பூமி உளுந்து வடை வடிவத்தில் இருந்தால் என்ன ஆகும்? அடக்கடவுளே! 

What if Earth Was Shaped Like Medhu Vadai?
What if Earth Was Shaped Like Medhu Vadai?

அழகாக உருண்டை வடிவத்தில் இருக்கும் நமது பூமி, ஒருவேளை உளுந்து வடை வடிவத்திற்கு மாறினால் என்ன ஆகும் என்பதை கற்பனை செய்து பாருங்கள். அத்தகைய சூழ்நிலையில் ஏற்படும் சாதகமான தாக்கங்கள் என்னென்ன என்பதை இப்பதிவில் பார்க்கலாம். இது ஒரு கற்பனையான பதிவு என்பதால், யாரும் இதை சீரியஸாக எடுத்துக்கொள்ள வேண்டாம். 

முதலில் பூமியானது உளுந்து வடை வடிவத்தில் இருந்தால் அதன் வித்தியாசமான வடிவத்தை தக்க வைக்க நமது தற்போதைய பூமியின் சுழற்சி வேகத்தை விட வேகமாக சுழல வேண்டும். இந்த விரைவான சுழற்சியின் விளைவாக ஒரு நாள் என்பது 2 மணி நேரம் 50 நிமிடங்களாக மட்டுமே நீடிக்கும். இல்லை நாங்கள் 24 மணி நேரமாகதான் ஒரு நாளை எடுத்துக் கொள்வோம் என நீங்கள் சண்டைக்கு வந்தால், ஒரே நாளில் குறைந்தது எட்டு சூரிய உதயங்களையும், சூரிய அஸ்தமனங்களையும் நீங்கள் கண்டுகளிப்பீர்கள். இது நமது அன்றாட செயல்களையும், வாழ்க்கை முறைகளையும் முற்றிலுமாக மாற்றிவிடும். 

உளுந்து வடை வடிவத்தில் இருக்கும் பூமியின் ஈர்ப்பு விசையும் முற்றிலுமாக மாறுபட்டதாக இருக்கும். அதன் வடிவம் முரண்பட்டதாக இருப்பதால் இடத்தைப் பொறுத்து ஈர்ப்பு விசை மாறுபடும். குறிப்பாக துருவப் பகுதிகளில் நாம் தற்போது அனுபவிக்கும் ஈர்ப்பு விசையில் 0.65 மடங்கு மட்டுமே இருக்கும். அதேசமயம் பூமத்திய ரேகையில் 0.3 மடங்கு மட்டுமே இருக்கும் என்பதால், பூமத்திய ரேகைக்கு அருகில் வாழும் மக்கள் துருவப் பகுதிகளுக்கு அருகில் இருப்பவர்களை விட எடை குறைவாக இருப்பார்கள். 

உளுந்த வடையின் வித்தியாசமான வடிவமானது பூமியில் உள்ள கடல் மற்றும் அலைகளை முற்றிலுமாக பாதிக்கும். பெருங்கடல்களில் அதிகப்படியான அலை ஏற்படும் என்பதால் கடலோரத்தில் வசிப்பது சாத்தியமற்றதாக இருக்கும். மேலும் அதிக குளிர்ந்த துருவப் பகுதிகள் மற்றும் அதிக வெப்பமான பூமத்திய ரேகை பகுதிகள் என காலநிலை தற்போது நமது பூமியில் இருப்பது போலவே இருந்தாலும், தனித்துவமான வடிவம் காரணமாக மிக மோசமான வானிலை நிகழ்வுகளை நாம் சந்திக்க நேரிடலாம். 

இந்த வித்தியாசமான பூமியில் வாழ்வது அவ்வளவு எளிதானதல்ல. முதலில் அதன் வேகமான சுழற்சி காரணமாக உயிரினங்கள் வாழ்வது கடினமாக இருக்கும். ஏனெனில் பல இனங்களின் இனப்பெருக்கம், இடப்பெயர்வு மற்றும் வேட்டையாடுதல் சந்திரன் மற்றும் சூரியனைப் பொறுத்து அமைவதால், இந்த வித்தியாசமான வடிவமைப்பு சுற்றுச்சூழல் அமைப்புகளை சீர்குலைத்து பல மாற்றங்களுக்கு வழிவகுக்கும். 

இதையும் படியுங்கள்:
ஒருவேளை சூரியக் குடும்பத்தில் ஒரே கிரகமாக பூமி மட்டும் தனியாக இருந்தால்?
What if Earth Was Shaped Like Medhu Vadai?

அதே நேரம் இத்தகைய பூமிக்கு ஏற்ப மனிதர்கள் உயிர் வாழும் சூழல் உருவாகலாம். மனிதர்கள் மற்றும் மற்ற உயிரினங்களின் உடல் அமைப்புகள் மாறுபடலாம். இத்தகைய தனித்துவமான நிலைமைகளை சமாளிக்க பல்வேறு தொழில்நுட்பங்களையும் கருவிகளையும் மக்கள் உருவாக்கும் வாய்ப்புள்ளது. மேலும், முற்றிலும் புதுமையான வடிவத்தில் கண்டங்கள், மலைத்தொடர்கள் மற்றும் உயிரினங்கள் வாழ்வதற்கான வாழ்விடங்கள் உருவாகும். 

இதுபோன்ற ஒரு உலகம் எப்படி இருக்கும் என்பதை நினைத்துப் பார்க்கவே தலை சுற்றுகிறது. இப்படி ஒரு உலகம் இருப்பதற்கு சாத்தியக் கூறுகள் இல்லாவிட்டாலும், அப்படி இருந்தால் என்ன ஆகும் என்பதை நாம் ஆராய்ந்து பார்ப்பது நமது சொந்த கிரகத்தின் தன்மையை புரிந்துகொண்டு, நாம் சிறப்பாக வாழ உதவும். எனவே நமக்கு கிடைத்த பூமி என்கிற பொக்கிஷத்தை பாதுகாக்க வேண்டியது நம் அனைவரது கடமை. 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com