
நானோ ரோபோக்கள் (Nanorobots) என்பது நானோமீட்டர் அளவில், அதாவது ஒரு மீட்டரில் பில்லியனில் ஒரு பங்கு அளவில் இருக்கும் ரோபோக்கள் ஆகும். இவை மிகச்சிறிய அளவிலான பொருட்களை கையாளவும், குறிப்பிட்ட பணிகளைச் செய்யவும் வடிவமைக்கப்பட்டுள்ளன. மருத்துவத் துறையில் நானோ ரோபோக்களின் பயன்பாடுகள் அதிகரித்து வருகின்றன. இவை மருத்துவத் துறையில், குறிப்பாக நோய்களைக் கண்டறிதல், சிகிச்சை அளித்தல் போன்றவற்றில் பயன்படுகின்றன. இவற்றால் புற்றுநோய் செல்களை குறிவைத்து தாக்கி அழித்தல், மாரடைப்பு போன்ற இதய நோய்களைக் கண்டறிதல், இதய அடைப்புகளை நீக்குதல் மற்றும் காயங்களை ஸ்மார்ட் பேட்ச் மூலம் குணப்படுத்துதல் போன்ற பல மருத்துவப் பணிகளை செய்ய முடியும்.
மருத்துவ சிகிச்சைக்கு ரோபோக்களை பயன்படுத்தும் ஆராய்ச்சிகளில் அதிநவீன கண்டுபிடிப்பாக தற்போது மைக்ரோ அல்லது நானோ ரோபோக்கள் உள்ளன.
இந்த சிறிய ரோபோக்கள் என்பது எறும்பின் உருவத்தைவிட சிறியதாக இருக்கும். இது நம் உடலுக்குள் ஆழமான அல்லது அணுக முடியாத பகுதிகளுக்குள் ஊடுருவி, நோயறிதல், மருந்து விநியோகம் மற்றும் அறுவை சிகிச்சை போன்றவற்றை எளிதாக செய்து விடுகின்றன.
உதாரணமாக, நோயறிதல் துறையில், இந்த ரோபோக்கள் ரத்த குளுக்கோஸ் உள்ளிட்டவற்றை கணிக்க பயன்படுகின்றன.
அறுவை சிகிச்சை துறையில், இந்த நானோ ரோபோக்கள், மனித அறுவை சிகிச்சை நிபுணர்களால் அணுக முடியாத திசுக்களில் ஏற்படும் பாதிப்புகளை அறுவை சிகிச்சை செய்ய பயன்படுகின்றன.
எடுத்துக்காட்டாக, நானோ ரோபோக்கள், இதயத்தின் சிறிய இரத்த நாளங்கள் வழியாக பயணித்து, நோய்களைக் கண்டறிந்து சிகிச்சையளிக்கின்றன. இது போன்ற ரோபோக்கள், சுழல் ரோபோக்கள் என்றும் அழைக்கப்படுகின்றன.
இந்த ரோபோக்கள் வருகையால் தற்போது துல்லியமான, தெளிவான சிகிச்சை செயல்முறை அதிகரித்துள்ளது.
குறிப்பாக, உலகளவில் பல்வேறு வளரும் நாடுகளில் இதயம் சார்ந்த நோய்கள் அதிகரித்து வருகின்றன. சிகிச்சை செலவு சாதாரண மக்களுக்கு சமாளிக்க முடியாத அளவுக்கு உள்ளது. இந்த நானோ ரோபோக்களை, இதய நோய் போன்றவற்றுக்கு பயன்படுத்தும்போது சிகிச்சை நேரமும், செலவும் மிகவும் குறைந்த அளவில் இருக்கும் என்று டாக்டர்கள் கூறுகின்றனர்.
DNA மூலக்கூறுகளைப் பயன்படுத்தி நானோ ரோபோக்களை உருவாக்கும் ஆராய்ச்சிகளும் நடைபெறுகின்றன. இந்த ரோபோக்கள், குறிப்பிட்ட பொருட்களை ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு கொண்டு செல்ல உதவும்.
நவீன பொறியியலின் அதிசயமாக கருதப்படும் ரோபோக்கள், மருத்துவ உலகில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்கிறார்கள், நிபுணர்கள்.