

புதிதாக வாங்கிய டயர்களில் சிறிய முடிகள் போல ரப்பர் நீட்டிக்கொண்டிருப்பதை நீங்கள் பார்த்திருப்பீர்கள். பலர் இது டயரின் தரம் அல்லது மைலேஜை அதிகரிக்கும் ஒரு தொழில்நுட்பம் என்று நினைக்கிறார்கள். ஆனால் உண்மை முற்றிலும் வேறானது.
தொழில்நுட்ப ரீதியாக இவை 'வென்ட் ஸ்ப்ரூஸ்' (Vent Spews) என்று அழைக்கப்படுகின்றன. பேச்சுவழக்கில் இவற்றை 'ஸ்ப்ரூ நப்ஸ்' (Sprue Nubs) அல்லது 'டயர் விஸ்கர்ஸ்' (Tire Whiskers) என்றும் சொல்வார்கள்.
இவை ஏன் உருவாகின்றன?
டயர்கள் ஒரு அச்சில் (Mold) வைத்துத் தான் தயாரிக்கப்படுகின்றன.
டயர் தயாரிப்பின் போது, கச்சா ரப்பர் அதிக வெப்பம் மற்றும் அழுத்தத்துடன் அச்சில் செலுத்தப்படுகிறது. ரப்பர் அச்சை முழுமையாக நிரப்பும்போது, உள்ளே இருக்கும் காற்று வெளியேற வேண்டும். காற்று சிக்கிக்கொண்டால் டயரில் குமிழ்கள் (Air Bubbles) உருவாகி டயர் பலவீனமடையும். இதற்காக அச்சில் மிகச்சிறிய துளைகள் இடப்பட்டிருக்கும். ரப்பர் அழுத்தப்படும்போது காற்று அந்தத் துளைகள் வழியாக வெளியேறும். காற்று வெளியேறும்போது, ஒரு சிறிய அளவு திரவ ரப்பரும் அந்தத் துளைகளுக்குள் நுழைகிறது. அது குளிர்ந்து கெட்டியான பிறகு, டயரை அச்சிலிருந்து எடுக்கும்போது முடிகள் போல ஒட்டிக்கொண்டு வருகின்றன.
இந்த முடிகள் வாகனத்தின் மைலேஜையோ அல்லது வேகத்தையோ அதிகரிக்காது. மேலும், டயரின் பிடிப்பு (Grip) அல்லது செயல்திறனுக்கும் இதற்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. இவை சாலைக்கும் டயருக்கும் இடையே ஏற்படும் சத்தத்தைக் குறைக்குவும் பயன்படாது.
ஒருவேளை இவை உங்களுக்குப் பிடிக்கவில்லை என்றால் உங்கள் கைகளாலேயே பிய்த்து எடுக்கலாம். ஆனால், கத்தரிக்கோல் அல்லது பிளேடு பயன்படுத்தும்போது கவனமாக இருக்க வேண்டும்; டயரின் முக்கியப் பகுதியில் கீறல் விழுந்தால் அது ஆபத்தாக முடியலாம். வண்டி ஓடத் தொடங்கிய சில நூறு கிலோமீட்டர்களில் சாலை உராய்வினால் இவை தானாகவே தேய்ந்து மறைந்துவிடும்.
ஒரு டயர் 'புதிய டயர்' என்பதற்கான மிகச்சிறந்த அடையாளம் இதுவே. பழைய டயர்களில் இவை தேய்ந்து போயிருக்கும். எனவே, நீங்கள் வாங்கும் டயர் பயன்படுத்தப்படாதது என்பதை உறுதிப்படுத்த இந்த 'முடிகள்' உதவுகின்றன.
டயரில் இருக்கும் இந்த ரப்பர் முடிகள் ஒரு 'தேவையற்ற ஆனால் தவிர்க்க முடியாத' கழிவுப் பொருள் (By-product) மட்டுமே. இது மைலேஜைத் தராது என்றாலும், உங்கள் டயர் பாதுகாப்பாகத் தயாரிக்கப்பட்டுள்ளது என்பதற்கான சாட்சி.
அடுத்த முறை டயர் வாங்கும்போது அந்த 'முடிகளை' செக் பண்ண மறக்காதீங்க!