

ஸ்மார்ட் ஃபோன் வைத்திருப்பவர்களின் மிகப்பெரிய பிரச்னை அடிக்கடி ஜார்ஜ் தீர்ந்து போவதும், மொபைல் ஃபோன் சூடாவதும்தான். இதற்கு மொபைல் சார்ஜ் போடும்போது பேட்டரி வீணாவதையும், அது அளவுக்கு அதிகமாகச் சூடாகி வெடிப்பதையும் தடுத்து, பேட்டரியின் ஆயுளை பாதுகாக்கவும் ஆபத்துகளை தவிர்க்கவும் செய்யக்கூடாத சில முக்கிய தவறுகள் உள்ளன.
சார்ஜ் ஆகும் பொழுது மொபைலைப் பயன்படுத்துதல்:
சார்ஜ் ஏறிக் கொண்டிருக்கும்போது ஃபோனை பயன்படுத்தினால் குறிப்பாக பப்ஜி, ப்ரீ-ஃபயர் போன்ற கேம்கள் விளையாடுவது, உயர்தர வீடியோக்களை ஸ்ட்ரீமிங் செய்வது, வீடியோ கால் செய்வது அல்லது ஃபோன் பேசுவது போன்றவற்றைத் தவிர்க்க வேண்டும். இது மொபைல் பேட்டரிக்குக் கூடுதல் அழுத்தத்தைக் கொடுத்து வெப்பத்தை மிக வேகமாக அதிகரிக்கும்.
மெத்தை அல்லது தலையணை மீது வைத்து சார்ஜ் போடுவது:
கட்டில், மெத்தை, சோபா அல்லது தலையணைக்கு அடியில் மொபைலை வைத்து சார்ஜ் போடக்கூடாது. இவை வெப்பத்தை உள்வாங்கி ஃபோனை அதிகப்படியாக சூடாக்கிவிடும்.
துணிகள் வெப்பத்தை வெளியேற விடாமல் தடுத்து விடுவதால் காற்றோட்டம் இல்லாது மொபைல் எளிதில் சூடாகி தீ விபத்து ஏற்படும் அபாயம் உண்டு. எப்பொழுதும் கல், மரம் போன்ற தட்டையான கடினமான பரப்பில் தரை அல்லது மேஜை மீது வைத்து சார்ஜ் போடுவதே சரியான முறையாகும்.
தடிமனான பேக் கேஸ் (Back Case) உடன் சார்ஜ் செய்வது:
மொபைல் சார்ஜ் ஏறும் பொழுது இயற்கையாகவே வெப்பம் உருவாகும். மொபைல் கீழே விழுந்து உடைந்து விடக்கூடாது என்பதற்காக நாம் பயன்படுத்தும் தடிமனான பேக் கவர்கள், சார்ஜ் ஆகும்போது வெளியாகும் வெப்பத்தை வெளியில் போக விடாமல் தடுத்துவிடும். எனவே ஃபோன் கவருடன் சார்ஜ் செய்யாமல் சார்ஜ் போடுவதற்கு முன்பு கவரை கழற்றி வைப்பது நல்லது.
மலிவான அல்லது போலி சார்ஜர்களைப் பயன்படுத்துவது:
மொபைல் நிறுவனத்தின் அசல் சார்ஜர் அல்லது சான்றளிக்கப்பட்ட பிராண்டட் சார்ஜர்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும். ஒரிஜினல் சார்ஜர் பழுதடைந்தால் கடைகளில் விற்கப்படும் தரம் குறைந்த, மலிவான போலி சார்ஜர்கள் மற்றும் கேபிள்களை வாங்கிப் பயன் படுத்துவதைத் தவிர்க்க வேண்டும். இவற்றில் முறையான வோல்டேஜ் கட்டுப்பாடுகள் இருக்காது. இது மொபைலை சூடாக்கி பேட்டரியை முழுமையாகப் பாழாக்கிவிடும்.
இரவு முழுவதும் சார்ஜில் போடுவது:
இரவு தூங்கும்போது மொபைலை சார்ஜில் போட்டுவிட்டு விடிய விடிய காலை வரை அப்படியே விடுவது தவறு. 100% சார்ஜ் ஆன பிறகும் மின்சாரம் தொடர்ந்து பாய்வது பேட்டரியின் ஆயுளைக் குறைக்கும். நவீன போன்களில் ஆட்டோ-கட் வசதி இருந்தாலும், நீண்ட நேரம் பிளக்-இன் செய்யப்பட்டு இருப்பது பேட்டரியின் ஆயுளைக் குறைப்பதோடு, வெப்பமடையவும் வழி வகுக்கும். பேட்டரி அளவை 20% முதல் 80% வரை பராமரிப்பதே சிறந்தது.
அதிக வெப்பமான அல்லது சூரிய ஒளி படும் இடங்களில் சார்ஜ் செய்வது:
நேரடி சூரியஒளி படும் இடங்களிலோ, சமையல் அறைக்கு அருகிலோ அல்லது வெயில் நேரத்தில் காரின் உட்பகுதியிலோ மொபைலை சார்ஜ் செய்யக் கூடாது. வெளிப்புற வெப்பமும் சார்ஜிங் வெப்பமும் ஒன்றிணையும்போது பேட்டரி வீங்கி வெடிக்கும் ஆபத்து நேரிடலாம். குளிர்ச்சியான, உலர்ந்த இடங்களையே தேர்ந்தெடுக்க வேண்டும்.
அத்துடன் முக்கியமாக மொபைல் பேட்டரியை எப்பொழுதும் 0% வரை தீர விடக்கூடாது. அதேபோல் 100% முழுமையாகவும் சார்ஜ் செய்யவேண்டியதில்லை. பேட்டரியின் ஆயுளை நீடிக்க அவற்றை சரியான முறையில் பராமரிப்பதே சிறந்த வழிமுறையாகும்.