

நாம் சிறுவயதில் இருக்கும் பொழுது அம்மா நமக்கு நிலாவை காட்டி சாப்பாடு ஊட்டியது உண்டு. அப்பொழுது நிலாவில் ஒரு பாட்டி கால் நீட்டி அமர்ந்திருப்பது போல் தோன்றும். அதைப் பார்த்து வகை வகையாக கதைகள் சொல்லுவோம். பாட்டி வடை சுடுகிறார்கள் என்றெல்லாம் கூறுவது உண்டு. அது போல் தோற்றம் தெரிவது எதனால் என்பதை இப்பதிவில் காண்போம்.
நிலா உடைய எல்லா பக்கங்களிலும் சூரிய ஒளி பிரதிபலிக்கும். அதனால் இருட்டான பகுதி என்று எதுவும் கிடையாது. பூமியில் இருந்து தொலைநோக்கி மூலமாக நிலாவை எப்படி, எப்பொழுது பார்த்தாலும் ஒரே பக்கம் தான் தெரியும். அதனால் அந்த பக்கத்தில் தெரிகிற விஷயங்களை வைத்து சில முடிவுக்கு வந்தார்கள். மற்ற பக்கத்தை பார்க்க முடியாமல் மர்மமாக இருந்ததால் அதை நிலாவின் இருண்ட பக்கம் என்று குறிப்பிட்டார்கள். ஆனால் லூனா-2 நிலாவில் சுற்றி சுற்றி வந்து எடுத்து அனுப்பிய படங்களை பார்த்த பிறகு நிலாவுக்கு இருந்த இந்தப் பெயர் அர்த்தமில்லாததாக ஆகிவிட்டது.
கிளமென்டைன் என்கிற விண்கலம் எடுத்து அனுப்பிய படங்களைப் பார்த்து நிலாவின் தென் துருவத்தில் சில ஆழமான பள்ளங்களில் பனி கலந்த தண்ணீர் இருக்கும் என்று புரிந்து கொண்டார்கள். அதே மாதிரி 'லூனார் ப்ராஸ்பெக்டர்' என்ற இன்னொரு விண்கலம் எடுத்த போட்டோக்களைப் பார்த்து வட துருவத்திலேயும் பனிப்பாளங்கள் இருக்கும் என்று நம்புகிறார்கள்.
'நாம் பூமியிலிருந்து வெறும் கண்களால் நிலாவைப் பார்க்கும் போது பாட்டி உட்கார்ந்து இருக்கிற மாதிரி தெரியும். அப்படி தெரிவது நிலாவில் உள்ள மேடு பள்ளங்களினால்' தான். இதில் பல பள்ளங்களுக்கு பெயர் வைத்திருக்கிறார்கள். பூமியிலிருந்து அவ்வளவு தொலைவில் உள்ள நிலாவில் கால் வைப்பது என்றால் சாதாரண விஷயமா என்ன? மனிதரோட மிகவும் பெரிய சாதனை தானே! அது குறிப்பிடுகிற விதமாகத்தான் நிலவுக்குப் போய் வந்த விண்வெளி வீரர்கள் வைத்த பெயர்கள் தான் அவை.
முதன்முதலாக ரஷ்ய விண்கலமான லூனா-3 தான் நிலாவை போட்டோ எடுத்து அனுப்பியது. அப்போது சில பள்ளங்களுக்கு அப்பல்லோ, ககாரின், கொரொலெவ் என்று பெயர் வைத்தார்கள். அதற்குப் பிறகு வேற்று நாட்டுக்காரர்களும் நிலவுக்குச் சென்றபோது வேறு சில பள்ளங்களுக்கும் பெயர் வைத்தார்கள்.
பல வளைய பள்ளமான ஓரியண்டலோடைய சுற்றளவு 930 கிலோ மீட்டர். நிலா உடைய மறுபக்கத்தில் இருக்கிற தென் துருவ ஐட்கென் என்கிற பள்ளம் 2,250 km சுற்றளவு கொண்டது. 12 கிலோமீட்டர் ஆழமானது. டைக்கோ, கோபர் நிக்கஸ், தாலமி என்று விஞ்ஞானிகள் பெயர்களில் எல்லாம் பெரிய பெரிய பள்ளங்கள் இருக்கின்றன. ஆராய்ச்சிக்காக அப்பல்லோ 328 கிலோ கிராம் கல் எடுத்து வந்தது. அந்தக் கல் இம்பிரியம் பள்ளத்தில் இருந்து தான் எடுத்து கொண்டு வரப்பட்டது. இப்படி நிலாவில் இருந்து கல்லை எடுத்து வந்து ஆராய்ச்சி செய்து, நிலா எப்போது உருவாகியது என்பதைப் பற்றி பல தியரிகள் உருவாகின.
நிலாவும் பூமியும் ஒரே சமயத்தில் உருவானவை என்று சொல்வது 'கோ அக்ரீஷன் தியரி'. அது அப்படி இல்லை முதலில் உருவான பூமியில் இருந்து பிரிந்து போனதுதான் நிலா என்று சொல்வது 'ஃபிஷன்தியரி'. எங்கேயோ உருவான நிலா காலப்போக்கில் பூமியால் ஈர்க்கப்பட்டது என்று சொல்வது 'கேப்சர் தியரி'. இவற்றில் எந்த கருத்துமே பரவலாக எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. அப்பல்லோ சென்று கல் சேம்பிள் எடுத்து வந்த பிறகுதான் இதைப்பற்றி ஒரு முடிவுக்கு வந்திருக்கிறார்கள். பூமியும் செவ்வாய் கிரகம் மாதிரியான ஏதோ ஒரு மிகப்பெரிய பொருளும் மோதி அந்த மோதலின் போது வெளியேற்றி தூக்கி எறியப்பட்ட பொருள்தான் நிலா என்று கண்டுபிடித்து இருக்கிறார்கள். இதை எல்லா விஞ்ஞானிகளும் ஒருமித்து ஏற்றுக் கொண்டார்கள் என்பதுதான் சிறப்பு.