

விமானத்தை பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள் நிறைய உள்ளன. அதில் விமானத்தின் ஜன்னல்கள் பேருந்தில் இருப்பது போல சதுரமாகவோ, செவ்வகமாகவோ இருக்காது.
விமானத்தின் ஜன்னல்கள் நீள் வட்ட வடிவத்தில் இருப்பது ஏன் தெரியுமா?
விமானத்தின் ஜன்னல் சதுரமாக இருந்தால் வானத்தில் பறக்கும் போது காற்றின் அழுத்தத்தை தாங்காது. வானத்தில் சென்றவுடன் விரிசல் ஏற்பட்டு உடையும் வாய்ப்பு உள்ளது.
னால், ஒரு வட்ட சாளரம் காற்றின் அழுத்தத்தை எளிதில் தாங்கும். அது மட்டும் இல்லாமல் வட்டமான சாளரம் காற்றழுத்தத்தை எல்லா பக்கங்களிலும் சமமாக பரப்பி ஜன்னல் எளிதில் உடையாமல் பார்த்துக் கொள்ளும். அதற்காக ஜன்னல்கள் விமானங்களில் நீள்வட்டமாக செய்யப்படுகின்றன.
முந்தைய கால விமானங்களில் நீள் வட்டமான ஜன்னல்களுக்குப் பதிலாக சதுர ஜன்னல்கள் மட்டுமே இருந்தன. எதனால் என்றால் முன்பெல்லாம் விமானங்கள் குறைந்த வேகத்தில் பறந்தன. குறைந்த வேகத்தில் பறந்ததால் காற்றழுத்தம் குறைவு; உடையவும் வாய்ப்பில்லை.
ஆனால், தற்போது தொழில்நுட்ப வளர்ச்சியின் காரணமாக விமானத்தின் வேகம் அதிகரித்து உள்ளது. அதே நேரத்தில் விமானமும் அதிக உயரத்தில் பறக்க தொடங்கியது. அதனால் அந்த சூழலுக்கு ஏற்ப ஜன்னல் வடிவமும் மாறிவிட்டது.
1950-க்குப் பின் அதிக பயணிகளை ஏற்றி செல்வதற்காகவும், வேகமாக செல்வதற்காகவும், பெரிய விமானங்கள் தயாரிக்கப்பட்டன. இங்கிலாந்தை சேர்ந்த டி ஹாவிலாண்ட் நிறுவனமும் இது போன்ற பெரிய விமானங்களை உற்பத்தி செய்தது. ஆனால், ஒரே வித்தியாசம் நீள் வட்டமான ஜன்னலுக்கு பதிலாக சதுர ஜன்னல்களைக் கொண்ட விமானங்களை அந்த நிறுவனம் தயாரித்தது.
1953-ல் அந்த நிறுவனத்தின் 2 விமானங்கள் வானில் உடைந்து விபத்துக்குள்ளாகின. இதில் 53 பேர் பலியானார்கள்.
ஏன்? எப்படி? இந்த விபத்துக்கான காரணம் கண்டுபிடித்தபோது, 'சதுர ஜன்னல்' தான் எனத் தெரிந்தது.
ஜன்னலின் முனைப்பகுதி மற்ற இடங்களை விட வலு குறைந்ததாக இருக்கும். சதுர ஜன்னல்களை கொண்ட ஒரு விமானம் வானில் பறக்கும் போது காற்றினால் ஏற்படும் அழுத்தம் காரணமாக உடைவதற்கு அதிக வாய்ப்பு உள்ளது.
எனவே தான் விமானங்களின் ஜன்னல்கள் எப்போதும் நீள் வட்டமாக வடிவமைக்கப்பட்டுள்ளன.
இப்போது அதன் காரணம் புரிந்திருக்குமே!