

தற்போது டீக்கடை முதல் பெரிய அங்காடிகள் வரை ஜீ.பே., போன் பே, பீம் போன்ற யூ.பி.ஐ. செயலிகளில் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை இயல்பாகிவிட்டது. மக்களுக்கு அது பெரும் சௌகரியமும்கூட. முக்கியமாக, அதிகப் பணத்தை எடுத்துச்செல்லும்போது ஏற்படக் கூடிய பிக்பாக்கெட், வழிப்பறித் திருட்டுகள், பணம் தொலைந்து போவது ஆகிய அபாயங்களிலிருந்து தற்காத்துக்கொள்ள இது சிறந்தது.
சில்லறை இல்லாத சிக்கல்களுக்கும் இது நல்ல தீர்வு. ஆனால், அதேசமயம் இதில் இணைய வழித்திருடர்கள் குறிப்பிட்ட தொகையையோ, சேமிப்பின் மொத்த தொகையையுமோ திருடவும் வாய்ப்புள்ளது.
இந்தியாவில் UPI மோசடிகள் ஆண்டுதோறும் அதிகரித்து வருகின்றன. 2024-25 ஆம் ஆண்டில் மட்டும் 12.64 லட்சம் யூ.பி.ஐ. மோசடி சம்பவங்கள் பதிவாகி, மொத்த இழப்பு ரூ.981 கோடியை எட்டியுள்ளது. இந்த எண்ணிக்கை, விழிப்புணர்வு மிகவும் அவசியம் என்பதைத் தெளிவாகக் காட்டுகிறது.
யூ.பி.ஐ. பயன்படுத்துகிறவர்களைக் குறிவைத்து, வாட்ஸாப் மூலம் நிறைய திருட்டுகள், பலவிதங்களில் நடக்கின்றன. வாட்ஸாப்பில் இணைப்புகள், போட்டோக்கள், டிஜிட்டல் அழைப்பிதழ்கள், பரிசு விழுந்திருக்கிறது, காவல்துறை அபராதம் என்பது போன்ற பல வகை மோசடிகள் மூலம் ஏமாற்றி, வங்கி இணைப்பிலிருந்து மொத்தப் பணத்தையும் திருடுகின்றனர்.
குறிப்பாக, ஏபிகே (APK) கோப்புகள் மூலம் வரும் "திருமண அழைப்பிதழ்", "கேஒய்சி புதுப்பிப்பு", "பார்சல் நிலுவையில் உள்ளது" போன்ற செய்திகளில் உள்ள இணைப்புகளை ஒருபோதும் கிளிக் செய்யக்கூடாது. இந்தக் கோப்புகள் கேமரா, வங்கி ஆப்கள், கூகுள் பே உள்ளிட்டவற்றை அணுகும் அனுமதியை மோசடியாளர்களுக்கு வழங்கிவிடும்.
காவல் துறையினர், வங்கித் தரப்பினர், சமூக ஆர்வலர்கள் உள்ளிட்ட பலரும் இது குறித்து எச்சரிக்கின்றனர். யூ ட்யூபில் விழிப்புணர்வு & தற்காப்பு நடவடிக்கை டிப்ஸ் காணொளிகள் நிறைய உள்ளன.
முக்கியமான புதிய விதி: தெரியாத நபருக்கு ரூ.10,000-க்கு மேல் யூ.பி.ஐ. மூலம் பணம் அனுப்பினால், அந்தப் பரிவர்த்தனை உடனடியாக நிறைவேறாமல் ஒரு மணி நேரம் நிலுவையில் இருக்கும் என்று ரிசர்வ் வங்கி பரிந்துரைத்துள்ளது. அந்த ஒரு மணி நேரத்திற்குள் அது மோசடி என்று தெரிந்தால், பணத்தை ரத்து செய்யலாம். இது மோசடியாளர்களிடம் பணம் செல்வதைத் தடுக்க உதவும் ஒரு முக்கியமான பாதுகாப்பு அமைப்பாகும்.
யூ.பி.ஐ. செயலிகளைப் பயன்படுத்தாமலே இருந்தால் மிக நல்லது. வசதி படைத்த சிலர் இந்த மோசடிகள் குறித்த எச்சரிக்கையினாலேயே அவற்றைப் பயன் படுத்துவதில்லை என்பது கவனிக்கத்தக்கது. இன்றைய சூழலில் பெரும்பான்மையான மக்களுக்கு யூ.பி.ஐ. செயலிப் பயன்பாடு தவிர்க்க முடியாததாக ஆகிவிட்டது. எனவே, அதைப் பயன்படுத்துவது தவறல்ல. தற்காப்போடும், விழிப்புணர்வோடும் இருந்து அதைப் பயன்படுத்துவது நல்லது.
