ஆஸ்திரேலியப் பிரதமர் பொது மன்னிப்பு கேட்ட வரலாறு தெரியுமா?

Australian Prime Minister Kevin Rudd
Australian Prime Minister Kevin Rudd
Published on

1869 முதல் 1969 ஆம் ஆண்டு வரையிலான நூறாண்டுகளில் ஆஸ்திரேலியப் பழங்குடிகள் மற்றும் டொரெசு நீரிணை தீவினர்களின் குடும்பங்களில் இருந்து, ஆயிரக்கணக்கான குழந்தைகளைப் பெற்றோர்களிடமிருந்து பிரித்து எடுத்துச் சென்றனர். இதனை, திருடப்பட்ட தலைமுறைகள் (Stolen Generations) என்று அழைக்கின்றனர். 

ஆஸ்திரேலியப் பழங்குடிகள் தமக்கான வாழ்வை நதிக்கரையோரங்களில், உணவுப் பயிர்கள் விளைவிக்கும் பகுதியில் அமைத்து வாழ்ந்து கொண்டிருந்தனர். 1788 ஆம் ஆண்டில் ஆங்கிலேயர்கள் ஆஸ்திரேலியாவில் குடியேறுவதற்காக,  இப்பழங்குடிகளைத் துப்பாக்கி முனையில், அவர்களின் இருப்பிடங்களில் இருந்து வெளியேற்றினார்கள். இந்த நடவடிக்கையின் போது, ஆயிரக்கணக்கானவர்கள் கொல்லப்பட்டனர்.

1910 முதல் 1969 வரையில் கிட்டத்தட்ட 1,00,000 சிறுவர்கள் காவற்துறையினராலும், சமூக நலச் சேவையாளர்கள் என்று சொல்லப்படுபவர்களாலும் இனங்களை ஒன்றிணையச் செய்யும் கொள்கைகளுக்காக, அவர்களது குடும்பங்களில் இருந்து கட்டாயமாகப் பிரித்தெடுக்கப்பட்டனர். இச்சிறுவர்களில் பெரும்பான்மையோர் ஐந்து வயதுக்குக் கீழுள்ளவர்கள் என்பது கொடுமையிலும் கொடுமை. குடும்பங்களில் இருந்தும் நிரந்தரமாக, கட்டாயமாகப் பிரித்தெடுக்கப்பட சிறுவர்கள் கிறிஸ்தவ ஆலயங்களிலும், சமூக நல அமைப்பு என்று சொல்லப்படும் அமைப்புக்களிலும் அடைத்து வைக்கப்பட்டனர். சிலர் வெள்ளையின மக்களின் தத்தெடுப்புக்கு ஆளானார்கள்.

மனித உரிமைவாதிகள் மற்றும் பழங்குடிகளில் நன்கு படித்துத் தேறிய புலமையாளர்களின் தொடர்ந்த கண்டனக் குரல்களின் பலனாக, "வீட்டுக்குக் கொண்டு வாருங்கள்" (Bringing them Home) என்ற விசாரணை மே 11, 1995 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. 'ஆஸ்திரேலிய மனித உரிமை மற்றும் சம உரிமை ஆணை' யின் தலைவர் சேர் ரொனால்ட் வில்சன் மற்றும் பழங்குடியினரின் பொதுநல உரிமை ஆணையாளர் மிக் டொட்சன் ஆகியோரின் மேற்பார்வையில் இந்த விசாரணை அமைந்தது. இவர்கள் தமது விசாரணைகளில் ஆஸ்திரேலியாவின் அனைத்து மாநிலங்களுக்கும் பயணம் செய்து மொத்தம் 535 பழங்குடியினரின் வாக்குமூலங்களைப் பதிவு செய்தனர். சுமார் 600-க்கும் மேற்பட்ட ஆவணங்களைத் தேடிக் கண்டுபிடித்தனர். இவ்விசாரணையின் அறிக்கை 700 பக்கங்களில் மே 26, 1997 அன்று ஆஸ்திரேலிய நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டது. 

