இந்தியா பெட்ரோலியம் வாங்குவதில் உலக அளவில் மூன்றாவது இடத்தில் இருக்கிறது. சீனாவும் அமெரிக்காவும் முதல் இரண்டு இடங்களை பிடித்துள்ளது. ஒரு காலத்தில் அமெரிக்கா மட்டுமே கோலோச்சிய பெட்ரோலிய இறக்குமதியில் முதன்மை வகித்தது. இன்று இந்தியா அதற்கு அடுத்த இடத்தில் இருக்கிறது. ரஷ்யா - உக்ரைன் போருக்கு முன்னர், இந்தியா அரபு நாடுகளில் தான் அதிகளவு பெட்ரோலியம் வாங்கி வந்தது. ஆனால், தற்போது இந்தியா பெருமளவில் ரஷ்யாவிடம் பெட்ரோலியத்தை வாங்குகிறது.
இந்தியா பெட்ரோலியம் வாங்குவதன் மூலம் ரஷ்யப் பொருளாதாரத்தை தாங்கி பிடித்துள்ளது. இதனால் , ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்கக் கூடாது என்று அமெரிக்கா , இந்தியாவுடன் வரிப் போர் நடத்துகிறது. கச்சா எண்ணெய் வியாபாரத்தில் சர்வதேச அளவில் இந்தியாவிற்கு நல்ல லாபம் கிடைத்தாலும், எதிர்கால நிலையை கருத்தில் கொண்டு பசுமை எரிபொருள் கொள்கையை மத்திய அரசு விரிவுபடுத்துகிறது.
மத்திய அரசு பெட்ரோலில் 20% எத்தனாலை கலந்து வாகன பயன்பாட்டுக்கு கொண்டு வந்துள்ளது. இந்த எரிபொருளை E20 பெட்ரோல் என்று அழைக்கின்றனர் . இந்த வகை பெட்ரோலை பயன்படுத்துவதன் மூலம், வாகனத்தின் மைலேஜ் குறைவதாக , சமூக ஊடகங்களில் வெளிவரும் கருத்துக்களை பார்த்து பொதுமக்கள் கவலைப்படுகின்றனர். எத்தனால் கலந்த பெட்ரோலை வாகனங்களில் பயன்படுத்துவதால் பெட்ரோல் டேங்க்கும் என்ஜினும் சேதமடைவதாக வரும் வதந்திகளை நம்பி பலரும் அச்சப்படுகின்றனர்.
E20 பெட்ரோல் மைலேஜ்:
மத்திய அரசின் அறிக்கையின் படி சமூக வலைத்தளங்களில் வரும் குற்றச்சாட்டுக்கள் தவறானவை என்று குறிப்பிடப்பட்டுள்ளது. வாகன எஞ்சின் செயல்திறனில் 20% எத்தனால் பெரிதாக எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது என்றும் , மொத்த மைலேஜ் திறனில் 1-2% அளவு மட்டுமே குறையும் என்றும் தெளிவுபடுத்தியுள்ளது. மேலும் வாகனங்களின் பாகங்களை E20 பெட்ரோலுக்கு தகுந்தாற்போல மாற்றினால் மிகக் குறைந்த மைலேஜ் இழப்பையும் சரி செய்யலாம் என்று தெரிவித்துள்ளது.
சுற்றுச்சுழலுக்கு உகந்த E20 பெட்ரோல்:
இந்திய சர்க்கரை மற்றும் உயிரி ஆற்றல் உற்பத்தியாளர்கள் சங்கம், ஐந்து வருடத்திற்கு முன்பே பெட்ரோலில் 20% எத்தனால் கலக்கும் இலக்கை இந்தியா அடைந்து விட்டதாக அறிவித்துள்ளது. இதற்கு ஏற்றவாறு வாகனங்களை தயாரிப்பதை 2023 ஆம் ஆண்டிலேயே இந்திய ஆட்டோமொபைல் நிறுவனங்கள் தொடங்கி விட்டன. ராயல் என்ஃபீல்ட், டிவிஎஸ் மோட்டார், சுசூகி , ஹோண்டா போன்ற பல பெரிய நிறுவனங்கள் E20 எரிபொருளுக்கு தகுந்த வாகனங்களை விற்பனை செய்கின்றன.
எத்தனால் இயற்கையாக கரும்பிலிருந்து தயாரிக்கப்படும் ஒரு எரிபொருள். இதை மீண்டும் மீண்டும் விவசாயத்தின் மூலம் உற்பத்தி செய்ய முடியும். எத்தனால் பெட்ரோலை விட 65% குறைவான கார்பன்டை ஆக்சைடை வெளியிடுகிறது என்று நிதி ஆயோக் தெரிவித்துள்ளது. இதனால் சுற்றுச்சூழலில் ஏற்படும் மாசுபாடு பெருமளவில் குறைக்கப்படும். 2014 ஆம் ஆண்டில் 380 மில்லியன் லிட்டராக இருந்த எத்தனால் உற்பத்தி, ஜூன் 2025 இல் 661 மில்லியன் லிட்டராக அதிகரித்துள்ளது. இதனால் கார்பன் டை ஆக்சைடு வெளியேற்றம் 69.8 மில்லியன் டன்களாக குறைக்கப்பட்டுள்ளது.
எத்தனாலின் எதிர்காலம்:
E20 எரிபொருள் திட்டத்தின் வெற்றிக்குப் பின்னர் மத்திய அரசு E27 எரிபொருள் திட்டத்தை கொண்டு வர உள்ளது. அதிகரிக்கும் எத்தனால் பயன்பாட்டின் மூலம் , குறிப்பிட்ட அளவு கச்சா எண்ணெய் இறக்குமதியை தேசிய அரசு குறைக்க முடியும். இதனால் அந்நிய செலாவணி கையிருப்பு குறையாமல் இருக்கும். எத்தனால் தேவைக்காக உள்ளூர் விவசாயிகள் கரும்பினை அதிகம் பயிரிட வேண்டி இருக்கும், அதனால் அதிக வருமானமும் அவர்களுக்கு கிடைக்கும்.