
லால் பகதூர் சாஸ்திரி 1904ம் ஆண்டு அக்டோபர் 2ம் தேதி உத்தரப் பிரதேசம் வாரணாசி மாவட்டம், முகல் சாரை எனும் ஊரில் எளிய நேர்மையான ஆசிரியர் சாரதபிரசாத் மற்றும் உமாதேவி தம்பதியருக்கு மகனாகப் பிறந்தார். சாஸ்திரி தனது இரண்டாவது வயதில் தந்தையை இழந்தார். அதன் பின்னர் அவரை அவரது தாத்தாதான் வளர்த்தார். அவர்தான் பள்ளிக்கு படிக்க அனுப்பினார். அந்தப் பள்ளியோ அவரது வீட்டில் இருந்து 15 மைல்கள் தள்ளி இருந்தது. சைக்கிளில் செல்ல அவரது வறுமை நிலை இடம் தராததால் தினமும் காலில் செருப்பு இல்லாமல் நடந்தே பள்ளிக்குச் சென்று படித்து வந்தார்.
படிக்கும் காலத்திலேயே சாஸ்திரி உண்மை, நேர்மை, சரியாக பொறுப்புகளை செய்தல் மற்றும் கடின உழைப்பு போன்றவற்றிற்கு உதாரணமாக விளங்கினார். பள்ளிப் படிப்பை முடித்தவுடன் அவரது மாமா உதவியுடன் வாரனாசிக்கு சென்று உயர் நிலைப் படிப்பில் முதல் மாணவராகத் தேர்ச்சி பெற்றார். அப்போது பிரிட்டிஷ் அரசு இந்தியாவை ஆட்சி செய்து வந்தனர். இந்தியர்களை அதிகார தோரணையில் மிரட்டி வந்தனர். அதனாலே இந்தியர்கள் ஒருவிதமான வேதனையில் இருந்தனர். அப்போதுதான் காந்திஜி சத்திய கிரக போராட்டத்தை துவக்கியிருந்தார். அந்த காலகட்டத்தில் பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்திற்கு அடிக்கல் நாட்டுவதற்காக காந்தி பனாரஸ் வந்தார். அப்போது அவர் ஆற்றிய உரை சாஸ்திரியை மிகவும் கவர்ந்தது, உடனேயே அவரும் சுதந்திர போராட்டத்தில் கலந்து கொண்டார்.
இதனிடையே காசி வித்யாபதியில் பட்டப்படிப்பை முடித்தார். இதனால் லால் பகதூர் பெயருடன் ‘சாஸ்திரி’ பட்டம் சேர்ந்து கொண்டது. காந்திஜியின் நம்பிக்கைக்கு உரியவராக மாறினார். அதனால் காந்திஜி அவருக்கு ஏராளமான பொறுப்புகளை வழங்கினார். காந்தியின் தலைமையின் கீழ் தீவிர காங்கிரஸ் தொண்டரானார். பிரிட்டிஷ் அதிகாரத்தை எதிர்த்து பொது கூட்டங்களில் பேசினார். போராட்டங்களை நடத்தினார். அதனால் பல முறை சிறைக்கு சென்றார். அந்தக் காலகட்டத்தில்தான் 24 வயதில் லலிதா தேவியை மணம் முடித்தார்.
ஒத்துழையாமை இயக்கப் போராட்டத்தில் தீவிரமாக ஈடுபட்டதால் சிறையில் அடைக்கப்பட்டார். அங்கு பல இன்னல்களை சந்தித்தார். சிறையில் ஏராளமான புத்தகங்களைப் படித்தார். ‘மேரி கியூரி’யின் வாழ்க்கை வரலாற்றை ஹிந்தியில் மொழி பெயர்த்தார்.
