கிறிஸ்டோபர் நோலன் இயக்கிய "Interstellar" திரைப்படம், அறிவியல் புனைகதை உலகில் ஒரு மைல்கல். இந்தப் படம் வெறும் விண்வெளிப் பயணம் பற்றியது மட்டுமல்ல, அது காலம், இடம், மற்றும் மனித உறவுகள் போன்ற ஆழமான தத்துவங்களையும் பேசுகிறது. படத்தின் முக்கிய அம்சங்களில் ஒன்று ஐந்தாவது பரிமாணம் (5th Dimension) என்ற கருத்து. இந்த ஐந்தாவது பரிமாணம் என்ன, அது படத்தில் எப்படி சித்தரிக்கப்படுகிறது, என்பதைப் பற்றி இந்தப் பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.
இன்டர்ஸ்டெல்லார் திரைப்படத்தில் ஐந்தாவது பரிமாணம் என்பது நாம் வழக்கமாக உணரும் மூன்று இடஞ்சார்ந்த பரிமாணங்களையும் (நீளம், அகலம், உயரம்) நான்காவது பரிமாணமான காலத்தையும் தாண்டிய ஒரு வெளி (Space). நான்கு பரிமாணங்களில், காலம் என்பது ஒரு நேர்கோட்டில் நகரும் ஒரு நதி போன்றது. ஆனால் ஐந்தாவது பரிமாணத்தில் ஒருவர் காலத்தைக் கடந்தும், காலத்தின் வெவ்வேறு புள்ளிகளுக்குள்ளும் பயணிக்க முடியும். காலம் என்பது இங்கே ஒரு நிலையான ஒன்றாக இல்லாமல், கையாளக்கூடிய ஒரு பொருளாக மாறுகிறது.
திரைப்படத்தில், ஜோசப் கூப்பர் என்ற விண்வெளி வீரர் கருந்துளைக்குள் (Black Hole) விழுந்து டெசெராக்ட் (Tesseract) என்ற ஒரு வினோதமான இடத்திற்குள் செல்கிறார். இந்த டெசெராக்ட்தான் ஐந்தாவது பரிமாணம் என்று கருதப்படுகிறது. இங்கு கூப்பர் தனது மகளின் அறையின் கடந்த கால காட்சிகளை மூன்று பரிமாணத்தில் காண்கிறார்.
அவர் அந்த பரிமாணத்தில் நகர்ந்து, காலத்தின் வெவ்வேறு தருணங்களை பார்வையிட முடிகிறது. புவியீர்ப்பு விசையைப் பயன்படுத்தி, குவாண்டம் தரவுகளை மோர்ஸ் கோட் மூலம் கடிகாரத்தின் வாயிலாக தனது மகளுக்கு அனுப்ப முயற்சிக்கிறார். காலம் ஒரு பரிமாணமாக இருப்பதால், கூப்பர் கடந்த காலத்துடன் தொடர்பு கொள்ளவும், நிகழ்காலத்தை மாற்றவும் முயற்சி செய்கிறார்.
உண்மையில் ஐந்தாவது பரிமாணம் என்பது அறிவியல் கோட்பாடுகளின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட ஒரு கருத்தாக்கம் மட்டுமே. சரம் கோட்பாடு (String Theory) மற்றும் பிற உயர் பரிமாண கோட்பாடுகள் போன்றவை, நம் பிரபஞ்சம் நாம் உணரும் நான்கு பரிமாணங்களை விட அதிகமான பரிமாணங்களை கொண்டிருக்கலாம் என்று கூறுகின்றன. ஆனால், ஐந்தாவது பரிமாணத்தில் காலத்தை கையாளுவது என்பது இன்னும் அறிவியல் புனைகதைகளில் மட்டுமே சாத்தியமாக உள்ளது.
இன்டர்ஸ்டெல்லார் திரைப்படம், இந்த அறிவியல் கருத்துக்களை கலைநயத்துடன் பயன்படுத்தி, மனித உணர்வுகளையும், காலத்தின் புதிர்களையும் ஆழமாக ஆராய்கிறது என்பதே உண்மை. நீங்கள் அந்த திரைப்படத்தை பார்க்கவில்லை என்றால் உடனடியாக நேரம் ஒதுக்கிப் பார்க்கவும். நான் பார்த்த அறிவியல் சார்ந்த திரைப்படங்களில் இதற்கே முதலிடம் தருவேன்.
(முக்கியக் குறிப்பு: படம் பார்ப்பதற்கு முன், Black Hole, Wormhole, Gravity, Singularity, 3 Dimension, 4th Dimension, 5th Dimension, Time Travel என்றால் என்னவென்று தெரிந்துகொண்டால், படம் பார்க்கும்போது திருத்திருவென முழிக்க மாட்டீர்கள்.)