
ரயில் பயணங்களில் தொழில்நுட்பம் பல வழிகளில் பாதுகாப்பையும், வசதியையும் அதிகரித்துள்ளது. முன்பதிவு செய்வது, தகவல் தொடர்பு, ரயில் செயல்பாடுகள் என அனைத்து அம்சங்களிலும் தொழில்நுட்பம் சிறந்த பங்களிக்கிறது.
1. ஆன்லைன் முன்பதிவு
ரயில் டிக்கெட்டுகளை ஆன்லைனில் முன்பதிவு செய்வது வசதியாகவும் அதே சமயம் எளிதாகவும் உள்ளது. IRCTC போன்ற தளங்கள் மூலம் பயண நேரத்தை வீணாக்காமல் எங்கிருந்தும் நம்மால் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய முடிகிறது. இணைய தளங்கள், மொபைல் செயலிகள் மூலம் முன்பதிவு செய்வது எளிமையாக்கப்பட்டுள்ளது. டிக்கெட் சரிபார்ப்பு முறைகளும் டிஜிட்டல் மயமாக்கப்பட்டுள்ளது. இதனால் பயணிகளின் நேரம் மிச்சமாகிறது.
2. செயலி செயல்திறன்
இந்திய ரயில்வேயின் அதிகாரப்பூர்வமான செயலியான 'ரயில் மித்ரா' போன்ற செயலிகள் பயணிகளுக்கு ரயில் குறித்த நேரலை தகவல்கள், இருக்கை கிடைக்கும் தன்மை, உணவுகளை ஆர்டர் செய்வது மற்றும் பிற சேவைகளை சிறப்பாக வழங்குகின்றன. பயணிகளுக்கு ரயில் நிலையங்கள், ரயில்களின் நிலை, தாமதம் பற்றிய தகவல்கள் உடனடியாக கிடைக்கின்றன.
3. ரயில் செயல்பாடுகள்
ரயில்களின் இயக்கத்தில் தொழில்நுட்பம் முக்கிய பங்கு வகிக்கிறது. ரயில்களின் வேகத்தை கட்டுப்படுத்தவும், பாதையை கண்காணிக்கவும், ரயில் பாதைகளின் பராமரிப்பு பணிகளை கண்காணிக்கவும் தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது. ரயில் பாதைகள் மற்றும் சிக்னலிங் அமைப்புகளில் மேம்பட்ட தொழில்நுட்பங்களை பயன்படுத்துவதன் மூலம் விபத்துகள் தடுக்கப்படுகின்றன. தானியங்கி அமைப்பு, AI மற்றும் மேம்பட்ட ஆய்வு அமைப்புகள் ரயில்களின் செயல் திறனை மேம்படுத்துகின்றன. இதனால் பயண நேரம் வெகுவாக குறைகிறது.
4. பயணிகள் பாதுகாப்பு
ரயில்களில் அதிநவீன பாதுகாப்பு அம்சங்களான சிசிடிவி கேமராக்கள், பயோமெட்ரிக் அமைப்புகள் போன்றவை பொருத்தப்பட்டுள்ளன. இது பயணிகளுடைய பாதுகாப்பை உறுதி செய்கிறது. அத்துடன் ரயில்களில் உள்ள இருக்கைகள் மற்றும் வசதிகள் மேம்படுத்தப்பட்டுள்ளன.
ரயில் பயணங்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த இந்திய ரயில்வே பல தொழில்நுட்பங்களை பயன்படுத்துகிறது. அவற்றில் முக்கியமானது கவச் (Kavach). கவச் என்பது ஒரு தானியங்கி ரயில் பாதுகாப்பு அமைப்பாகும். இது மோதல்களை தடுக்கவும், அதிக வேகத்தில் இயங்கும் ரயில்களை நிறுத்தவும் வடிவமைக்கப்பட்டுள்ளது. அபாயகரமான சூழ்நிலைகளில் தானாகவே ரயிலை நிறுத்துகிறது. இதனால் விபத்துக்கள் தவிர்க்கப்படுகின்றன.
5. தகவல் தொடர்பு
ரயில்களில் வைஃபை வசதி, மொபைல் சார்ஜிங் பாயின்ட்கள் போன்றவை பயணிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. அத்துடன் பயணத்தின் பொழுது தகவல்களைப் பெறுவதற்கும், தொடர்பில் இருப்பதற்கும் இவை பெரிதும் உதவுகின்றன. ரயில்வே துறையில் தொழில்நுட்பம் பயணிகளின் பாதுகாப்பை மேம்படுத்துவதுடன் பல வசதிகளையும் செயல்படுத்தி உள்ளது. ரயில் செயல்பாடுகளையும் எளிதாக்கி, பாதுகாப்பு மற்றும் செயல்திறன் ஆகியவற்றையும் அதிகரித்துள்ளது.
6. எதிர்கால ரயில் பயணம்
ஹைப்பர்லூப் போன்ற அதிவேக ரயில் தொழில்நுட்பங்கள் ரயில் பயணத்தின் எதிர்காலமாக கருதப்படுகிறது. இவை ரயில்களின் வேகத்தை அதிகரிக்க உதவும். ரயில்வே துறையில் செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் இயந்திர கற்றல் தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதன் மூலம் ரயில்களின் செயல்பாடுகளை மேம்படுத்தவும், பயணிகளின் தேவைகளை பூர்த்தி செய்யவும் உதவும்.
IoT (Internet of Things) சென்சார்கள் மூலம் ரயில்களின் செயல்பாடுகளை கண்காணிக்க முடியும். இதனால் ரயில்களின் பாதுகாப்பை மேம்படுத்த முடியும்.