
பொதுவாக ஒரு விமான விபத்து ஏற்பட்டால் அனைவரும் பேசக் கூடிய ஒரு விஷயம், விமானத்தின் கருப்பு பெட்டியைப் பற்றி தான். சமீபத்தில் அகமதாபாத்தில் நிகழ்ந்த விமான விபத்து துயரத்தில் கூட கருப்புப் பெட்டி பற்றி அதிகம் பேசப்பட்டது. பைலட் அறையில் விமானிகளுக்கு இடையேயான உரையாடல்களையும், விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டுடன் அறையுடன் அவர்கள் தொடர்பு கொண்டு பேசிய உரையாடல்களையும் பதிவு செய்ய காக்பிட்டில் ஒரு வாய்ஸ் ரிகார்டர் (CVR) எப்போதும் இருக்கும்.
மேலும் விமானம் பறக்கும் உயரம், காற்று வேகம், வானிலை, விமானத்தின் வேகம் ஆகிய தரவுகளை பதிவு செய்ய ஃப்ளைட் டேட்டா ரெக்கார்டர் (FDR) செயல்படுகிறது. இந்த அமைப்புகள் அனைத்தும் கருப்பு பெட்டிக்குள் தகவல்களை சேகரித்து வைக்கின்றன. ஒரு விமானம் விபத்துக்குள்ளாகி விட்டால், அதற்கான காரணங்களை கண்டறிய கருப்பு பெட்டிகள் பயன்படுத்தப் படுகின்றன. ஆனால், கருப்புப் பெட்டிகள் என்று அழைக்கப்படும் பெட்டிகள் எப்போதும் ஆரஞ்ச் வண்ணத்தில் தான் இருக்கின்றன. பின்னர் எதற்காக கருப்புப் பெட்டி என்று அழைக்கின்றனர்?
உண்மையில் கருப்பு பெட்டி மிகவும் பிராகாசமான ஆரஞ்சு வண்ணத்தில் இருக்கும். கருப்பு வண்ணத்தில் இருந்தால் அவை எளிதில் கண்டறிய முடியாது என்பதால் ஆரஞ்சு வண்ணம் பூசப்பட்டது. இதன் மூலம் விபத்து நடந்த பகுதிகளில் இருந்து பதிவுப் பெட்டியை கண்டறிவது எளிதாக இருக்கும். மேலும் அது விபத்துக்கான காரணங்களை விசாரிக்க உதவியாக இருக்கும்.
இந்த கருப்பு பெட்டி விபத்துகளால் பாதிக்கப்படாத முறையில் துருப்பிடிக்காத எஃகு அல்லது டைட்டானியத்தால் உருவாக்கப்படுகிறது, நெருப்பினாலும் பாதிக்கப்படாது. மேலும் 6000மீ ஆழத்தில் தண்ணீரில் மூழ்கினாலும் கூட 30 நாட்கள் மீயொலி சமிஞ்சைகளை வெளியிடும் ஆற்றல் கொண்டது. பாதுகாப்பு காரணங்களுக்காக இது விமானத்தின் வால் பகுதியில் பொருத்தப்பட்டிருக்கும்.
ஆரம்ப காலத்தில் கருப்புப் பெட்டி நடைமுறைகள் கப்பல்களுக்காக உருவாக்கப்பட்டன. அப்போது விமானம் கண்டுபிடிக்கப்படாத காலக்கட்டம், ஜான்சன் தாமஸ் என்பவர் 1890 களில் கப்பலில் விபத்துகள் நடந்தால், அதற்குறிய காரணங்களை அறிய ஒரு கருவியை கண்டுபிடித்தார். அதை அடிப்படையாகக் கொண்டே விமானங்களில் பயன்படுத்தப்படும் கருப்புப் பெட்டி உருவாக்கப்பட்டது.
கருப்புப் பெட்டி என்ற பெயரை இரண்டாம் உலகப் போரின் போது இங்கிலாந்து பயன்படுத்தியது. 1943 ஆம் ஆண்டு குண்டு வீச்சு விமானங்களில் காந்தா நாடா மற்றும் கம்பியின் வழியே குரல் பதிவுகள் கருப்புப் பெட்டிகளில் சேகரிக்கப்பட்டது. நேசநாட்டு விமானங்களில் குரல் பதிவு செய்யப்படும் பெட்டிகள் விமானி காக்பிட்டில் பொருத்தப்பட்டது. இது போரின் சூழல்களை பற்றி அறியவும், விபத்துகளைப் பற்றி விசாரணை நடத்தவும் பயன்படுத்தப்பட்டது.
தற்போது பயன்படுத்தப்படும் கருப்பு பெட்டியை டேவிட் வாரன் என்ற ஆஸ்திரேலியர் உருவாக்கினார். 1958 இல் பிரிட்டிஷ் விமான ஆராய்ச்சி கவுன்சில், விமானங்களில் குரல் மற்றும் மற்ற தரவுகளை பதிவு செய்ய மேம்படுத்தப்பட்ட பெட்டியை பொருத்தும் போது கருப்பு பெட்டி என்ற வார்த்தையை பயன்படுத்தியது.
உலகப்போர் காலத்தில் விமானங்கள் விபத்துக்கு உள்ளான பிறகும், அழிந்த பிறகும் இந்த பெட்டி தேடப்படுவதால் இதை கருப்பு பெட்டி என்று அழைத்தனர். பொதுவாக ஐரோப்பிய நாடுகளில் கருப்பு என்பது துயரம் சார்ந்தது. விமான விபத்துகள் துயரம் என்பதாலும் , அதற்கு பின் கிடைத்ததால் கருப்பு பெட்டி என்ற பெயர் நிலைத்து விட்டது.
தற்போது விபத்திற்கு பின் கருப்பு பெட்டியை தேடும் காலம் அதிகரித்தால் அதற்கு தகுந்த வகையில் பேட்டரியின் ஆயுட் காலத்தை அதிகரிக்கும் வகையிலும், அது இருப்பிடத்தை கண்டறியும் வகையிலும், கண்டறியும் முன்னரே தகவல்களை பெறும் வகையிலும் மேம்படுத்தப்பட்டு வருகிறது.