

மனிதன் நிலவில் (Moon) காலடி எடுத்து வைத்தது ஒரு மிகப்பெரிய சாதனை என்று நாம் வரலாற்றில் படித்திருப்போம். 1969-ல் நீல் ஆம்ஸ்ட்ராங் நிலவில் இறங்கியபோது உலகமே வியந்து பார்த்தது. ஆனால், 1972-ல் சென்ற அப்பல்லோ 17 விண்கலத்திற்குப் பிறகு, கடந்த 50 ஆண்டுகளாக மனிதர்கள் யாரும் நிலவுக்குச் செல்லவில்லை என்பது பலருக்கும் ஆச்சரியமாக இருக்கலாம்.
தொழில்நுட்பம் இவ்வளவு வளர்ந்த பிறகும், நாம் ஏன் மீண்டும் அங்கு செல்லவில்லை என்ற சந்தேகம் பலருக்கும் எழுகிறது. வேற்றுகிரகவாசிகள் தடுத்துவிட்டார்களா அல்லது வேறு ஏதேனும் மர்மம் இருக்கிறதா என்று யோசித்தால், அதற்கான பதில் மிகவும் சப்பையானது. அதுதான் 'பணம்'. ஆம், கல்லாவில் பணம் இல்லாததால்தான் நிலவுப் பயணம் நின்றது என்றால் உங்களால் நம்ப முடிகிறதா.
பணத்தை விழுங்கும் விண்வெளி!
கென்னடி ஆட்சி காலத்தில் நிலவுக்கு மனிதனை அனுப்பும் திட்டத்தைத் தீட்டியபோது, அவர்கள் கணித்த பட்ஜெட் சுமார் 7 பில்லியன் டாலர்கள். ஆனால் கணக்குப் போட்டுப் பார்த்ததில், அது கடைசியில் 20 பில்லியன் டாலராக எகிறிவிட்டது. அந்தக் காலத்தில் அது மிகப்பிரம்மாண்டமான தொகை. இன்றைய காலகட்டத்தில் எந்த ஒரு அரசாங்கமும் வெறும் புகழுக்காகவும், வரலாற்றுப் புத்தகத்தில் இடம் பிடிப்பதற்காகவும் இவ்வளவு பெரிய தொகையைச் செலவழிக்கத் தயாராக இல்லை. மக்களின் வரிப்பணத்தை நிலவில் கொட்டுவதற்குப் பதில், பூமியில் உள்ள பிரச்சனைகளுக்குச் செலவிடலாம் என்று நாடுகள் நினைக்கின்றன.
1960களில் அமெரிக்காவிற்கும் ரஷ்யாவிற்கும் இடையே ஒரு பனிப்போர் நடந்து கொண்டிருந்தது. யார் பெரியவர் என்று நிரூபிக்க வேண்டிய கட்டாயம் அன்று இருந்தது. அதனால் போட்டி போட்டுக்கொண்டு விண்வெளிக்குச் சென்றார்கள். ஆனால் இன்று அந்த நிலைமை இல்லை. இப்போது நாடுகளின் கவனம் ராணுவத்தைப் பலப்படுத்துவதிலும், உள்நாட்டுக் கல்வியை வளர்ப்பதிலுமே உள்ளது. நாசாவின் பட்ஜெட்டும் முன்பை விடக் கணிசமாகக் குறைக்கப்பட்டுவிட்டது. எனவேதான் மனிதர்கள் நிலவில் நடக்கும் புதிய புகைப்படங்களை நம்மால் பார்க்க முடியவில்லை.
ரோபோக்களே பெஸ்ட்!
மனிதனை நிலவுக்கு அனுப்புவது என்பது சாதாரண விஷயம் அல்ல. அவர்களுக்குத் தேவையான உணவு, தண்ணீர், சுவாசிக்க ஆக்சிஜன் என அனைத்தையும் சுமந்து செல்ல வேண்டும். மேலும் அவர்களை உயிருடன் பூமிக்குத் திருப்பிக் கொண்டுவர வேண்டும். இது மிகவும் செலவு பிடிக்கும் விஷயம். ஆனால் ரோபோக்களுக்கு இந்தத் தேவைகள் எதுவும் இல்லை. அவை சலிக்காமல் உழைக்கும், சாப்பாடு கேட்காது, சம்பளம் கேட்காது. அதனால்தான், தற்போதைய சூழலில் ரோபோக்களை அனுப்புவதே புத்திசாலித்தனம் என்று விஞ்ஞானிகள் கருதுகிறார்கள்.
சிக்கல்!
2026-ம் ஆண்டு நிலவை நோக்கிய பயணம் மீண்டும் சூடுபிடித்துள்ளது. ஆனால் இம்முறை ஒரு சின்ன மாற்றம். நாசாவின் ஆர்டெமிஸ் 2 திட்டம் மூலம் விண்வெளி வீரர்கள் நிலவுக்குச் செல்வார்கள். ஆனால் அவர்கள் நிலவில் தரையிறங்க மாட்டார்கள். நிலவைச் சுற்றி வந்து வேடிக்கை பார்த்துவிட்டு பூமிக்குத் திரும்புவார்கள். இது கிட்டத்தட்ட ஒரு ஜன்னல் வழியாக பேக்கரியைப் பார்ப்பது போன்றது. இந்த 10 நாள் பயணம், ஓரியன் விண்கலத்தையும் ராக்கெட்டையும் சோதித்துப் பார்ப்பதற்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.
பணமும், அரசியல் முன்னுரிமைகளும் மாறும் வரை நிலவு தனிமையில்தான் இருக்கும். மனிதன் மீண்டும் அங்கு செல்வான் என்பதில் சந்தேகம் இல்லை, ஆனால் அது எப்போது நடக்கும் என்பதைத் தீர்மானிப்பது அறிவியலை விடப் பொருளாதாரமே. அதுவரை நாம் பூமியிலிருந்தே நிலவை ரசித்துக் கொள்வோம்.