

கோடிக்கணக்கான வருடங்களுக்கு முன்பே உலகை விட்டு முற்றிலுமாக அழிந்துபோன டைனோசர்களை நாம் திரைப்படங்களில் மட்டுமே பிரம்மாண்டமாகப் பார்த்திருப்போம். ஆனால் அந்த டைனோசரின் தோலில் செய்யப்பட்ட ஒரு கைப்பையை நீங்கள் நேரில் பார்த்தால் எப்படி இருக்கும்?
இது கேட்பதற்கு ஹாலிவுட் சினிமா கதை போல இருந்தாலும் அறிவியலின் அபார வளர்ச்சியால் இப்போது நிஜமாகவே நடந்துள்ளது. விலங்குகளைக் கொல்லாமல் சுற்றுச்சூழல் பாதுகாப்பை மேம்படுத்தும் ஒரு புதிய முயற்சியாகவே உலக நாடுகள் இதைப் பார்க்கின்றன. ஆய்வகத்தில் உருவாக்கப்பட்ட டி-ரெக்ஸ் (T-Rex) டைனோசரின் கொலாஜனை வைத்து உலகின் முதல் லெதர் ஹேண்ட்பேக்கை விஞ்ஞானிகள் தற்போது வெற்றிகரமாக உருவாக்கியுள்ளனர்.
ஆய்வகத்தில் உருவான டைனோசர் தோல்!
பல கோடி ஆண்டுகள் பழமையான ஒரு உயிரினத்தின் தோலை உருவாக்குவது என்பது சாதாராண காரியம் கிடையாது. பல வருடங்களாக மண்ணுக்குள் புதைந்து கிடந்த டி-ரெக்ஸ் டைனோசரின் தொல்லுயிர் எச்சங்களில் இருந்து சில குறிப்பிட்ட புரதத் துணுக்குகளை ஆராய்ச்சியாளர்கள் தனியாகப் பிரித்தெடுத்தனர்.
பிறகு அதை வேறொரு விலங்கின் செல்களுக்குள் செலுத்தி, அதன் மூலம் ஆய்வகத்திலேயே கொலாஜனை வளர்த்து இந்த லெதரை உருவாக்கியுள்ளார்கள். இதற்குப் பின்னால் ஏராளமான தொழில்நுட்பச் சவால்கள் இருந்ததாகக் கூறுகிறார்கள். இவர்கள் ஏற்கனவே பல வருடங்களுக்கு முன் அழிந்துபோன மாமூத் யானையின் மரபணுவை வைத்து ஒரு மீட்பால் தயாரித்து உலகையே அதிர வைத்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
விலை என்ன தெரியுமா?
பார்க்கவே கவர்ச்சியாக இருக்கும் இந்த நீல நிற கைப்பை, நெதர்லாந்து நாட்டின் ஆம்ஸ்டர்டாம் நகரில் உள்ள ஆர்ட் ஜூ மியூசியத்தில் பொதுமக்களின் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது. அங்கு ஒரு பிரம்மாண்டமான டி-ரெக்ஸ் டைனோசர் எலும்புக்கூட்டின் கீழே 2026, மே 11-ம் தேதி வரை இதை நீங்கள் நேரில் சென்று ரசிக்கலாம்.
கண்காட்சி முடிந்த பிறகு இந்த பை ஏலத்திற்கு வரவுள்ளது. இதன் ஆரம்ப விலையே சுமார் அரை மில்லியன் டாலர்கள், அதாவது இந்திய மதிப்பில் பல கோடி ரூபாய்க்கு மேல் இருக்கும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. பணக்காரர்கள் பலரும் இந்த அரிய பொருளை வாங்க இப்போது முதலே பெரிய அளவில் போட்டி போட ஆரம்பித்துவிட்டார்கள்.
ஆய்வாளர்களின் விமர்சனம்!
இது ஒரு பக்கம் பெரிய சாதனையாகப் பார்க்கப்பட்டாலும், மற்றொரு பக்கம் பல அறிவியலாளர்கள் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். பழங்கால எலும்புகளில் மிஞ்சியிருக்கும் வெறும் சிதைந்த புரதங்களை வைத்துக்கொண்டு உண்மையான டைனோசர் தோலை நூறு சதவீதம் அப்படியே உருவாக்க முடியாது என நெதர்லாந்தை சேர்ந்த தொல்லுயிர் ஆய்வாளர் ஆணித்தரமாகக் கூறுகிறார்.
அதேபோல, விலங்குகளின் உண்மையான தோலில் இருக்கும் நரம்பு மற்றும் நார்களின் அமைப்பு இந்த ஆய்வக தோலில் சுத்தமாக கிடையாது என மற்றொரு நிபுணரும் தனது விமர்சனத்தை முன்வைத்துள்ளார். இது வெறும் புரதங்களின் கலவை மட்டுமே தவிர, இதை உண்மையான தோல் என்று ஏற்றுக்கொள்ள முடியாது என்பதே பலரின் வாதமாக உள்ளது.
இதுவரை மனித வரலாற்றில் டைனோசரின் பொருளை உருவாக்குவதில் யாரும் இந்த அளவுக்கு நெருக்கமாகச் சென்றதில்லை என்பது இதை உருவாக்கியவர்களின் அசைக்க முடியாத நம்பிக்கை. எது எப்படி இருந்தாலும், மிருகங்களை வேட்டையாடி தோலை உரிப்பதற்குப் பதிலாக, இப்படி ஆய்வகத்தில் லெதரை உருவாக்குவது எதிர்கால அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்திற்கு ஒரு மிகப்பெரிய மைல்கல் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் கிடையாது.