
தேசிய மன்னிப்பு தினம் என்பது ஆஸ்திரேலியாவில் ஆண்டுதோறும் மே 26-ம்தேதி அன்று கொண்டாடப்படும் ஒரு நிகழ்வாகும். இந்த நாள் ஆஸ்திரேலிய பழங்குடியினருக்கு அரசாங்கத்தால் செய்யப்பட்ட தவறுகளை நினைவு கூருவதற்கும், மன்னிப்பு கோருவதற்கும், நல்லிணக்கத்தை வளர்ப்பதற்கும் ஒரு நாளாக அனுசரிக்கப்படுகிறது.
1905-ம் ஆண்டின் ஆஸ்திரேலியா அரசின் சட்டப்பட்டி, ஆத்திரேலியாவின் பழங்குடி மக்களின் குழந்தைகளை, அவர்தம் பெற்றோரிடமிருந்து வலுகட்டாயமாக கைப்பற்றி அல்லது திருடி, கிறித்துவ மிஷினரிகள் மற்றும் அரசு நிறுவனம் நடத்தும் உறைவிடப் பள்ளிகள், முகாம்கள், விடுதிகள், காப்பகங்கள் அல்லது தனியார் ஐரோப்பியக் குடும்பத்தாரிடம் ஒப்படைத்து ஐரோப்பியப் பண்பாட்டு முறையில் வளர்த்தனர். இந்த முறையால் ஏராளமான தொல்குடி குழந்தைகள் தங்கள் குடும்பங்களை இழந்தனர். தொல்குடி குழந்தைகளை வலுக்கட்டாயமாக பெற்றோரிடமிருந்து பிரித்து, ஐரோப்பிய பண்பாட்டு முறையில் வளர்க்கும் முறை 1970-ம் ஆண்டு வரை ஆஸ்திரேலியாவில் பின்பற்றப்பட்டது.
ஐரோப்பியப் பண்பாட்டில் வளர்க்கப்படும் தொல்குடி குழந்தைகளை ஆஸ்திரேலிய காலனிய அரசு 'Half Caste Aborigines எனப்பெயரிட்டு தனி இனமாகப் பாவித்தது. 1905-ம் ஆண்டின் ஆஸ்திரேலியா அரசின் சட்டப்பட்டி, குழந்தைகளை தொல்குடிகளின் இடங்களிலிருந்து பிரித்துக் கொண்டு வருவதற்கான அதிகாரம் அரசுக்கு உண்டு.
முகாம்களில் வளரும் தொல்குடி குழந்தைகளின் இன அடையாளம் முழுமையாக மறைக்கப்பட வேண்டும் என்பதற்காக, குழந்தைகளுக்கு பெயர் மாற்றம் செய்யப்பட்டது. அவர்களுக்குப் புதிய ஆங்கிலப் பெயர்கள் வைக்கப்பட்டன. ஆங்கிலேய உடைகள், உணவுகள் வழங்கப்பட்டன. மேலும் தேவாலயங்களில் கிறித்துவ வழிபாட்டு முறை கற்றுத்தரப்பட்டது. தொல்குடி குழந்தைகள் தங்கள் தாய்மொழியில் பேசக்கூடாது போன்ற பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.
1970-ம் ஆண்டுவரை பின்பற்றப்பட்ட இந்த முறையால் ஏராளமான தொல்குடியின குழந்தைகள் தங்கள் குடும்பங்களை இழந்திருந்தனர். தாங்கள் வெள்ளையினத்தவராகவும் சிந்திக்க முடியாமல், தொல்குடி இனமாகவும் வாழ முடியாமல் குழந்தைகள் அவதிப்பட்டனர். 1967-ம் ஆண்டு வரையிலும் மக்கள்தொகைக் கணக்கெடுப்பில் கூட இவர்கள் சேர்க்கப்படவில்லை.
தொல்குடி மக்களுக்கு ஆஸ்திரேலியா அரசு இழைத்த பண்பாட்டு சிதைவை குறிக்கும் விதமாக மே 26-ம்தேதி ஆஸ்திரேலிய பூர்வகுடிகளிடம் மன்னிப்பு கேட்கும் நாள் அரசாலும், வெள்ளையர்களாலும் கடைபிடிக்கப்படுகிறது. 2008-ம் ஆண்டு அரசின் சட்டங்களால் இந்த தொல்குடி மக்கள் நடத்தப்பட்ட விதத்துக்காக, ஆஸ்திரேலிய நாடாளுமன்றத்தில் முதல்முறையாக பகிரங்கமாக மன்னிப்புக் கோரினார் அப்போதைய பிரதமர் கெவின் ரட்.
ஆஸ்திரேலிய பழங்குடியினருக்கும், ஆஸ்திரேலிய மக்களுக்கும் இடையில் நல்லிணக்கம் மற்றும் புரிந்துணர்வை வளர்ப்பதற்கு இந்த நாள் முக்கியத்துவம் வாய்ந்தது. ஆஸ்திரேலிய அரசாங்கம் பழங்குடியினருக்கு செய்த தவறுகளுக்கு மன்னிப்பு கோருவதற்கும், கடந்த கால காயங்களை குணப்படுத்துவதற்கும் இது ஒரு வாய்ப்பாக உள்ளது.