

சந்திரனை நாம் தெரிந்து வைத்திருக்கும் அளவுக்கு சந்திரனின் இயக்கங்களை பற்றி அறிந்து கொள்ளவில்லை. அதன் இயக்கங்களை சார்ந்தவையே வளர்பிறை நிலவும், தேய்பிறை நிலவும். பிறைச்சந்திரனை நாம் பார்க்கிறோம். அதன் அழகிலேயே ஈடுபட்டு மகிழ்ந்து அதை போற்றுவதும், புகழ்வதுமாக இருக்கிறோம். நாம் பிறை சந்திரனின் ரசிகர்கள் என்பது உண்மையே. பிறையைப் பற்றியும் அதன் இலக்கணங்களை பற்றியும் நாம் தெரிந்து கொள்வது தானே நமது அறிவு வளர்ச்சிக்கு தூண்டுதலாகும். அதைப் பற்றி தெரிந்து கொள்வோம் இப்பகுதியில்.
தேய்பிறையையும் பார்க்கிறோம்; வளர்பிறையையும் பார்க்கிறோம். இவற்றில் எது தேய்பிறை, எது வளர்பிறை என்று எவ்வாறு கண்டுபிடிப்பது? தேய்பிறையில் நல்ல காரியங்களை செய்யக்கூடாது. வளர்பிறையில் தான் நல்ல காரியங்களை செய்யலாம் என்று சொல்லிக் கொடுத்த பாடம் நமக்கு பசுமரத்தாணி போல் பதிந்து உள்ளது.
பிறை நிலவை நாம் பார்க்கிறோம். அதன் இரண்டுக்கும் இடையே உள்ள வேறுபாடுகளை தெரிந்து கொண்டால் தானே அவற்றை அடையாளம் காண முடியும்.
வளர்பிறை, தேய்பிறை இவற்றின் வளைவுகள் எதிர்த் திசைகளில் இருக்கும். பூமியின் வடபாதியில் வளர்பிறை தோன்றினால் பிறை முனைகளைச் சேர்க்கும் நேர்கோட்டுக்கு வலப்புறத்திலும் தேய்பிறையானால் இடது புறமும் இருக்கும்.
தேய்பிறை, வளர்பிறைகளின் வடிவங்களை அறிந்து கொள்வதற்கு பிரெஞ்சுக்காரர்களும், ஜெர்மனியரும் எழுத்துக்களுடன் தொடர்பு படுத்தும் நினைவு குறிப்புகளை வைத்திருந்தனர். ஆனால் இந்த குறிப்புகள் எல்லா இடங்களுக்கும் பொருந்தாது. பூமியின் வடபாகத்திற்கு மட்டுமே பொருந்துவதாக உள்ளது.
மேற்கூறிய நினைவு குறிப்புகளின் விதிகளுக்கு நேர்மாறான நிலையை ஆஸ்திரேலியாவிலும் டிரான்ஸ்வாலிலும் காண முடியும். பூமியின் வடபாதியையே எடுத்துக் கொள்வோம். அதன் தென் அட்சரேகைக்கு மேலே குறிப்பிட்ட விதிமுறைகள் பொருந்தாது.
கிரிபியாவிலும், ட்ரான்ஸ்கா சேஷியாவிலும் பிறையை நாம் பார்த்தால் அது மிகவும் சாய்ந்து இருப்பது புலப்படும். இன்னும் தெற்கே சென்றால் அங்கு பிறை தனது பக்கவாட்டில் படுத்து இருப்பது போல் தோன்றும். பூமத்திய ரேகை அருகில் அது படகை போல் தோன்றும்; ஒளிமிக்க ஆர்ச் போல இருக்கும் என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.
ஆக, பிரெஞ்சுகாரர்களும், ஜெர்மனியரும் தயாரித்து வைத்திருந்த நினைவு குறிப்புகளின் விதிமுறைகள் இப்படி எல்லா இடங்களுக்கும் பயன்படாது என்பதை இதிலிருந்து தெரிந்து கொள்ளலாம். வானவியல் அடையாளங்களைக் கொண்டே நாம் பிறை பற்றி தெரிந்து கொள்ள வேண்டும். ஒரு பொதுவான இயற்கை விதியை நாம் கவனத்தில் வைத்துக் கொள்ளலாம்.
வளர்பிறை நிலவை மாலை வேளைகளில் மேலை வானத்தில் பார்க்கலாம். தேய்பிறை நிலவை அதிகாலை வேளையில் கீழ் வானத்தில் காணலாம். சூரியனிடமிருந்து தான் சந்திரன் ஒளியைப் பெறுகிறது. அந்த ஒளிக்கதிர்கள் பிறையின் முனைகளை சேர்க்கும் நேர்கோட்டுக்கு செங்குத்தாகவே இருக்கும். ஆனால் நாம் நேர்கோட்டைப் பார்க்கவில்லை. நாம் வளைவு கோட்டையே பார்க்கிறோம்.
அடுத்ததாக நாம் நடந்து கொண்டே நிலவைப் பார்க்கும் போது நிலவு நம்மோடு வருவது போல் தெரிகிறதே அது ஏன்? என்ற கேள்வி நமக்குள் எழுதுவது நியாயமே.
அதற்கான காரணம் என்னவென்றால் பூமியிலிருந்து நிலவு வெகு தொலைவில் இருக்கிறது. உண்மையில் அது நகர்வதில்லை. வெகு தொலைவில் உள்ள பொருட்களை நாம் பார்க்கும் கோணம் நாம் நகர்வதால் மாறுவதில்லை. அதாவது நாம் நடந்தவாறு பார்த்தாலும் நிலவின் கோணம் மாறாது. எனவே அது நம்முடன் வருவது போல் தெரிகிறது.