

இரவு வானத்தைப் பார்க்கும்போது நட்சத்திரங்கள் பெரும்பாலும் சிமிட்டுவது அல்லது மின்னுவதுபோல் தோன்றும். ஆனால், நட்சத்திரங்கள் அப்படி மின்னுவதில்லை; மாறாக, அவற்றின் ஒளி பூமியின் வளிமண்டலத்தின் வழியாக வரும்போதுதான் இந்த விளைவு ஏற்படுகிறது. பூமியில் நகர்ந்துகொண்டிருக்கும் காற்று ஒளியை லேசாக வளைப்பதால்; நட்சத்திரங்கள் ஜொலிப்பதுபோல் தெரிகின்றன.
நட்சத்திரங்கள் எவ்வளவு தொலைவில் உள்ளன தெரியுமா?
நாம் இப்போது காணும் ‘வெள்ளை நிற ஒளி’ அந்த நட்சத்திரத்தில் இருந்துதான் வருகிறது. ஆனால், அந்த ஒளி நூற்றுக்கணக்கான அல்லது ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே வெளிப்பட்டுள்ளது என்றால் நம்புவீர்களா?.
உதாரணமாக, நமக்கு மிக அருகில் உள்ள நட்சத்திர மண்டலமான 'ஆல்ஃபா சென்டாரி' (Alpha Centauri) சுமார் 4 ஒளி ஆண்டுகள் (Light years) தொலைவில் உள்ளது; எனவே இன்று இரவு நாம் காணும் ஒளி அந்த நட்சத்திரத்திலிருந்து 4 ஆண்டுகளுக்கு முன்பே வெளிப்பட்டதாகும்.
சில நட்சத்திரங்கள் ஆயிரக்கணக்கான ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ளன. அதாவது அவற்றின் ஒளி நவீன வரலாற்றுக் காலத்திற்கு (modernity) முன்பே வெளிப்பட்டிருக்கும்; அது இப்போதுதான் நம் கண்ணில் தெரிகிறது. ஏன் நம் அருகில் இருக்கும் நட்சத்திரமான ‘சூரியனின் ஒளி’ பூமியை வந்தடைய 8 நிமிடங்கள் ஆகின்றன; எனவே அதுவும் ‘நேரடி’ காட்சி கிடையாது.
எந்த நட்சத்திரங்களின் ஒளி அருகிலிருந்து மற்றும் தொலைவிலிருந்து வருகிறது?
விண்வெளியில் சூரியனைத் தாண்டி நமக்கு அருகிலுள்ள நட்சத்திரங்களான சிரியஸ் (Sirius) அல்லது ஆல்ஃபா சென்டாரி போன்றவை மற்ற நட்சத்திரங்களை ஒப்பிடும்போது; அவை சமீபத்திய ஒளியைத்தான் நமக்குக் கொடுக்கிறது. அதாவது சில ஒளி ஆண்டு களுக்கு முன்பு வெளிப்பட்ட ஒளியை நமக்குக் காட்டுகின்றன.
தொலைதூர நட்சத்திரங்களாக பீட்டல்ஜியூஸ் அல்லது ரைஜெல் (Betelgeuse or Rigel) ஆயிரக்கணக்கான ஆண்டுகள் பழைமையான ஒளியை நமக்குக் காட்டக்கூடும். சொல்லப்போனால் நாம் காணும் இந்த நட்சத்திரங்கள் இப்போது இல்லாமலேகூட இருக்கலாம்; ஆனால், அவற்றின் ஒளி இன்னும் விண்வெளியில் பயணித்துக் கொண்டு நம் கண்ணில் புலப்படுகிறது.
ஒளி ஆண்டுகளை எப்படிக் கணக்கிடுகிறார்கள்?:
ஒளி ஆண்டு (Light year) என்பது நமக்குத் தெரிந்த சாதாரண காலத்தை அளவிடும் அளவுபோல் அல்ல; அது தூரத்தை (Distance) அளவிடும் அளவு ஆகும். வினாடிக்கு சுமார் 3,00,000 கிலோமீட்டர் (Km/h) வேகத்தில் பயணிக்கும் ஒளி, ஓராண்டில் கடக்கும் தூரமே ‘ஒளி ஆண்டு’ ஆகும்.
ஒரு ஒளியாண்டு தூரம் என்பது ஏறக்குறைய 9.46 லட்சம் கோடி கிலோமீட்டர்கள் (Kms) ஆகும். எனவே, ஒரு நட்சத்திரம் 100 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ளது என்று கூறும்போது, இன்று நாம் காணும் ஒளி அந்த நட்சத்திரத்திலிருந்து 100 ஆண்டுகளுக்கு முன்பே புறப்பட்டது என்று அர்த்தம்.
Reference: The Discovery of Ozone by Christian Friedrich Schönbein