

ஒவ்வொரு வருடமும் உலகம் முழுவதும் நவம்பர் 13ம் நாள் உலக கருணை தினம் கொண்டாடப்படுகிறது. சர்வதேச அரசு சாரா நிறுவனங்களின் கூட்டணியான உலக கருணை இயக்கம் 1998ல் இதை தொடங்கியது. கனடா, ஆஸ்திரேலியா, நைஜீரியா மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் போன்ற பல நாடுகள் இந்நாளைக் கடைபிடிக்கின்றன. 2009ம் ஆண்டில் சிங்கப்பூர் முதல் முறையாக இந்த நாளை கொண்டாடியது. உலகக் கருணை தினத்திற்கான கருப்பொருள், 'முடிந்த வரை அன்பாக இருங்கள்' என்பது ஆகும்.
1990களின் நடுப்பகுதில் கருணை இயக்கம் ஒரு மாநாட்டை ஏற்பாடு செய்து உலகம் முழுவதிலும் இருந்து பங்கேற்பாளர்களை அழைத்து தங்கள் சொந்த நாடுகளில் தொடங்கிய கருணை இயக்கங்களுடன் தங்கள் அனுபவங்களை பகிர்ந்துகொள்ள முடிவு செய்தது. உலக கருணை தினத்தின் நோக்கம் தனி நபர்கள் சமூகம் மற்றும் சமூகத்தில் ஒருவருக்கொருவர் கருணையுடன் நடந்துகொள்ள ஊக்குவிப்பதும், ஊக்கம் கொடுப்பதும் ஆகும்.
கருணையைக் கடைபிடிப்பதன் மூலம் உலகைச் சேர்ந்த இடமாக அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட முடியும் என்பதை இந்த நாள் நினைவூட்டுகிறது. நமது சமூகம் மற்றும் நம் மீது குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை இந்த சிந்திக்க இந்த நாள் நம்மை ஊக்குவிக்கிறது.
குழந்தைகள் மற்றும் இளைஞர்களுக்கு கருணையின் முக்கியத்துவத்தைப் பற்றி கற்பிப்பது நீடித்த தாக்கத்தை ஏற்படுத்தும். கதை சொல்லல், கலந்துரையாடல்கள் மூலம் ஆரம்பத்திலேயே இரக்கத்தின் விதையை விதைப்பதும் கருணையை மதிக்கும் ஒரு தலைமுறையை உருவாக்க உதவுகிறது. ஒருவருக்கு சிறிய பரிசை கொடுத்து ஆச்சரியப்படுத்துங்கள். அவர்களின் செயல்களில் உண்மையான பாராட்டை அவர்களுக்குத் தெரிவியுங்கள். அட்டைகளில் இதயபூர்வமான செய்திகளை எழுதி நண்பர்கள், குடும்பத்தினர்களுக்குக் கொடுங்கள். தன்னார்வ பணியில் உள்ளவர்களுடன், தொண்டு நிறுவனங்கள், சமூக அமைப்புகளுடன் சேர்ந்து உதவி செய்யலாம்.
இனி, அருளாளர்கள் சிலரின் கருணை மொழிகள் குறித்துக் காண்போம்.
* வார்த்தைகள் உண்மையாகவும் அன்பாகவும் இருக்கும்போது அவை உலகையே மாற்றும் - புத்தர்
* கருணை எப்போதும் கருணையை தோற்றுவிக்கும் - சோஃபோக்கிள்ஸ்
* எந்த ஒரு கருணை செயலும் எவ்வளவு சிறியதாக இருந்தாலும் ஒருபோதும் வீணாகாது - ஈசோப்
* கருணை என்பது காது கேளாதோர் கேட்கக்கூடிய மொழி, குருடர்கள் பார்க்கக்கூடிய மொழி - மார்க் டிவைன்
* ஒரு அன்பான புன்னகை என்பது கருணையின் உலகளாவிய மொழி - வில்லியம் ஆர்தர் வார்டு
* வார்த்தைகளில் கருணை நம்பிக்கையை உருவாக்குகிறது. சிந்தனையில் கருணை ஆழத்தை உருவாக்குகிறது. கொடுப்பதில் கருணை அன்பை உருவாக்குகிறது - லாவோ சூ
* தயவை விட என்ன பெரிய ஞானத்தை நீங்கள் கண்டுபிடிக்க முடியும் - ஜீ ஜாக் ரூசோ
* வற்புறுத்தலால் சாதிக்க முடியாததை கருணையால் சாதிக்க முடியும் – பப்ளிலியஸ் சைரஸ்
* ஒரு நல்ல மனிதனின் வாழ்க்கையின் சிறந்த பகுதி அவனது சிறிய பெயரிடப்படாத நினைவில் கொள்ளப்படாத கருணை மற்றும் அன்பின் செயல்கள் - வில்லியம் வேர்ட்ஸ் வொர்த்
* இது என்னுடைய எளிய மதம். கோயில்கள் தேவையில்லை, சிக்கலான தத்துவம் தேவையில்லை, நமது சொந்த மூளை, நம் சொந்த இதயம், நமது கோயில் தத்துவம் அனைத்தும் கருணை - தலாய் லாமா
* கருணையை உனக்குள் நன்றாகப் பாதுகாத்துக் கொள். தயக்கமின்றி எப்படிக் கொடுப்பது, எப்படி இழப்பது, பெறுவது என்பதை அறிந்து கொள் - ஜார்ஜ் சாண்ட்
கருணை தினத்தில் ஒரு கனிவான புன்னகை அல்லது உதவி செய்வது கருணையின் வெளிப்பாடாகும். கருணையை வளர்ப்போம்! கருணையைப் போற்றுவோம்!