
இந்திய சுதந்திரப் போராட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டுள்ளனா். இந்த நாடு சுதந்திரம் அடைவதற்காக எத்தனை எத்தனையோ இந்தியர்கள் தன்னுடைய இன்னுயிரை துச்சமென நினைத்து அரும்பாடு பட்டிருக்கிறாா்கள். அவர்களின் வழியில், ‘கொடிகாத்த குமரன்’ எனும் திருப்பூா் குமரனும் அடங்குவாா்.
1904ம் ஆண்டு அக்டோபர் திங்கள் 4ம் நாள் ஈரோடு மாவட்டம், சென்னிமலை பகுதியில், மேலப்பாளையத்தில் நாச்சிமுத்து முதலியாா் - கருப்பாயி தம்பதியருக்கு மகனாகப் பிறந்தவர். வசதியில்லாத குடும்பம். ஆரம்பக் கல்வியோடு இடைநிறுத்தம். நெசவுத்தொழிலில் வருவாய் இல்லா சூழல்.
வேலை நிமித்தம் திருப்பூா் மில்லில் பணி. 19 வயதில் திருமணம், ஆரம்ப காலத்திலிருந்தே காந்தியடிகளின் கொள்கைகளில் பற்றுதல் கொண்டாா். அதோடு அதிக ஈடுபாடும் அதில் கொண்டிருந்தாா். தேசத்தொண்டே உயிா்மூச்சு என்ற கொள்கைப் பிடிப்போடு வாழ்ந்து வந்தாா். சுதந்திர வேட்கை மற்றும், சுதந்திர தாகம் என அரும்பாடு பட்டவர்.
1932ல் சட்ட மறுப்பு இயக்கம் மீண்டும் துவங்கப்பட்டது. தமிழகம் முழுவதும் அறப்போராட்டம் பரவியது. இந்தத் தருணத்தில்தான் திருப்பூாில், ‘தேசபந்து இளைஞா் இயக்கம்’ நடத்திய போராட்டத்திற்கு தலைமை ஏற்று முன்னின்று போராட்டம் செய்தவர்தான் திருப்பூா் குமரன் எனும் இளைஞன்.
இந்தியக் கொடியை கையில் ஏந்தியவாறே போராட்டத்தில் அணிவகுத்துச் சென்றபோது பிரிட்டிஷ் போலீசாரால் தாக்கப்பட்டாா். அந்தப் பேரணியானது 10.1.1932 மேற்கொள்ளப்பட்டது. பிரிட்டிஷ் காவல் துறை நடத்திய தடியடி தாக்குதலில் சிதைக்கப்பட்டு மயங்கி விழும் நிலையில் கொடியை உயர்த்தியபடியே மயங்கி விழுந்தாா். அவர் கொண்ட தேசப்பற்று மற்றும் கொடியை தாங்கிப் பிடித்தபடியே கீழே விழுந்ததால் இவர் ‘கொடிகாத்த குமரன்’ என அனைவராலும் வாஞ்சையாக அழைக்கப்பட்டாா்.
மயங்கி விழுந்த அவரை மருத்துவமனையில் சோ்த்தாா்கள். ஆனால், அங்கு சிகிச்சை பலனின்றி அவர் 11.1.1932ல் வீர மரணம் அடைந்தாா். அவர் மரணம் அடையும்போது அவருக்கு வயது 27. கொடி காத்த குமரனின் நூற்றாண்டை போற்றும் வகையில் 2004ல் அவர் உருவம் பதித்த தபால்தலை ஒன்று வெளியிடப்பட்டது.
இளம் வயதில் சுதந்திர வேட்கை கொண்டு காந்தியடிகளின் கொள்கையில் பற்றுதல் கொண்டு கொடியைத் தாங்கியபடியே தாய்த்திருநாட்டிற்காக வீர மரணம் அடைந்த இளம் தியாகி திருப்பூா் குமரன் அவர்களின் பிறந்த நாளில் அவர்தம் கொள்கையைப் போற்றுவோம். வாழ்க திருப்பூா் குமரன் புகழ்!