இந்த ஆவணத்தில் வழங்கப்பட்ட 54 பரிந்துரைகளில் முக்கியமான பரிந்துரைகளாகக் கீழ்க்காணும் மூன்று பரிந்துரைகள் இருந்தன.

1. ஆஸ்திரேலியப் பூர்வீகச் சமூகத்துக்கான வாழ்வைச் சீரமைக்கும் நிதிக்கொடுப்பனவு முறைமையை ஏற்படுத்தல்.

2. கட்டாயமாகப் பிரித்தெடுப்புக்கு ஆளான தலைமுறைக்கு புதுவாழ்வு அமைப்பை ஏற்படுத்தல்.

3. ஆஸ்திரேலிய தேசிய மற்றும் மாநிலப் பாராளுமன்றங்களில், தமது முன்னோர்கள் சட்ட ரீதியாகவும், கட்டளை வழியாகவும் செய்த வரலாற்றுத் தவறுகளை ஏற்று அதிகாரபூர்வமான மன்னிப்பைப் பகிர்தல்.

இதையும் படியுங்கள்:
அமெரிக்க சுதந்திரத்திற்கு வழி வகுத்த 'டீ பார்ட்டி’!
Australian Prime Minister Kevin Rudd

இந்த ஆவணம் வழங்கப்பட்ட காலத்தில் ஜோன் ஹவார்ட் என்பவர் தலைமையிலான பழமைவாத ஆஸ்திரேலிய லிபரல் கட்சி ஆட்சிப் பொறுப்பை ஏற்றிருந்தது. ஜோன் ஹவார்ட் இவ்வாறு பொது மன்னிப்புக் கேட்பதினால் இத்தலைமுறையினருக்கு பெரும் நஷ்ட ஈடு வழங்கப்பட வாய்ப்புண்டு என்ற காரணத்தினால் பொது மன்னிப்புக் கேட்க மறுத்து விட்டார். இருப்பினும் விக்டோரியா, நியூ சவுத் வேல்ஸ், தெற்கு ஆஸ்திரேலியா, வட மாநிலம் ஆகியவை அவற்றிற்குரிய மாநில நாடாளுமன்றங்களில் அதிகாரபூர்வமாக மன்னிப்புக் கேட்டுக் கொண்டன.

அதன் பிறகு, 2007 ஆம் ஆண்டு டிசம்பர் 11 அன்று புதிதாகத் தேர்வு செய்யப்பட்ட கெவின் ரட் என்பவர் தலைமையிலான தொழிற்கட்சி, திருடப்பட்ட தலைமுறையினரிடம் ஆஸ்திரேலிய அரசு தமது முறையான மன்னிப்பைக் கோரும் என அறிவித்தது. மன்னிப்பு வாசகங்களில் இடம் பெறக்கூடிய செய்திகளை பழங்குடித் தலைவர்களிடம் கலந்தாலோசித்து முடிவெடுப்பதாகவும் அறிவித்தது. எதிர்க்கட்சித் தலைவர்களும் இதற்கு ஆதரவாகக் குரல் கொடுத்தனர். இம்மன்னிப்பு வாசகங்களின் மூலம் நஷ்ட ஈடு வழங்கல் தவிர்க்கப்பட்டுள்ளது என கெவின் ரட் உறுதியளித்தார்.

2008 ஆம் ஆண்டு பிப்ரவரி 13 அன்று பழங்குடியின மக்களுக்கு துன்பங்களையும் இழப்புகளையும் ஏற்படுத்தக்கூடியவாறு அமைந்த அரசின் கொள்கைகள் மற்றும் சட்டங்கள் ஒரு மனித உரிமை மீறல் என அறிவித்ததுடன், இத்துயரத்திற்காக அனைத்துப் பழங்குடியின மக்களிடமும் பிரதமர் கெவின் ரட் நாடாளுமன்றத்தில் பொது மன்னிப்புக் கேட்டார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com