

இன்றைய உலகில் மொபைல் போன் இல்லாத மனிதர்களே இல்லை எனலாம். மொபைல் போன் பயன்படுத்துபவர்கள் அனைவருமே அதனுள் இருக்கும் மிக முக்கியமான ஒரு பகுதியான சிம் கார்டையும் (SIM Card) பயன்படுத்தியிருப்பீர்கள். மொபைல் போனை ஒரு தொடர்புக் கருவியாக மாற்றும் வேலையைச் செய்வது இந்த சிம் கார்டு தான்.
ஆனால், நாம் தினமும் பயன்படுத்தும் இந்தச் சிம் கார்டில் ஒரு வினோதமான அம்சம் இருப்பதைக் கவனித்திருக்கிறீர்களா? அதுதான் சிம் கார்டின் ஒரு மூலை மட்டும் வெட்டப்பட்டு இருப்பது.
நாம் ஒரு பொருளைத் தொடர்ந்து பயன்படுத்தினாலும், அதன் வடிவமைப்புக்குப் பின்னால் உள்ள காரணங்களை அறிந்துகொள்ள முயற்சிப்பதில்லை. சிம் கார்டின் இந்த வெட்டப்பட்ட மூலைக்கான காரணம் என்ன? பெரும்பாலான மக்கள் இதைப் பற்றித் தெரிந்துகொள்ள ஆர்வம் காட்டியிருக்க மாட்டார்கள். வாருங்கள் தெரிந்துகொள்ளலாம்.
தொழில்நுட்ப வல்லுநர்கள் சிம் கார்டை இப்படி வடிவமைத்ததற்குப் பின்னால் ஒரு சிறப்பு வாய்ந்த காரணம் உள்ளது. தொடக்கத்தில் சிம் கார்டுகள் முழுவதும் செவ்வக வடிவத்தில் இருந்தன. அப்போது, மொபைல் போனில் சிம் கார்டைச் செருகுவதில் பலருக்குக் குழப்பம் ஏற்பட்டது. அதை நேராகச் செருகுவதா அல்லது தலைகீழாகச் செருகுவதா என்ற தடுமாற்றம் இருந்தது. மேலும், எந்தப் பக்கத்தை உள்ளே வைப்பது என்றும் தெரியாமல் பலர் சிரமப்பட்டனர்.
அவ்வாறு சிம் கார்டை தலைகீழாகச் செருகினால், அது சரியாக வேலை செய்யாது. மொபைலில் நெட்வொர்க் கிடைக்காது. மேலும், சில சமயங்களில் சிம் கார்டு சேதமடையவும் வாய்ப்பு இருந்தது.
இந்தக் குழப்பங்களைத் தீர்க்கவும், சிம் கார்டைச் சரியாகப் பொருத்துவதை உறுதிப்படுத்தவும் தான், அதன் ஒரு மூலையை வெட்டும் யோசனை வந்தது.
இந்த வெட்டு மூலையானது, பயனர்கள் சிம் கார்டை மொபைல் போனின் சிம் ஸ்லாட்டில் (SIM Slot) சரியான திசையில் செருகுகிறார்களா என்பதைக் கண்டறிய உதவுகிறது.
ஸ்லாட்டில் உள்ள வடிவம் மற்றும் சிம் கார்டில் உள்ள வடிவம் இரண்டும் ஒத்துப்போகும்போது, சிம் கார்டு நேராகச் செருகப்பட்டுள்ளதா அல்லது தலைகீழாக உள்ளதா என்பதைப் புரிந்துகொள்வது மக்களுக்கு எளிதாகிறது.
சிம் கார்டின் ந்தச் சிறிய வடிவமைப்புக் குறியீடு, பயனரின் அனுபவத்தை மிகவும் எளிதாக்கியுள்ளது.
சிம் கார்டு எப்படி வேலை செய்கிறது?
சிம் கார்டின் முழுப் பெயர் Subscriber Identity Module. இதன் வேலை, நமது மொபைல் சாதனத்தை செல்லுலார் நெட்வொர்க்குடன் (Cellular Network) இணைப்பதுதான். இது International Mobile Subscriber Identity (IMSI) எண்ணையும், அதனுடன் தொடர்புடைய ரகசிய சாவிகளையும் (Keys) சேமிக்கிறது.
இந்த எண்களின் உதவியுடன் தான், ஒரு மொபைல் நெட்வொர்க்கின் பயனர் யார் என்பது அடையாளம் காணப்பட்டு, அங்கீகரிக்கப்படுகிறார். மொபைல் போன் ஆன் செய்யப்பட்டவுடன், அது சிம் கார்டில் உள்ள தரவுகளைப் படித்து, அதை மொபைல் நெட்வொர்க்கிற்கு அனுப்புகிறது.
இந்தச் செயல்முறைக்குப் பிறகு, நெட்வொர்க் அந்தப் பயனரின் அடையாளத்தை சரிபார்க்கிறது. இந்தச் சரிபார்ப்பின் மூலமே, அந்தப் பயனர் நெட்வொர்க்கை அணுக முடியுமா இல்லையா என்பது உறுதி செய்யப்படுகிறது. இந்த அங்கீகாரச் செயல்முறை காரணமாகத்தான், ஒரு நிறுவனத்தின் சிம் கார்டு மற்ற நிறுவனத்தின் நெட்வொர்க்குடன் தானாக இணைக்க முடியாது.
அடுத்து நீங்கள் உங்கள் மொபைலைத் திறக்கும்போது, சிம் கார்டின் வெட்டப்பட்ட மூலையைப் பார்த்து, அதன் வடிவமைப்புக்குப் பின்னால் உள்ள இந்தக் காரணத்தை நினைவில் கொள்ளுங்கள்!