

மொபைல் போன் சார்ஜை 20% முதல் 80% வரை பராமரிப்பது பேட்டரி ஆயுள் கணிசமாக நீட்டிக்க உதவும். இன்றைய ஸ்மார்ட் ஃபோன்களில் லித்தியம்-அயன் பேட்டரிகள் பயன்படுத்தப்படுகின்றன. இந்த பேட்டரிகள் முழுமையாக காலியாகும் பொழுதோ (0%) அல்லது முழுமையாக நிறையும் பொழுதோ (100%) அதிக அழுத்தத்திற்கு உள்ளாகின்றன.
இதன் பின்னணியில் உள்ள அறிவியல் உண்மைகள்:
வோல்டேஜ் அழுத்தம்:
பேட்டரி 80% ஐத் தாண்டி 100% எட்டும் பொழுது அதன் வோல்டேஜ் அளவு உச்சத்தை அடைகிறது. இது பேட்டரியின் உட்புற ரசாயனங்களை வேகமாக பலவீனப்படுத்தும்.
சார்ஜ் சுழற்சி (Charge Cycles):
லித்தியம்-அயன் பேட்டரிகளின் ஆயுள் "சார்ஜ் சுழற்சி" முறையை அடிப்படையாகக் கொண்டது. பூஜ்ஜியத்திலிருந்து 100% வரை சார்ஜ் செய்வது ஒரு முழு சுழற்சி ஆகும். பொதுவாக ஸ்மார்ட் ஃபோன் பேட்டரிகள் 300 முதல் 500 சுழற்சிகள் வரை மட்டுமே நல்ல திறனுடன் இருக்கும். ஆனால் சார்ஜை 20%-80% க்குள் வைப்பதன் மூலம் இந்த சுழற்சிகளின் எண்ணிக்கை அதிகரித்து பேட்டரியின் ஆயுள் சுழற்சி 3 மடங்கு வரை அதிகரிக்கிறது.
வெப்பநிலை:
80% க்கு மேல் சார்ஜ் ஆகும் பொழுதும், 20% க்கு கீழே குறையும் பொழுதும் பேட்டரி அதிக வெப்பமடைகிறது. வெப்பம் தான் பேட்டரியின் மிகப்பெரிய எதிரி.
பேட்டரியின் ஆயுள் அதிகரிக்க செய்ய வேண்டியது:
இரவு முழுவதும் சார்ஜ் செய்வதை தவிர்க்கலாம். போனை இரவு முழுக்க சார்ஜில் போட்டு வைத்தால் அது 100% அடைந்த பிறகும் தொடர்ந்து அழுத்தத்திலேயே இருக்கும். இதனால் பேட்டரி அதிக வெப்பமடைந்து அதன் ஆயுள் குறையும்.
இன்-பில்ட் அம்சங்களை பயன்படுத்தவும். தற்கால ஆன்ட்ராய்டு மற்றும் ஐபோன்களில் பேட்டரி ப்ரொடெக்ஷன் (Battery Protection) அல்லது ஆப்டிமைஸ்ட் பேட்டரி சார்ஜிங் (Optimized Battery Charging) என்ற அம்சம் உள்ளது. இதை ஆன் செய்தால், போன் தானாகவே 80% அல்லது 85% ல் சார்ஜிங்கை நிறுத்திவிடும்.
iPhoneல் Settings>Battery>Battery Health & Charging பகுதிக்குச் சென்று Optimized Battery Charging அல்லது 80% Limit என்பதை ஆன் செய்யலாம். Androidல் பிராண்டைப் பொறுத்து Settingsல் Battery பிரிவின் கீழ் Protect Battery அல்லது Battery Care என்ற ஆப்ஷன் இருக்கும். இதை ஆன் செய்தால் சார்ஜ் 80% அல்லது 85% வந்தவுடன் தானாகவே சார்ஜ் ஆவது நின்றுவிடும்.
எப்பொழுதும் 20% முதல் 80% வரை சார்ஜ் செய்வது பேட்டரிக்கு நல்லது. ஆனால் நாம் நீண்ட தூரம் பயணம் செய்ய திட்டமிட்டால் தாராளமாக 100% சார்ஜ் செய்து கொள்ளலாம். எப்போதாவது ஒருமுறை 100% சார்ஜ் செய்வதால் பெரிய பாதிப்பு ஏற்பட்டு விடாது.
போனை 0% வரும் வரை பயன்படுத்தக்கூடாது. காரணம் போன் சார்ஜ் முற்றிலும் தீர்ந்து சுவிட்ச் ஆஃப் ஆகும் நிலைக்குச் சென்றால், பேட்டரியின் உட்புற வேதியியல் செயல்திறன் பாதிக்கப்பட்டு நிரந்தரப் பழுது ஏற்படலாம்.
எனவே சார்ஜ் 20% வரும்பொழுதே சார்ஜரை இணைப்பது நல்லது. அதேபோல் பேட்டரி 80%ஐத் தாண்டும்பொழுது மீதமுள்ள 20% சார்ஜ் ஆவதற்கு அதிக மின்னழுத்தம் (high voltage) மற்றும் வெப்பம் தேவைப்படுகிறது. இந்த அதிகப்படியான வெப்பம் மற்றும் அழுத்தம் பேட்டரியின் ஆயுளைக் குறைக்கும்.
சேஃப் ஜோன் (Safe Zone):
20% முதல் 80% வரையிலான அளவுதான் பேட்டரிக்கு எந்த அழுத்தமும் இல்லாத வசதியான பகுதி ஆகும். இந்த சேஃப் ஜோனைத் தாண்டாமல் இருப்பது நல்லது. இதன் மூலம் மின்னழுத்தம் சீராக இருக்கும். இந்த இடைவெளியில் பேட்டரியைப் பராமரிக்கும்போது அதன் ஆயுட்காலம் வழக்கத்தைவிட 2 முதல் 3 ஆண்டுகள் வரைக் கூடுதலாக நீடிக்கும்.
போனை நீண்ட வருடங்கள் பேட்டரி மாற்றாமல் பயன்படுத்த நினைத்தால் இந்த 20% - 80% விதியைப் பின்பற்றுவது மிகச்சிறந்த பலனைத் தரும்.
இந்த எளிய சார்ஜிங் முறையையும் போனில் உள்ள இன்-பில்ட் அமைப்புகளையும் உடனடியாகப் பயன்படுத்துவதன் மூலம், உங்கள் ஸ்மார்ட்போன் பேட்டரியை அடிக்கடி மாற்றும் செலவு மிச்சமாவதுடன், போனின் ஒட்டுமொத்த செயல்திறன் பல ஆண்டு களுக்குப் புதிது போலவே நீடிக்கும்.