யூ.பி.ஐ. பயனர்களின் எச்சரிக்கைக்காக சில முக்கிய குறிப்புகள் கீழே தரப்படுகின்றன.
• ஜீ.பே., போன் பே போன்ற யூ.பி.ஐ. செயலிகளை, அதிகத் தொகை இருப்பில் உள்ள / அவ்வப்போதாவது அதிகத் தொகை புழங்கக்கூடிய முதன்மை அக்கௌண்டில் பயன்படுத்த வேண்டாம்.
• இப்போது அதிகத்தொகை இல்லை எனினும், அதிகத் தொகை வரும்போது - அது குறுகிய காலத்துக்கு அல்லது ஓரிரு மணி நேரங்களில்தான் அந்த அக்கௌண்டில் இருக்கும் எனினும் - அந்த சமயம் பார்த்து ஸ்கேமர்கள் மோசடி செய்து களவாடக் கூடும்.
• முதன்மை அக்கௌண்டில் யூ.பி.ஐ. இணைப்பு இருந்தால் அதை நீக்கிவிட்டு, குறைந்தபட்சத் தொகை மட்டுமே வைத்திருக்கும்படியான வேறொரு வங்கிக் கணக்கை (ஏற்கனவே உள்ளது / புதிதாக தொடங்கி) யூ.பி.ஐ.க்குப் பயன்படுத்தவும். இதனால் ஒருவேளை மோசடிக்கு ஆளானாலும் பண இழப்பு குறைவாகவே இருக்கும்.
• எப்போதாவது கூடுதல் பணம் அனுப்ப வேண்டிய சூழல் ஏற்பட்டால், அப்போது மட்டும் முதன்மைக் கணக்கிலிருந்து இந்தச் சிறிய கணக்கிற்கு வேறு வகையில் பணத்தைச் செலுத்தி, பிறகு அதிலிருந்து யூ.பி.ஐ. பரிவர்த்தனை செய்யலாம்.
• தெரியாத எண்களிலிருந்து வரும் 'Screen Share' கோரிக்கைகளை ஒருபோதும் ஏற்க வேண்டாம். மேலும், பணம் பெறுவதற்கு யூ.பி.ஐ. பின் (PIN) எண்ணை உள்ளிடத் தேவையில்லை என்பதை நினைவில் கொள்க. யாராவது பணம் அனுப்புகிறேன் என்று கூறி உங்களைப் பின் எண்ணை உள்ளிடச் சொன்னால் அது நூறு சதவீதம் மோசடி.
யூ.பி.ஐ. பின் என்பது பணம் அனுப்புவதற்கு மட்டுமே; பணம் பெறுவதற்கு அல்ல. யாராவது "பணம் பெற" பின் எண்ணை உள்ளிடச் சொன்னால், அது உங்கள் கணக்கிலிருந்து பணம் எடுக்கும் முயற்சியாகும்.
• போன் செட்டிங்ஸ், யூ.பி.ஐ. செட்டிங்ஸ், வாட்ஸாப் செட்டிங்ஸ்களில் தேவையான தற்காப்புகளை அறிந்துகொண்டு அவற்றைச் செய்துகொள்ளவும்.
• டிஜிட்டல் பண மோசடிகள் நடந்தால் உடனடியாக சைபர் க்ரைம் போலீஸிற்குத் தகவல் தெரிவிக்கவும், வங்கிக்குத் தகவல் தெரிவிக்கவும் வேண்டும். பணம் திருடப்பட்ட 24 மணி நேரத்திற்குள் (Golden Hours) தேசிய சைபர் க்ரைம் உதவி எண்ணான 1930-க்கு அழைத்துப் புகார் அளித்தால், திருடப்பட்ட பணம் மோசடியாளரின் கணக்கிலிருந்து எடுக்கப்படாமல் முடக்கப்பட அதிக வாய்ப்புள்ளது. அதற்கான எண்களை போனில் சேமித்து வைத்திருக்கவும். மேலும், ரிசர்வ் வங்கியின் விதிகளின்படி, மோசடி நடந்து மூன்று வேலை நாட்களுக்குள் புகார் அளிப்பது நல்லது.
கூடுதல் விழிப்புணர்வுக் குறிப்பு: சில மாதங்களுக்கு முன்பு "டிஜிட்டல் கைது" (Digital Arrest) எனும் மோசடி பரவலாக நடந்துகொண்டிருந்தது. போலீஸ் அல்லது சிபிஐ அதிகாரி என்ற போர்வையில் வீடியோ காலில் இணைந்து, பணம் பறிக்கிற மோசடி அது. இந்தியாவில் "டிஜிட்டல் கைது" என்ற சட்டப்பூர்வ நடைமுறையே கிடையாது. யாராவது போலீஸ் என்று கூறி வீடியோ காலில் பணம் கேட்டால், உடனடியாக அழைப்பைத் துண்டித்துவிடுங்கள்.