இணையம் இல்லாமல் மெசேஜ் செய்யும் ஒரு புதிய ஆப்பை உருவாக்கியிருக்கிறார் எக்ஸ் வலைதளத்தின் இணை நிறுவனரான ஜாக் டார்சி. பின் எதன் அடிப்படையில் மெசேஜ் செய்ய முடியும்?
உலகமே இன்டெர்நெட்டில் தான் செயல்படுகிறது என்பதுபதற்கேற்ப, இணையம் இல்லாமல் நம்மால் யாரையுமே போன் மூலம் தொடர்புக்கொள்ள முடியாது. போன் இல்லாமல் யாரை நாம் தொடர்புக்கொள்ளப்போகிறோம். அருகில் இருப்பவர்களையேதான் நாம் மறந்துவிடுகிறமே…
சரி விஷயத்திற்கு வருவோம். இணையம் இல்லாமல் மற்றவர்களுக்கு நாம் மெசேஜ் செய்யும் ஒரு புதிய செயலியை அறிமுகப்படுத்தியுள்ளார் ஜாக் டார்சி. இவர்தான் ப்ளூ ஸ்கை வலைதளத்தையும் உருவாக்கினார்.
"பிட்சாட்" செயலியின் முக்கிய அம்சம் என்னவென்றால், இது ப்ளூடூத் (Bluetooth) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, அருகிலுள்ள சாதனங்களுடன் நேரடியாகத் தகவல்களைப் பரிமாறிக்கொள்ளும் திறன் கொண்டது. புளூடூத்துக்கு இயல்பாகவே சுமார் 100 மீட்டர் வரம்பு இருந்தாலும், பிட்சாட் பயன்படுத்தும் சாதனங்கள் ஒருமையாய் செயல்படுவதன் மூலம் தகவல்களை 300 மீட்டர் வரை அனுப்ப முடியும் என டோர்சி தெரிவிக்கிறார்.
வரும்காலத்தில் WIFI direct மூலமும் மெசேஜ் செய்யும் வசதி வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது கிராமப்புறங்கள், மலைப் பகுதிகள், அல்லது பேரிடர் காலங்களில் இணைய சேவை துண்டிக்கப்படும் சூழ்நிலைகளில் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
செயலியின் வடிவமைப்பாளர்கள், "பிட்சாட்" தனிப்பட்ட பயன்பாட்டிற்கு மட்டுமல்லாமல், குழு தகவல்தொடர்புகளுக்கும் ஏற்றது என்று தெரிவித்துள்ளனர். ஒரு குறிப்பிட்ட பகுதிக்குள் உள்ள பயனர்கள் ஒரு "மெஷ் நெட்வொர்க்கை" (Mesh Network) உருவாக்கிக் கொள்ளலாம், இதன் மூலம் ஒருவரில் இருந்து மற்றொருவருக்கு மெசேஜ்கள் கடத்தப்பட்டு, நீண்ட தூரங்களுக்கு கூட தகவல்கள் சென்றடைய வாய்ப்புள்ளது. இது இணைய உள்கட்டமைப்பு இல்லாத இடங்களில் கூட ஒரு சிறிய அளவிலான சமூக வலைப்பின்னலை உருவாக்க உதவும்.
பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளித்து, பிட்சாட், என்க்ரிப்ஷன் (Encryption) அம்சங்களுடன் வருவதாகக் கூறப்படுகிறது, இதனால் பயனர் தகவல்கள் பாதுகாக்கப்படும். மேலும், இந்த செயலி மிகக் குறைந்த பேட்டரி சக்தியைப் பயன்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதால், மொபைல் போன் சார்ஜ் இல்லாத சமயங்களிலும் நீண்ட நேரம் பயன்படுத்த முடியும்.
"பிட்சாட்" செயலியின் வருகை, தகவல்தொடர்பு உலகில் ஒரு புதிய புரட்சியை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. இணைய வசதி ஒரு அத்தியாவசியத் தேவையாகிவிட்ட இக்காலத்தில், "இன்டர்நெட் இல்லாமல்" என்ற அணுகுமுறை, பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. இந்த செயலி, அடுத்த சில மாதங்களில் ஆண்ட்ராய்டு மற்றும் iOS இயங்குதளங்களில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது நிச்சயம் பலரது ஸ்மார்ட்போன்களில் ஒரு முக்கிய இடத்தைப் பிடிக்கும் என்பதில் சந்தேகமில்லை.