அமிலம் கொதிக்கும் ‘ஷார்க்கானோ’ எரிமலையில் அமைதியாக நீந்தும் சுறாக்கள்: விஞ்ஞானிகள் கண்ட மர்மம்!

sharks-living
sharks-living
கே.எஸ்.கிருஷ்ணவேனி

Iam a graduate from Vaishnav College in the year 1984. My writings were published in Mangayar Malar,Aval Vikadan,Kumudham Sneghethi since 1992 and received many prizes. Now I am writing in Kalki Publications. Cooking, writing, playing Shuttle cock & making fur dolls are my passions.

Updated on

சாலமன் தீவுகளுக்கு அருகில் உள்ள ஒரு நீருக்கடியில் உள்ள எரிமலைக் குழியில் சுறாக்கள் நீந்துவதை, விஞ்ஞானிகள் ஆழ்கடல் கேமரா ஒன்றைப் பயன்படுத்தி படம் பிடித்துள்ளனர். கவாச்சி என்று அழைக்கப்படும் அந்த எரிமலையின் புவியியல் மற்றும் உயிரியல் பற்றி அதிகம் அறியப்படாததால் ஆராய்ச்சியாளர்கள் அதை நன்கு ஆய்வு செய்வதற்காக கேமராவையும் மற்ற கருவிகளையும் தண்ணீருக்குள் இறக்கினார்கள். அப்பொழுது அந்த அமிலத்தன்மை நிரம்பிய நீருக்குள் சுறாக்கள் அமைதியாக நீந்திக் கொண்டிருக்கும் காட்சி வெளியாகி ஆராய்ச்சியாளர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

உலகின் மிக அபாயகரமான கடலடி எரிமலைகளில் ஒன்றான கவாச்சி (Kavachi) எரிமலையின் உட்பகுதியில் சுறாக்கள் மிகவும் அமைதியாக நீந்திக் கொண்டிருக்கும் காட்சிகள் ஆராய்ச்சியாளர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. இந்த விசித்திரமான நிகழ்வு குறித்து விஞ்ஞானிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.

ஷார்க்கானோ (Sharkcano): 

பசிபிக் பெருங்கடலில் உள்ள சாலமன் தீவுகளுக்கு அருகில் அமைந்துள்ள கவாச்சி கடலடி எரிமலை அடிக்கடி வெடித்து லாவா குழம்பு, சாம்பல் மற்றும் அதிக அமிலத்தன்மை கொண்ட நீரை வெளியேற்றும். இப்பகுதியில் சுறாக்கள் வாழ்வதால் விஞ்ஞானிகள் இந்த இடத்தை 'ஷார்க்கானோ' என்று அழைக்கிறார்கள்.

2015ஆம் ஆண்டு கவாச்சி எரிமலையை விஞ்ஞானிகள் ஆய்வு செய்யச் சென்றனர். கடல் மட்டத்திற்கு கீழே மறைந்திருக்கும் இந்த எரிமலை அடிக்கடி வெடித்துச்சிதறி அமிலத்தையும், சாம்பலையும் வெளிப்படுத்தும் குணம் கொண்டது. இவ்வளவு ஆபத்து நிறைந்த இடத்திற்குள் எந்த உயிரினமும் இருக்காது என்று நினைத்தனர். ஆனால் விஞ்ஞானிகள் குழு,  எரிமலையின் வாய்ப்பகுதிக்குள் ஒரு கேமராவை இறக்கிய பொழுது திரையில் தெரிந்த காட்சிகள் அவர்களை அதிர வைத்தது.

இதையும் படியுங்கள்:
National Science Day: அறிவியல் மேதைகளின் சிந்தனை முத்துக்கள்!
sharks-living

அங்கே சுத்தியல் தலை சுறாக்கள் (Hammerhead) மற்றும் சில்க்கி (Silky) வகை சுறாக்கள், எரிமலையின் சூடான மற்றும் அமிலத்தன்மை கொண்ட சூழலில் எந்த பாதிப்பும் இல்லாமல் நீந்திக் கொண்டிருப்பதைக் கண்டு விஞ்ஞானிகள் ஆச்சரியமடைகின்றனர்.

எரிமலை வெடிக்கும்போது அங்கு எந்த விதமான உயிரினங்களும் இருக்க வாய்ப்பில்லை. அப்படி இருக்கையில் இந்த சுறாக்கள் எப்படி அங்கு வாழ்கின்றன என்பது புரியாத புதிராகவே உள்ளது. கவாச்சி எரிமலை எந்த நேரத்திலும் வெடிக்கும் என்பதால் ஆய்வாளர்கள் சில சிறிய ரக ரோபோக்களை பயன்படுத்தினர். இந்த ரோபோக்கள் அனுப்பிய தகவல்கள் அதிர்ச்சியளிப்பதாகவே இருந்தது.

அங்குள்ள நீர் கடுமையான அமிலத்தன்மை கொண்டதாகவும், நீரின் வெப்பநிலை சாதாரணமாக இருப்பதைவிட 10 டிகிரி செல்சியஸ் அதிகமாக உள்ளது. எரிமலை வெடித்த பொழுது வெளியேறிய பாறைத் துண்டுகள் ரோபோக்களின் உடலில் பதிந்து வந்தன. இத்தகைய வெப்பமும் அமிலம் நிறைந்த சூழல் பாக்டீரியாக்களுக்கு வேண்டுமானால் பொருத்தமாக இருக்கலாம்.

ஆனால் மீன்களுக்கு ஆபத்தானது. இருந்தும் இவை எவ்வாறு அங்கு எந்தவித பதற்றமும் இன்றி நீந்திக்கொண்டிருக்கின்றன என்பதற்கான விடை இன்னும் தெரியவில்லை.

இதையும் படியுங்கள்:
செவ்வாய் கிரகத்திற்கு செல்ல நிலவில் பெட்ரோல் பங்க்... 150 கோடி ஆண்டு ரகசியத்தை உடைத்த விஞ்ஞானிகள்!
sharks-living

பொதுவாக பெரும்பாலான மீன்கள் மற்றும் கடல்வாழ் உயிரினங்கள் வாழ முடியாத, அதிக வெப்பம் மற்றும் அமிலத்தன்மை கொண்ட இத்தகைய தீவிரமான சூழலில் சுறாக்கள் எப்படி வாழ்கின்றன என்பது விஞ்ஞானிகளுக்கு இன்னும் புரியாத மர்மமாகவே உள்ளது. சுறாக்கள் இந்த தீவிர சூழலுக்கு ஏற்ப பரிணாம வளர்ச்சி அடைந்திருக்கலாம் அல்லது இந்த எரிமலைப் பகுதியில் உள்ள தனித்துவமான சூழல் அவற்றிற்கு நன்மை பயக்கலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர்.

இந்த கண்டுபிடிப்பு, கடல்வாழ் உயிரினங்கள் எவ்வளவு கடினமான சூழலிலும் உயிர்வாழும் திறன் கொண்டவை என்பதை நிரூபிப்பதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

logo
Kalki Online
kalkionline.com