செவ்வாய் கிரகத்திற்கு செல்ல நிலவில் பெட்ரோல் பங்க்... 150 கோடி ஆண்டு ரகசியத்தை உடைத்த விஞ்ஞானிகள்!

moon-as-a-refueling-station
moon-as-a-refueling-station
Updated on

விண்வெளிக்கு சுற்றுலா செல்வது முதல் செவ்வாய் கிரகத்தில் மனிதர்கள் குடியேறுவது வரை நமது கனவுகள் நாளுக்கு நாள் விரிவடைந்து கொண்டே செல்கின்றன. ஒரு காலத்தில் வெறும் அறிவியல் புனைகதைகளில் மட்டுமே வந்த விஷயங்கள் எல்லாம் இன்று நிஜமாகிக் கொண்டு இருக்கின்றன. 

நீண்ட தூர விண்வெளிப் பயணங்களில் நாம் சந்திக்கும் மிகப்பெரிய சவாலே எரிபொருள் மற்றும் ஆக்சிஜன் பற்றாக்குறை தான். ஆனால், இந்த இரண்டு பிரச்சனைகளுக்கும் ஒரே தீர்வாக நமது நிலவு மாறப்போகிறது என்ற ஒரு தகவல் தற்போது வெளிவந்துள்ளது. 

செவ்வாய் கிரகத்திற்குச் செல்லும் ராக்கெட்டுகளுக்கு ஒரு பிரம்மாண்டமான விண்வெளி பெட்ரோல் பங்க் ஆக நிலவு செயல்படப் போகிறது. இதை சாத்தியமாக்கப் போவது அங்கு கண்டுபிடிக்கப்பட்டுள்ள பல கோடி ஆண்டுகள் பழமையான ஒரு பிரம்மாண்ட ஐஸ் கட்டி தான்.

நிலவில் மறைந்துள்ள ஐஸ் கட்டி!

நிலவின் துருவப் பகுதிகளில் எப்போதுமே சூரிய ஒளியே படாத சில மர்மமான இருண்ட பகுதிகள் உள்ளன. நாசா அனுப்பிய விண்கலத்தின் உதவியுடன் சமீபத்தில் ஒரு சுவாரஸ்யமான ஆய்வறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, நிலவில் உள்ள இந்த இருண்ட பகுதிகளில் சுமார் 150 கோடி ஆண்டுகளாகவே பனிக்கட்டிகள் தொடர்ச்சியாக உருவாகி பத்திரமாக சேமிக்கப்பட்டு வருவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 

பல லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு நிலவின் மீது மோதிய பனிப்பாறைகள் மற்றும் சூரியக் காற்று ஆகியவைதான் இந்த நீரை அங்கு கொண்டு சேர்த்துள்ளன. காலப்போக்கில் நிலவின் அச்சு லேசாகச் சாய்ந்ததால், இந்த இருண்ட பகுதிகளின் பரப்பளவு விரிவடைந்து அதிக அளவிலான தண்ணீர் பனிக்கட்டியாக மாறத் தொடங்கியுள்ளது.

இதையும் படியுங்கள்:
ரோபோக்கள் நம் வேலைகளை அபகரிக்குமா? செயற்கை நுண்ணறிவின் இருண்ட பக்கம்!
moon-as-a-refueling-station

புதைந்திருக்கும் பொக்கிஷம்!

இந்த இருண்ட பகுதிகளில் நிலவும் தட்பவெப்ப நிலை மைனஸ் அளவீட்டைத் தாண்டி மிகக் கடுமையாக உறைய வைக்கும் அளவிற்கு இருக்கும். இந்த அதீத குளிரின் காரணமாகத்தான் இவ்வளவு காலமும் அந்தப் பனிக்கட்டிகள் உருகாமல் அப்படியே பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. இதில் என்ன ஒரு ஆச்சரியம் என்றால், கொஞ்சம் சமீபத்தில் அதாவது சுமார் 10 கோடி ஆண்டுகளுக்கு முன்பு உருவான பனிக்கட்டிகள் நிலவின் மேல் பரப்பிலேயே நேரடியாகக் காணப்படுகின்றன. 

ஆனால், மிகவும் பழமையான நூற்று ஐம்பது கோடி வருடப் பனிக்கட்டிகள் பாதுகாப்பாக நிலவின் மண்ணுக்கு அடியில் மிகவும் ஆழமாகப் புதைந்து கிடக்கின்றன. இது மனித குலத்தின் எதிர்கால விண்வெளி ஆராய்ச்சிக்குக் கிடைத்த ஒரு மிகப் பெரிய லாட்டரி என்றே சொல்லலாம்.

விண்வெளி பெட்ரோல் பங்க்!

நாசாவின் அடுத்தகட்ட பிரம்மாண்டமான ஆர்டெமிஸ் திட்டத்திற்கு இந்த பனிக்கட்டிகள் மிகப் பெரிய அளவில் கைகொடுக்கப் போகின்றன. அங்குள்ள ஐஸ் கட்டிகளை எடுத்து விசேஷ முறையில் பிரித்தால், விண்வெளி வீரர்கள் சுவாசிக்கத் தேவையான ஆக்சிஜனை மிக எளிதாக உருவாக்கிவிடலாம். 

இதையும் படியுங்கள்:
ஆர்டெமிஸ் நிலவு பயணம்… அதில் நமக்கென்ன பயன்?
moon-as-a-refueling-station

அதேபோல, அதில் இருந்து பிரிக்கப்படும் ஹைட்ரஜனை ராக்கெட்டுகளுக்கான சூப்பரான எரிபொருளாகவும் பயன்படுத்த முடியும். இதனால் பூமியிலிருந்து அதிக எரிபொருளைச் சுமந்து செல்ல வேண்டிய பெரிய செலவு மிச்சமாகும். செவ்வாய் கிரகத்திற்கோ அல்லது அதைத் தாண்டி வேறு கிரகங்களுக்கோ செல்லும் விண்கலங்கள், நிலவில் கொஞ்ச நேரம் இளைப்பாறிவிட்டு எரிபொருளை நிரப்பிக்கொண்டு தங்களின் பயணத்தைத் தொடரலாம்.

பல்லாயிரம் ஆண்டுகளாக நாம் பூமியிலிருந்து அண்ணாந்து பார்த்து ரசித்த நிலவு, எதிர்காலத்தில் மனிதர்களின் விண்வெளிப் பயணங்களுக்கு ஒரு முக்கியமான நடு மையமாக மாறப்போகிறது. அங்குள்ள வளங்களைச் சரியாகப் பயன்படுத்திக் கொண்டால், மனிதர்கள் நிலவில் நிரந்தரமாக முகாம் அமைத்துத் தங்கி அங்கிருந்தபடியே பல புதிய பிரபஞ்ச ரகசியங்களை மிக சுலபமாக ஆராயலாம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com