

நாளுக்கு நாள் உலகில் அதிக வயதானவர்களின் எண்ணிக்கை அதிகமாகிக் கொண்டே போகிறதே என்று இளைஞர்கள் கவலைப்படுகின்றனர். “இடைவிடாமல் எங்களுக்கு உதவி செய்ய யார் இருக்கிறார்கள்?” என்று முதியவர்களும் கவலைப்படுகிறார்கள். இதற்கு ஒரு தீர்வு தான் என்ன?
வேலைப் பளு தாங்காமல் வேலைக்குப் போகும் பெண்மணிகள் விழி பிதுங்கி நிற்கிறார்கள். இதற்கும் தீர்வு உண்டா? இப்படிப்பட்ட கேள்விகளுக்கெல்லாம் ஒரே பதில் மனித ரொபாட் என்பது தான்.
ஆயிரத்தி தொள்ளாயிரத்து அறுபதுகளில் மனிதர்களுக்கு வீட்டில் உதவி செய்ய சின்னச் சின்ன இயந்திரங்கள் வர ஆரம்பித்தன. இன்றோ மலைக்க வைக்கும் அளவிற்கு மனித ரொபாட் (Humanoid robot) அனைத்து உதவிகளையும் செய்யத் தயார். மனிதனைப் போலவே அதே உயரம், அதே அழகிய அமைப்புடன் டைனிங் டேபிளுக்கு வந்து, “இதோ, காப்பி” என்று காப்பி கோப்பையைத் தரும் காட்சி கண் கொள்ளாக் காட்சி தானே!
உலகில் ஜப்பானிய கம்பெனிகளும், பெரிய அமெரிக்க நிறுவனங்களும் இப்போது விதவிதமான மனித ரொபாட்டுகளைத் (Humanoid robot) தயார் செய்ய ஆரம்பித்து விட்டன. வீட்டு உதவி ரொபாட்டுகள், வாக்குவம் க்ளீனரில் ஆரம்பித்து பெப்பர் என்ற பர்ஸனல் கம்பனியன் ரொபாட், நம்முடன் ஜாலியாகப் பேசி நமது அன்றாட ஷெட்யூல்களில் உதவி செய்கிறது. இதை சாஃப்ட் பேங்க் ரொபாடிக்ஸ் என்ற நிறுவனம் தயார் செய்திருக்கிறது. ரொபாட்டின் கரங்கள் நுட்பமாகச் செயல்படுகின்றன. வயதானவர்களுக்கு பெப்பர் ரொபாட் உதவி செய்வதோடு அவர்களின் நேரத்தை இனிமையாகப் போக்க அரட்டை அடிக்கவும் செய்கிறது!
மெடிகல் ரொபாட்டுகள் அறுவைச் சிகிச்சையில் உதவி செய்கின்றன.
தொழிலகங்களை எடுத்துக் கொண்டால் ஆடோமேடட் கைடட் வெஹிகிள் இப்போது தயார். 'குகா' என்ற நிறுவனம் இதை இப்போது தயார் செய்கிறது. தேர்ந்தெடுத்து நிர்ணயிக்கப்பட்ட சாலை வழிகளில் இது பத்திரமாக உங்களைச் சேர வேண்டிய இடத்தில் சேர்ப்பிக்கும்.
கல்வித் துறையிலோ ஹ்யூமனாய்ட் ரொபாட்டுகள் மாணவர்களுக்கு பலவித புதிய உத்திகளைக் கற்றுத் தருகின்றன.
விவசாயத்துறையில் அறுவடைக்கு ரொபாட்டுகள் தயார்.
ட்ரோன்கள் டெலிவரி செய்யும் விதமே தனி. ஒவ்வொரு வீட்டிற்கும் இனி டெலிவரி ட்ரோன்களினால் தான்!
இரண்டாம் உலக மகாயுத்தத்தில் ஆங்காங்கே புதைத்து வைக்கப்பட்ட குண்டுகள் முழுதுமாக இன்னும் அகற்றப்படவில்லை. இப்போது Bomb Disposal Robot ரெடி. இவை பயமில்லாமல் வெடி குண்டுகளை அகற்றி விடும்.
அடுத்து நெடுங்காலமாகப் பேசப்பட்டு வரும் மனிதக் கழிவுகளை மனிதர்கள் அகற்றுவதா? என்ற சர்ச்சைக்கு ஒரு முடிவு வந்து விட்டது. மனிதர்கள் முகத்தைச் சுளிக்கும் வேலைகளில் ரொபாட்டுகள் இறங்கி நொடியில் கழிவுகளை அகற்றி விடும்!
முதுகெலும்பில் அடி, பக்கவாதம் – நடக்கவே முடியவில்லை. கவலை வேண்டாம். ரீ ஹாபிலிடேஷன் ரொபாட்டுகள் இப்படி அங்கங்களில் குறைபாடு உள்ளவர்களுக்கு உதவும். அவர்களை நினைத்த இடத்திற்கு அழைத்துச் செல்லும். எக்ஸோ பயானிக்ஸ் என்ற நிறுவனம் இந்த வகை ரொபாட்டுகளைத் தயார் செய்கிறது.
சுற்றுப்புறச்சூழலையும் காலநிலையையும் கண்காணித்து உதவ மரைன் ரொபாட்டுகள் ரெடி.
கடைகளில் சென்று சாமான்களை வாங்குகிறீர்களா? அசோனொமஸ் ஷாப்பிங் கார்ட் என்னும் வண்டிகள் உங்கள் சாமான்களைச் சேகரித்து பில் கவுண்டரில் கொடுத்து விடும். உங்கள் கார் வரைக்கும் வந்து சாமான்களை பத்திரமாக இறக்கி விடும்.
அன்றாட ரொடீன் வேலைகளுக்கு உதவி செய்ய ஸ்மார்ட் ஹோம் ஹப்ஸ் என்ற ரொபாட்டுகள் ரெடி. இவை அன்றாட வேலைகளை நிகழ்ச்சி நிரலாக்கி உங்களுக்கு எந்த நேரத்தில் எதைச் செய்ய வேண்டும் என்று சொல்லி உதவும்.
இன்னும் தானே டிரைவ் செய்யும் கார்கள், ஹோட்டலில் பரிமாறும் ரொபாட்டுகள், திருடர்கள் வருகிறார்களா என்பதைக் கண்காணிக்கும் விசேஷ ரொபாட்.. அடடா.... பட்டியல் நீளமாகப் போகிறது.
எதிர்கால உலகம் இனிமையான உலகம். சோம்பேறிகளாக மனிதர்கள் ஆகி விடாமல் இருந்தால் சரி தான்! எல்லாம் ரொபாட்டே பார்த்துக் கொள்ளும் என்றால் மனிதனுக்கு இனி என்ன தான் வேலை!