) சிறிய துளைகள் வழியாக மாவு வெளியேறும்போது 'பிழிதல்' (Extrusion) என்ற தொழிற்சாலையின் உற்பத்தித் தொழில்நுட்பம் நடைபெறுகிறது. சிறிய துளை வழியாக மாவு வெளியேறும்போது அதன் திசைவேகம் (Velocity) அதிகரித்து, அச்சின் வடிவத்திற்கு ஏற்ப ஒரே சீரான தடிமனில் நீளமாக முறுக்கு வெளிவருகிறது.
பொருள் அறிவியல் மற்றும் வெப்பக் கடத்தல்:
பாரம்பரியமாக முறுக்கு உரல்கள் பித்தளை (Brass) அல்லது மரத்தால் (Wood) செய்யப்படுகின்றன. (முன்பெல்லாம் இரும்பில் இருந்தது. பின்னர் இண்டாலியத்தில் வந்தது. இப்பொழுது அதை யாரும் பயன்படுத்துவதில்லை. )
பித்தளை உரல்கள் அதிக அழுத்தத்தைத் தாங்கும் வலிமை (Tensile Strength) கொண்டவை என்பதாலும்; எளிதில் துருப்பிடிக்காதவை மற்றும் மாவு ஒட்டாமல் வழுக்கிச்செல்லும் தன்மை கொண்டவையாக இருப்பதாலும், குறிப்பாக பராமரிக்க எளிது என்பதால் அதை நாம் அனைவரும் பயன்படுத்த ஆரம்பித்து விட்டோம் என்றுதான் நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் உண்மையான காரணம் என்னவென்றால்,
மர உரல்கள் தேக்கு அல்லது பலா மரங்களில் செய்யப்படுவை என்பதால் வெப்பத்தைக் கடத்தாதவை . இதனால் அந்த உரல்களை, சூடான எண்ணெய்க்கு மேலே வைத்துப் பிழியும்போது கைகளுக்குச் சூடு பரவாமல் பாதுகாக்கின்றன. இதுதான் வெப்ப கடத்தல் செய்யும் வேலை.
வடிவியல் மற்றும் மேற்பரப்பு பரப்பளவு:
அடுத்து முறுக்குக்கு வடிவம் ஏன் முக்கியம் என்று பார்த்தால், அது அறிவியலின் ஆழமான சிந்தனையைத் தூண்டுகிறது.
முறுக்கு அச்சுகளில் உள்ள நட்சத்திர வடிவம் (Star-shaped die) அல்லது பல துளைகள் கொண்ட தேன்குழல் அச்சு போன்றவை வெறும் அழகிற்காக மட்டும் உருவாக்கப் பட்டவை அல்ல. நட்சத்திர வடிவ விளிம்புகளில் இருந்து அனைத்து அச்சுகளின் விளிம்புகளும் மாவின் மேற்பரப்பு பரப்பளவை (Surface Area) அதிகரிக்கின்றன. இதனால் முறுக்கை எண்ணெயில் போடும்போது, வெளிப்புறமும் உட்புறமும் வெப்பம் விரைவாகவும் சீராகவும் ஊடுருவி, முறுக்கு நன்கு மொறுமொறுப்பாக வேக உதவுகின்றது.
ஆக இந்த 4 அறிவியல் தொழில்நுட்ப விஷயங்கள்தான் முறுக்கு உரல் ஒரு எளிமையான சமையலறை கருவியாக தோன்றினாலும் மிக நுணுக்கமாக செயல்பட்டு நம்மை வியப்பில் ஆழ்த்தி வேலையை எளிதாக்கி தருகிறது என்பதை இதைப் படிப்பவர்கள் புரிந்துகொள்ளலாம்.