1947ம் ஆண்டு இந்தியா சுதந்திரம் பெற்றது. அதன் பிறகு அமைக்கப்பட்ட இந்திய மந்திரி சபையில் போக்குவரத்து மற்றும் உள்துறை மந்திரியாக தேர்ந்தெடுக்கப்பட்டு செயலாற்றினார். உயர் பதவியில் இருந்தாலும் மிகவும் எளிய வாழ்க்கையே வாழ்ந்தார். தனது பணியில் இருந்தபோது யாரிடமும் மரியாதையாகவே நடந்து கொள்வார். தன்னுடைய ஆபிஸ் பியூனைக்கூட ‘சார்’ என்றே கூப்பிடுவார். அரசின் எந்த சலுகைகளையும் அவர் ஏற்றுக்கொள்ள மறுத்து விடுவார்.
லால் பகதூர் சாஸ்திரி பார்ப்பதற்கு குள்ளமாக இருந்தாலும் அவர் எந்த நடவடிக்கையையும் துணிச்சலாக எடுப்பார். அதனால் அவரது புகழ் பரவியது. லால் பகதூர் சாஸ்திரி எப்போதும் கலகலப்பாக இருப்பவர். 1952ம் ஆண்டு அவர் ரயில்வே மந்திரியாக இருந்தார். அப்போது தமிழ்நாட்டில் அரியலூர் பகுதியில் ஒரு ரயில் விபத்து நடந்தது. அதற்கு பொறுப்பேற்று தனது மந்திரி பதவியை ராஜினாமா செய்தார். பின்னர் ஜவஹர்லால் நேரு காலமானதால் லால் பகதூர் சாஸ்திரி ஒரு இக்கட்டான நிலையில் இந்தியாவின் பிரதம மந்திரியாக தேர்வு செய்யப்பட்டார். பல துணிச்சலான முடிவுகளை எடுத்து இந்தியாவை முன்னேற்றப் பாதையில் கொண்டு சென்றார்.
லால் பகதூர் சாஸ்திரியின் சாதனைகளில் முக்கியமானது, 'ஜெய் ஜவான், ஜெய் கிசான்' (வீரன் வாழ்க, விவசாயி வாழ்க) என்ற முழக்கத்தை அவர் உருவாக்கியது. இந்தியாவின் உணவு உற்பத்தியில் தன்னம்பிக்கையை வளர்த்த வெண்மைப் புரட்சி மற்றும் பசுமைப் புரட்சிக்கு அவர் முக்கியப் பங்காற்றினார்.
பாகிஸ்தானுக்கு எதிராக துணிச்சலாக இந்தியாவை போரில் ஈடுபடுத்தினார். அதனால் பாகிஸ்தான் தோல்வியை சந்தித்தது. அதன் பின்னர் ரஷ்ய அதிபர் கோசிமின் தலைமையில் பாகிஸ்தானின் தாஸ்கண்ட்டில் பாகிஸ்தான் அதிபர் அயூப்கான் உடன் சமாதான உடன்படிக்கை ஏற்பட்டது. அதில் லால் பகதூர் சாஸ்திரி கையொழுத்திட்டார். வரலாற்று சிறப்புமிக்க அந்த உடன்படிக்கை 1966ம் ஆண்டு ஜனவரி 11ம் தேதி நடந்தது. அன்று இரவு படுக்கச் சென்ற லால் பகதூர் சாஸ்திரி இரவில் மாரடைப்பால் காலமானார்.
இந்திய பிரதமர்களில் தனது அரசியல் எதிரிகள் உட்பட அனைவரையும் போற்றிய ஒரே பிரதமர் லால் பகதூர் சாஸ்திரி. அவர் தனது 38 வயது வரை தேநீர் அருந்தியது இல்லை; வெளிநாட்டில் இறந்த ஒரே பிரதமர். அவருடைய உடல் தாஷ்கண்டிலிருந்து விமானம் மூலம் இந்தியா வந்தது. அவரது உடலை சுமந்து வந்து விமானத்தில் ஏற்றியது அன்றைய பாகிஸ்தான் பிரதமரும், ரஷ்யாவின் அன்றைய அதிபரும்தான். லால் பகதூர் சாஸ்திரி உடலுக்கு லட்சக்கணக்கான மக்கள் அஞ்சலி செலுத்தினர். பின்னர் விஜய் கட்டில் அவரது உடல் தகனம் செய்யப்பட்டது.