ஒவ்வொரு ஆண்டும் பிறக்கும்போது அது நமக்குப் புதிய விடியலைத் தரவும், பல ஆச்சரியமான நிகழ்வுகளையும் நிகழ்த்தி நம்மை அசத்தவுமே பிறக்கின்றன. அப்படி சில ஆச்சரிய நிகழ்வுகளை நிகழ்த்திய சில ஆண்டுகளின் தொகுப்பு இது.
இந்த 2025ம் ஆண்டு ஒரு சுவாரஸ்யமான ஆண்டு. 2025 என்பது கணிதவியல் எண்ணில் ஒரு சுவாரஸ்யமான எண். 1 முதல் 9 வரை உள்ள எண்களின் கணமூலங்களின் கூட்டுத் தொகைதான் 2025.
1³+2³+3³+4³+5³+6³+7³+8³+9³= 2025.
உலக வரலாற்றில் 1866ம் ஆண்டு ஓர் ஆச்சரியமான ஆண்டு. இந்த ஆண்டின் பிப்ரவரி மாதத்தில் பௌர்ணமியே இல்லை. ஆனால், ஜனவரியில் இரண்டு பௌர்ணமிகளும், மார்ச்சில் இரண்டு பௌர்ணமிகளும் வந்தன. உலகம் தோன்றியது முதல் இப்படி ஏற்பட்டது இல்லை. இம்மாதிரி பத்து லட்சம் ஆண்டுகளுக்கு ஒரு முறைதான் ஏற்படுமாம்.
ஒரே ஆண்டில் 5 சூரிய கிரகணம் நிகழ்வது மிகவும் அரிதானதாகும். 1935ம் ஆண்டு இந்த அதிசயம் நிகழ்ந்தது. அடுத்ததாக, 2206ம் ஆண்டில் இதுபோன்று அதிசயம் நடக்க வாய்ப்புண்டாம்.
1960ம் ஆண்டிற்கு ‘உலக சுதந்திர ஆண்டு' என்ற ஒரு பெருமை உண்டு. காரணம், இந்த ஆண்டில்தான் உலகில் 17 நாடுகள் சுதந்திரம் அடைந்தன. உலகின் தேர்தல் ஆண்டாக 2009ம் ஆண்டை குறிப்பிடுகிறார்கள். காரணம், அந்த ஆண்டில் 69 நாடுகளில் பொதுத் தேர்தல் நடைபெற்றது.
1978ம் ஆண்டுக்கு சில சிறப்புகள் உண்டு. அந்த ஆண்டு ஞாயிற்றுக்கிழமை தொடங்கி, ஞாயிற்றுக்கிழமையில் முடிந்தது. அந்த ஆண்டில் மொத்தத்தில் 53 ஞாயிற்றுக்கிழமைகள் இருந்தன. அடுத்து 400 ஆண்டுகளுக்குப் பிறகே இதுபோல் வரும்.
2004ம் ஆண்டு லீப் வருடம். இவ்வருட பிப்ரவரி 29 நாட்களில் 5 ஞாயிறுகள் வந்தன. இதேபோல் 1976ல் வந்தது. அடுத்து 2035ல் வரும். 2009ம் ஆண்டின் ஆகஸ்ட் மாதத்திற்கு ஒரு தனிச்சிறப்பு உண்டு. அந்த மாதத்தில் சனி, ஞாயிறு மற்றும் திங்கள் கிழமைகள் 5 முறை வந்தன. இதே சிறப்பு இனி 835 ஆண்டுகளுக்குப் பிறகுதான் நிகழுமாம்.
இதேபோன்று, 2009ம் ஆண்டில் ஓர் அரிதான நாள் வந்தது. ஆகஸ்ட் 7ம் தேதி மதியம் 12 மணி 34 நிமிடங்கள் 56 வினாடியின்போது பல நாடுகளில் விருந்துகளுக்கு ஏற்பாடு செய்திருந்தனர். காரணம், அதை எண்களில் எழுதினால் 12:34:56 07/08/09 என்ற எண்கள் வரிசையில் வந்ததுதான். இதுபோன்று 1 முதல் 9 வரை வரிசையில் எண்கள் வருவதற்கு இன்னும் 100 ஆண்டுகள் காத்திருக்க வேண்டும்.
2010ம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகள் 5 முறை வந்தன. அந்த மாதம் 10ம் தேதி காலை மற்றும் இரவு 10 மணி 10 நிமிடம் மற்றும் 10 வினாடியின்போது 10:10:10 10-10-10 என்று கடிகாரம் காட்டி அனைவரையும் ஆச்சரியமூட்டியது. இந்த அரிதான நிகழ்வின்போது இரவு 10 மணி 10 நிமிடத்திற்கு மின்சாரத்தை ஒரு நிமிடம் அனைத்து உலக வெப்ப மாயமாதலை குறைக்குமாறு குளோபல் ஒர்க் பார்ட்டி என்ற அமைப்பு வேண்டுகோள் விடுத்திருந்தது.
2011ம் ஆண்டு எண்களின் ரசிகர்களுக்கு ஓர் ஆச்சரியம் நடத்தியது. அன்றைய புத்தாண்டு 1ம் தேதி, 1ம் மாதம் 2011ன் சுருக்கம் 11 இவற்றை சேர்த்து குறிப்பிடும் போது 1/1/11என்ற அதிசய எண் வந்தது. அதே நவம்பர் மாதம் 11ந் தேதியை 11-11-11 என்று எழுதும்போது 6 முறை ஒன்று என்ற இலக்கம் இடம் பெற்றது. இந்த நூற்றாண்டின் வித்தியாசமான ஆண்டுகளில் இதுவும் ஒன்று.
2017ம் ஆண்டு ஒரு சுவாரஸ்யமான ஆண்டு. அந்த வருட காலண்டர் 2006, 1995, 1989, 1978, 1967, 1961, 1950, 1937, 1933 மற்றும் 1922க்கும் பொருந்தும்படியாக இருந்ததுதான் காரணம்.
2018ம் ஆண்டு ஜனவரி 31ம் தேதியில் 152 ஆண்டுகளுக்குப் பிறகு ஆபூர்வ சந்திர கிரகணம் தோன்றியது. அன்றைய தினம் மூன்று தோற்றங்களில் நிலவு தோன்றியது. சூப்பர் மூன் (வழக்கத்தை விட 30 சதவிகிதம் பெரிய அளவில் நிலவு), புளு மூன் (ஒரு மாதத்தில் வரும் இரண்டாவது பௌர்ணமி), ரெட் மூன் (சந்திர கிரகணம் பௌர்ணமியில் வருவது).