

நம் வீடுகளில் பலகாரங்கள் சுட்ட பிறகு, மீந்துபோன அந்த எண்ணெயை பெரும்பாலும் மீண்டும் பயன்படுத்தாமல் சிங்க்கில் கொட்டுவோம் அல்லது குப்பையில் ஊற்றுவோம். இன்னொரு பக்கம், நாம் கடைக்குச் செல்லும் போதெல்லாம் 'பிளாஸ்டிக் பைகளைத் தவிர்க்கவும்' என்ற வாசகத்தைப் பார்க்கிறோம். ஆனால், இந்த இரண்டு விஷயங்களுக்கும் ஒரு ஆச்சரியமான தொடர்பு இருக்கிறது.
பூமிக்கு பாரமாக இருக்கும் பிளாஸ்டிக் கழிவுகளுக்கு மாற்றாக, நாம் தூக்கி எறியும் சமையல் எண்ணெயைப் பயன்படுத்த முடியும் என்ற வியக்கத்தக்க உண்மையை அறிவியல் உலகம் கண்டுபிடித்துள்ளது.
வழக்கமாக நாம் பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்கள் மற்றும் பாலித்தீன் பைகள் அனைத்தும் பெட்ரோலியம் சார்ந்த படிம எரிபொருட்களில் இருந்துதான் தயாரிக்கப்படுகின்றன. இவை சுற்றுச்சூழலுக்கு எவ்வளவு கேடு என்பதை நாம் அறிவோம். இந்த நிலையில்தான் தென் கரோலினா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் ஒரு மாற்று யோசனையை முன்னெடுத்தனர். சமையல் எண்ணெயில் இருக்கும் சில மூலக்கூறுகள், பிளாஸ்டிக் உருவாக்கத் தேவைப்படும் வேதியியல் அமைப்பை ஒத்திருப்பதை அவர்கள் கண்டறிந்தனர்.
குறிப்பாக, எண்ணெயில் உள்ள கொழுப்பு அமிலங்கள், பிளாஸ்டிக் தயாரிப்புக்குத் தேவையான ஹைட்ரோகார்பன் சங்கிலிகளைப் போலவே செயல்படுகின்றன. இதை வைத்து ஆய்வு செய்தபோது, பிளாஸ்டிக்கிற்கு இணையான உறுதியும், வளைந்து கொடுக்கும் தன்மையும் கொண்ட ஒரு புதிய பொருளை அவர்களால் உருவாக்க முடிந்தது.
'மேஜிக்' பசை!
இந்த ஆராய்ச்சியின் போதுதான் அந்தச் சுவாரஸ்யமான விஷயம் நிகழ்ந்தது. எண்ணெயை வேதியியல் மாற்றம் செய்து பாலிமர்களை உருவாக்கும்போது, சில கலவைகள் அதீத ஒட்டும் தன்மையுடன் இருப்பதை விஞ்ஞானிகள் கவனித்தனர். இது சாதாரண பசை அல்ல; கடைகளில் நாம் வாங்கும் வணிகரீதியான பசைகளை விடப் பல மடங்கு வலிமையானது.
இதை நிரூபிக்க அவர்கள் செய்த சோதனைதான் ஹைலைட். துருப்பிடிக்காத இரண்டு எஃகு தகடுகளை எடுத்துக் கொண்டார்கள். அவற்றின் நடுவில் இந்த 'எண்ணெய் பசையை' தடவி ஒட்டினார்கள். பின்னர், அந்தத் தகடுகளைக் கொண்டு சுமார் 1,500 கிலோ எடையுள்ள ஒரு செடான் ரக காரை இழுத்துப் பார்த்தனர்.
என்ன ஆச்சரியம்! அந்தப் பிணைப்பு விடுபடவே இல்லை. அந்த அளவுக்கு இரும்பு பிடிப்பாக அது ஒட்டிக் கொண்டது. நாம் கைவினைப் பொருட்களுக்குப் பயன்படுத்தும் Hot Glue Gun போலவும் இதைப் பயன்படுத்தலாம் என்பது கூடுதல் சிறப்பு.
உலகம் முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் கோடிக்கணக்கான லிட்டர் சமையல் எண்ணெய் கழிவாக வெளியேற்றப்படுகிறது. இதை மறுசுழற்சி செய்வது பெரும் சவாலாக இருந்து வருகிறது. ஆனால், இந்த புதிய கண்டுபிடிப்பின் மூலம் அந்தக் கழிவுப் பொருளே ஒரு மூலப்பொருளாக மாறுகிறது.
இதில் உள்ள மிக முக்கியமான விஷயம் என்னவென்றால், பெட்ரோலிய பிளாஸ்டிக் போல மட்காமல் கிடக்கும் ஆபத்து இதில் இல்லை. இதில் உள்ள Ester bonds, இந்தப் பொருளை எளிதில் மட்கக்கூடியதாக மாற்றுகின்றன. வருங்காலத்தில், நம் வீட்டுச் சுவரில் ஆணியடிக்காமல், சமையல் எண்ணெயில் செய்த பசையை வைத்து டிவியை ஒட்டினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை!