
இந்திய சந்தையில் கடந்த காலங்களில் இருந்து பல்வேறு கார் நிறுவனங்கள் நுழைந்துள்ளன. ஆனால், அவற்றுள் நம் நாட்டு மார்க்கெட்டில் வெற்றி பெற்றவை என்று பார்த்தால் மிகவும் குறைவுதான்.
கடந்த 2024-ம் ஆண்டில், இந்திய கார்கள் மொத்த விற்பனை 43 லட்சமாக உயர்ந்துள்ளது. கடந்த 2023-ம் ஆண்டு, 41 லட்சத்து 9 ஆயிரம் கார்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டன. அதனுடன் ஒப்பிடுகையில், கடந்த ஆண்டு, கார் விற்பனை 4.5 சதவீதம் அதிகரித்துள்ளது. மாருதி, ஹூண்டாய், டாடா மோட்டார்ஸ், டயோடா கிர்லோஸ்கர், கியா என முன்னணி கார் நிறுவனங்கள் அனைத்தும் இதுவரை இல்லாத அளவுக்கு கார்களை விற்று சாதனை படைத்துள்ளன.
ஜப்பானை சேர்ந்த சுசூக்கி மோட்டார் கார்ப்பரேஷனை சேர்ந்த மாருதி சுசூகி நிறுவனம் இந்தியாவில் பல்வேறு கார் உற்பத்தி நிறுவனங்கள் இருந்தாலும் தனக்கென ஒரு தனி மார்க்கெட்டை உருவாக்கி வைத்துள்ளது. மாருதி சுசுகி நிறுவனம், கடந்த ஆண்டு 17 லட்சத்து 90 ஆயிரத்து 977 கார்களை விற்றுள்ளது. இதன்மூலம், 6 ஆண்டுகளுக்கு முன்பு படைத்த சாதனையை முறிடியத்துள்ளது.
ஹூண்டாய் கார்கள் மற்றும் விளையாட்டு பயன்பாட்டு வாகனங்கள் வாடிக்கையாளர்களுக்கு மலிவு விலையில் உயர் மட்ட உள்ளடக்கத்தையும் செயல்திறனையும் தொடர்ந்து வழங்குகின்றன. மாருதி சுஸுகியின் முக்கிய போட்டியாளரான இந்த நிறுவனம், கடந்தாண்டு 6 லட்சத்து 5 ஆயிரத்து 433 கார்களை விற்றுள்ளது. இது, முந்தைய ஆண்டை விட 3 ஆயிரம் கார்கள் அதிகம்.
நெக்ஸான், ஹாரியர், ஜாகுவார், விங்கர், சிக்னா, அல்ட்ரா, ஐ-பேஸ், இ-பேஸ், எவோக், வேலார் மற்றும் டிஸ்கவரி ஆகியவை டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் தயாரிப்புகளாகும். இந்த நிறுவனம், கடந்தாண்டு 5 லட்சத்து 65 ஆயிரம் கார்களை விற்றுள்ளது. தொடர்ந்து 4-வது ஆண்டாக அதிகமான கார்களை விற்பனை செய்துள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.
டொயோட்டா கிர்லோஸ்கர் நிறுவனம், கடந்தாண்டு 3 லட்சத்து 26 ஆயிரத்து 329 கார்களை விற்பனை செய்துள்ளது. இது, முந்தைய ஆண்டை விட 40 சதவீதம் அதிகமாகும்.
கொரிய நாட்டைச் சேர்ந்த கியா மோட்டார்ஸ் நிறுவனம், கடந்தாண்டு 2 லட்சத்து 55 ஆயிரத்து 38 கார்களை விற்பனை செய்துள்ளது. இது, முந்தைய ஆண்டை விட 6 சதவீதம் அதிகமாகும்.
ஜப்பான் நாட்டை சேர்ந்த நிசான் நிறுவனம் சென்னையில் அதன் தொழிற்சாலையை அமைத்து கார்களை விற்பனை செய்துவருகிறது. இந்த நிறுவனம் 108 நாடுகளில் அதன் கார்களை ஏற்றுமதி செய்துவருகிறது. நிசான் மோட்டார் நிறுவனம், கடந்த டிசம்பர் மாத கார் விற்பனையில் 51 சதவீத வளர்ச்சியை அடைந்துள்ளது.
உலகின் மிகப்பெரிய டிராக்டர் உற்பத்தியாளர் மற்றும் இந்தியாவில் பயன்பாட்டு வாகனங்கள் தயாரிப்பில் முன்னணியில் உள்ள மஹிந்திரா அண்ட் மஹிந்திரா நிறுவனம் டிசம்பர் மாதத்தில் கார் விற்பனையில் 18 சதவீத வளர்ச்சியை கண்டுள்ளது.
ஆடி நிறுவனம் கார்களின் வடிவமைப்பு மற்றும் தரத்துக்கு பெயர் பெற்றது. ஆடி கார்களின் விலை அதிகம் என்றாலும் அது பார்ப்பதற்கு பயணிப்பதற்கும் மிக அற்புதமாக இருப்பதால் அதை வாங்குவோரின் எண்ணிக்கையும் அதிகமாக இருக்கிறது. இதனால் இந்தியாவில் ஆடி கார் விற்பனையும் அதிகரித்து வருகிறது. அதே சமயத்தில், புகழ்பெற்ற ஆடி கார் விற்பனை கடந்தாண்டு சரிவை சந்தித்துள்ளது. 2024-ம் ஆண்டில் 5 ஆயிரத்து 816 கார்களை மட்டுமே விற்பனை செய்துள்ளது. இது, 2023-ம் ஆண்டை விட 26 சதவீதம் குறைவாகும்.