
மனிதனை அக்கு வேறு ஆணி வேறாகப் பிரித்தால் வருவது என்னென்ன கெமிக்கல்கள் தெரியுமா?
இதோ பார்த்து விடுவோமே!
மனிதனைப் பிரித்தால் வருவது....
ஆக்ஸிஜன் 72.00 %
கார்பன் 13.40 %
ஹைட்ரஜன் 9.10 %
நைட்ரஜன் 2.50 %
கால்ஷியம் 1.30 %
பாஸ்பரஸ் 1.25 %
இதைத் தவிர மிகச் சிறிய அளவுகளில் ...
சல்பர், அயர்ன், ஆர்செனிக்,
சோடியம், மக்னீஷியம், ப்ரோமைன்
க்ளோரின், சிலிகான், கோபால்ட்
ஃப்ளோரின், துத்தநாகம், அயோடின்
பொடாஸியம்
ஆகியவை உள்ளன.
அட, இவ்வளவு தானா மனிதன்?
இப்படிச் சொன்னால் புரியாது என்பவர்களுக்காக வேறு விதமாகச் சொல்லிப் பார்ப்போமா?
நூறு கப் காப்பிக்குத் தேவையான அளவு சர்க்கரை.
ஒரு சின்ன வீட்டிற்கு வெள்ளையடிக்கத் தேவையான அளவு சுண்ணாம்பு.
ஒரு அங்குல ஆணி தயாரிக்கத் தேவையான அளவு இரும்பு.
அரை டஜன் ப்ளாஷ் போட்டோ எடுக்கத் தேவையான அளவு மக்னீஷியம்.
ஒரு பொம்மைத் துப்பாக்கி வெடிக்குமளவு தேவையான அளவு பொடாஸியம்.
தத்துப்பூச்சிகளை விரட்டும் அளவு தேவையான சல்பர்
இருபது தீப்பெட்டிகளைத் தயாரிக்கப் போதுமான அளவு பாஸ்பரஸ்.
ஒரு டஜன் பார் சோப்புகளைத் தயாரிக்கத் தேவையான அளவு கொழுப்பு.
ஒரு காப்பர் சென்டுக்கு சமமான தாமிரம்.
ஒரு குட்டிக் குழந்தை குளிக்கத் தேவையான அளவு தண்ணீர்.
இது தாங்க மனிதன்!
கொஞ்சம் பணம் கொடுத்தால் எல்லாவற்றையும் சேர்த்து வாங்கி விடலாம்!
சரி, இந்த கெமிக்கல்களை எல்லாம் சேகரித்து ஒரு மனிதனைத் தயாரிக்க முடியுமா?
ஆயிரமாயிரம் விதங்களில் கலந்து பார்க்கலாம்.
ஊஹூம், முடியாதுங்க!
தலை, கண், மூக்கு, காது, கை, கால்,…இன்ன பிற அங்கங்களை உருவாக்க வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்!
ஆனால் இதில் உள்ள கெமிக்கல்களைப் பல்வேறு விதமாகக் கலந்து பல பொருள்களைப் பெற முடியும். தாமிரத்தையும் இரும்பையும் உரிய முறையில் உரிய விகிதத்தில் கலந்தால் வருவது டெலிவிஷன் ரிசீவிங் செட்!
தங்களுக்குள் ஆற்றலைப் புதைந்து வைத்திருக்கும் இவையெல்லாம் எப்படி திடீர் திடீரென வேறு உருவங்களை எடுக்கின்றன?
எப்படி ஒலியாகவும் ஒளியாகவும் மாறி நம்மை பிரமிக்க வைக்கின்றன?
சற்று சிந்தித்துப் பார்த்தால் வரும் விடை என்ன?
கடவுளா?
தைரியமாகச் சொல்லுங்க ஆமாம், கடவுள் தான் என்று!
சரி, இப்படி ஒரு அற்புதமான விவரத்தை கண்டுபிடித்து, அறிவியலுக்கும் ஆன்மீகத்திற்கும் உள்ள தொடர்பை அழகாக விளக்கியவர் யார்?
அவர் பெயர் ஈ. நார்மன் பியர்ஸன் (Edward Norman Pearson)
1887, டிசம்பர் மாதம் 18ம் நாளன்று அவர் இங்கிலாந்தில் பிறந்தார். 1911ல் அவர் பிரம்ம ஞான சபையில் சேர்ந்தார். பல்வேறு பொறுப்புகளை அதில் அவர் வகித்தார். 1975ம் ஆண்டு ஜூன் மாதம் 23ம் நாளன்று அவர் மறைந்தார். இவரைப் பற்றிய சுவையான விவரங்கள் ஏராளம் உண்டு.