

உலக மீனவர்கள் தினம் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 21 அன்று கொண்டாடப்படுகிறது. 1997ல் உலக மீனவர் மன்றம் (World Fisheries Forum) உருவாக்கப்பட்டதை நினைவுகூரும் வகையில் இந்த நாள் அனுசரிக்கப்படுகிறது. இந்த நாளில், மீனவர்களின் பங்களிப்பை அங்கீகரித்து பல்வேறு நிகழ்ச்சிகள் மூலம் அவர்களுக்கு மரியாதை செய்யப்படுகிறது.
உலக மக்களுக்கு தேவையான உணவு புரதத்தில் 25 சதவீதத்துக்கும் அதிகமான அளவு மீன்களில் இருந்து பெறப்படுகிறது. மனித மக்கள் தொகை ஆண்டுக்கு 100 மில்லியன் டன் மீன்களை உணவாகக் கொள்கிறது. உலகத்தில் உள்ள மீனவர்களில் 15 சதவிகிதம் பெண்கள்தாம். சிப்பி, கிளிஞ்சல், நத்தைகள் போன்றவற்றைச் சேகரிப்பதை Shellfisheries என்பார்கள். இந்தத் தொழிலில் இருக்கும் பெரும்பாலானோர் பெண்களே. ஒட்டுமொத்தமாக உலகில் 21 லட்சம் பெண்கள் மீன்பிடி தொழிலில் நேரடியாக ஈடுபடுகிறார்கள் என்று ஓர் ஆராய்ச்சியில் கண்டறிந்திருக்கிறார்கள். இந்தியாவில் 7,516 கிலோ மீட்டர்கள் (4,670 மைல்) கடற்கரையும், 3,827 மீனவ கிராமங்களும், 1,914 பாரம்பரிய மீன் பராமரிப்பு நிலையங்களும் உள்ளன.
இந்தியாவின் பொருளாதாரத்தில் மீன்பிடித்தல் ஒரு முக்கிய துறையாகும். இந்தியாவில் மீன்பிடி துறையானது நாட்டில் 28 மில்லியனுக்கும் அதிகமான மக்களின் வாழ்வாதாரத்தைக் கொண்டிருக்கிறது. உலக உற்பத்தியில் 7.96 சதவீத பங்கு வகிக்கும் இந்தியா, சீனாவிற்கு அடுத்தபடியாக மீன் வளர்ப்பு மூலம் மீன் உற்பத்தியில் 2வது இடத்தில் உள்ளது. சராசரி மொத்த மீன் உற்பத்தி 14.73 மில்லியன் டன்கள் என்று மதிப்பிடப்பட்டு உள்ளது. தேசிய மீன் வள மேம்பாட்டு வாரியத்தின் கூற்றுப்படி மீன்பிடி தொழில் 334.41 பில்லியன் ரூபாய் ஏற்றுமதி வருமானமாக கிடைக்கிறது.
இந்தியாவில் மீன் பிடித்தல் தொழிலில் 28 மில்லியன் பேர் ஈடுபட்டுள்ளனர். அதில் 12.4 மில்லியன் பேர் பெண்கள் என்கிறது இந்திய மீன்வள கணக்கெடுப்பு அறிக்கை. இது இந்திய அளவில் உள்ள மீன் பிடி தொழிலில் ஈடுபட்டு வருகின்றவர்களில் 44 சதவீதம், ஏறக்குறைய பாதி அளவு பெண்கள். இவர்களில் பலர் ஆண்களைப் போலவே அதிகாலை 3 மணிக்கு எழுந்து கடலுக்கு மீன் பிடிக்க செல்கிறார்கள்.
மீன் பிடி தொழிலில் ஈடுபட்டு வரும் பெண்கள் ஆண்களைப் போலவே கடலுக்கு சென்று படகுகள் செலுத்துதல், வலை வீசுதல், தாங்கள் இயக்கும் படகுகளுக்கு எவ்வளவு டீசல் தேவை என்பது வரை அனைத்து வேலைகளையும் செய்கின்றனர். அதோடு, கடலில் பிடித்துக் கொண்டு வரும் மீன்களை விற்பனைக்கு தரம் பிரித்தல் மற்றும் அதனை பதப்படுத்தும் பணி என அனைத்தையும் செய்கின்றனர். இந்த தொழிலில் ஈடுபட்டு வரும் பெண்களில் பலர் பட்டதாரிகள் என்பது குறிப்பிடத்தக்கது.
மீன் பிடி தொழிலில் ஈடுபட்டு வரும் பெண்களில் பலர் ஆண்களை விட பலவிதமான கஷ்டங்களை அனுபவித்து வருகின்றனர். இதனை கருத்தில் கொண்டு 2024ம் ஆண்டு கேரளா மாநிலத்தில் இந்திய மீனவ பெண்கள் மாநாடு நடைபெற்றது. இதில் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் மீனவப் பெண் அமைப்புகள் கலந்து கொண்டு தங்களது குறைகளை பட்டியலிட்டு அரசுக்கு சமர்ப்பித்தனர். அதன் பின்னர் கேரள அரசு அதிகாலையில் மீனவ பெண்கள் கடற்கரை பகுதிகளுக்கு செல்ல சிறப்பு பேருந்துகளை ஏற்பாடு செய்தது.
இந்தியாவில் மீன் பிடி தொழிலில் அதிக பெண்கள் ஈடுபடுவது மகாராட்டிர மாநிலத்தில்தான். தமிழ்நாட்டில் 1984ம் ஆண்டு மீனவப் பெண்கள் நலனுக்காக தமிழ் நாடு மீனவப் பெண்கள் பெடரேஷன் அமைக்கப்பட்டது. கடலுக்கு மீன் பிடிக்கச் செல்லாமல் உள் நாட்டில் மீன் பிடித்தல் மற்றும் மீன் விற்பனை தொழிலில் ஏறக்குறைய 2.3 கோடி பேர் ஈடுபட்டுள்ளனர்.
இந்தியாவில் மட்டும் பெண்கள் மீன் பிடி தொழிலில் ஈடுபட்டு வருவதில்லை, உலகெங்கும் அந்தத் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். இதனை மனதில் கொண்டு கடந்த வருடம் 2024ம் ஆண்டு பிரேசில் நாட்டில் நடைபெற்ற 8வது உலக மீனவர்கள் நல அமைப்பின் பொது சபை கூட்டத்தில் வருடம் தோறும் நவம்பர் 5ம் தேதியை உலக மீனவ பெண்கள் தினமாக கொண்டாட முடிவு செய்யப்பட்டது. அதன்படி முதல் முறையாக 2025ம் ஆண்டு நவம்பர் 5ம் தேதி, ‘உலக மீனவப் பெண்கள் தினம்’ உலகெங்கும் கொண்டாடப்பட்டது.