

உலக நிமோனியா தினம் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 12 அன்று அனுசரிக்கப்படுகிறது. இந்த தினம் நிமோனியா நோயின் தீவிரமான பாதிப்புகள் மற்றும் அதன் தடுப்பு மற்றும் மேலாண்மை குறித்து உலக அளவில் விழிப்புணர்வை ஏற்படுத்த உதவுகிறது. நிமோனியா நோயைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கும் அதன் தடுப்பு மற்றும் சிகிச்சை முறைகளை மேம்படுத்துவதற்காக இந்த தினம் கடைபிடிக்கப்படுகிறது.
நிமோனியா என்பது ஒரு மருத்துவ நிலை. இது பெரும்பாலும் ஒன்று அல்லது இரண்டு நுரையீரல்களிலும் உள்ள காற்றுப் பைகளில் ஏற்படும் அழற்சியால் வகைப்படுத்தப்படுகிறது. இது பெரும்பாலும் தொற்று நோயால் ஏற்படுகிறது. இந்தத் தொற்று பாக்டீரியா, வைரஸ், பூஞ்சை அல்லது பிற நுண்ணுயிர்களால் ஏற்படலாம். நிமோனியாவில் நுரையீரல் காற்றுப் பைகள் பாதிக்கப்பட்ட நபருக்கு சுவாசிப்பதை கடினமாக்கும்.
இதன் பொதுவான அறிகுறிகளில் இருமல், காய்ச்சல், மார்பு வலி மற்றும் சுவாசிப்பதில் சிரமம் ஆகியவை அடங்கும். நிமோனியா லேசானது முதல் கடுமையானது வரை இருக்கலாம். இளம் குழந்தைகள், முதியவர்கள் மற்றும் பலவீனமான நோய் எதிர்ப்பு அறிகுறிகள் கொண்ட நபர்களுக்கு இது மிகவும் ஆபத்தானதாக இருக்கலாம்.
நிமோனியா பெரும்பாலும் தொடர்ச்சியான இருமலுடன் சளியை உருவாக்கும். இருமல் உலர்ந்ததாகவோ அல்லது பச்சை, மஞ்சள், இரத்தக் கலரில் உள்ளதாகவோ இருக்கலாம். அதேபோல், நிமோனியாவின் பொதுவான அறிகுறியாக உடல் வெப்பநிலை உயர்ந்து காய்ச்சலுடன் குளிர் மற்றும் வியர்வை ஏற்படலாம். தொற்று அதிகரிக்கும்போது சுவாசிப்பதில் சிரமம் அல்லது மூச்சுத் திணறல் ஏற்படலாம். இது நுரையீரலில் வீக்கம் மற்றும் திரவம் அதில் சேர்வதால் ஏற்படுகிறது. சோர்வு மற்றும் பலவீனம் நிமோனியாவின் பொதுவான அறிகுறிகள் ஆகும். ஏனெனில், உடல் தொற்றுநோயை எதிர்த்துப் போராட சக்தியை செலவிடுகிறது. நிமோனியா உடல் முழுவதும் தசை வலி மற்றும் அசெளகரியத்தை ஏற்படுத்தும்.
நிமோனியாவை தடுப்பதற்கான மிக பயனுள்ள வழிகளில் தடுப்பூசி ஒன்றாகும். பெரியவர்களுக்கும் குழந்தைகளுக்கும் நிமோகோகல் தடுப்பூசிகள் போடப்படுகின்றன. இவை பொதுவாக நிமோனியவை ஏற்படுத்தும் பாக்டீரியாக்களுக்கு எதிரான பாதுகாப்பை வழங்குகின்றன.
இருமல் அல்லது தும்மும்போது வாய் மற்றும் மூக்கை மூடுவது, நல்ல சுவாச சுகாதாரத்தை கடைபிடிப்பது சுவாச நோய் தொற்றுகள் பரவுவதைத் தடுக்க உதவும். அதேபோல், சோப்பு மற்றும் தண்ணீரால் தொடர்ந்து கை கழுவுதல் தொற்று அபாயத்தை குறைக்கும்.
புகைப்பிடித்தல் நுரையீரலை சேதப்படுத்தி, நோய் எதிர்ப்பு மண்டலத்தை பலவீனப்படுத்துவதால் இதைத் தவிர்ப்பது, காய்ச்சல் காலத்தில் நெரிசலான இடங்களில் இருப்பதைத் தவிர்ப்பது நல்லது. புகை, தூசி போன்றவற்றை தவிர்க்கவும். நுரையீரலுக்கு எரிச்சலை ஏற்படுத்தும் புகையை தவிர்க்கவும். சளி அல்லது காய்ச்சல் போன்ற சுவாச நோய் தொற்றுகளுக்கு உடனடியாக மருத்துவ உதவியைப் பெற்றும் இதைத் தடுக்கலாம். குறிப்பாக, உடலுக்கு ஓய்வு மிகவும் முக்கியம். உடலை எப்போதும் நீரேற்றமாக வைத்திருப்பது சளியை தளர்த்தி அறிகுறிகளைத் தணிக்க உதவுகிறது. கடுமையான சுவாச அறிகுறிகள் ஏற்பட்டால் உடனடியாக அதை குறைக்கும் மருந்துகளை மருத்துவரின் உதவியை நாடிச் சென்று காண்பித்து வாங்கிச் சாப்பிட்டு குணப்படுத்தலாம்.
நிமோனியா வராமல் தடுக்க அரிசி, ஓட்ஸ், பார்லி, கருப்பு அரிசி, திணை போன்ற முழு தானியங்கள் உடலில் கார்போஹைட்ரேட்டை அதிகரிக்கும். அதோடு நோயை மிக விரைவாக குணப்படுத்தவும் உதவுகிறது. தேன், மஞ்சள், சிட்ரஸ் பழங்கள், பச்சை இலை காய்கறிகள் வலுவான நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து கடுமையான நோய்களை எதிர்த்துப் போராடும். நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க முட்டைக்கோஸ், பசலை கீரை போன்ற பச்சை இலை காய்கறிகள் பயனுள்ளதாக இருக்கும்.
பச்சை இலை காய்கறிகள் ஊட்டச்சத்தினால் நிரம்பி உள்ளது. உங்கள் நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்தி விரைவாக குணப்படுத்துவதில் நல்ல பங்கு வகிக்கிறது. சிட்ரஸ் உணவில் ஆக்சிடண்ட் நிறைந்த பண்பு தொற்று அபாயத்தை அதிகரிக்கக்கூடிய நோய் கிருமிகளுக்கு எதிராக உங்கள் உடலைப் பாதுகாக்கிறது. நிமோனியாவிலிருந்து தடுப்பு ஊசிகள் போட்டு உடலைப் பாதுகாப்போம்.