
‘சிலம்புச்செல்வர்’ ம.பொ.சிவஞானம் தமிழ் மீது தீராத பற்றுதல் கொண்டவர். சுதந்திரப் போராட்ட தியாகி, விருதுகள் பல வாங்கிய வித்தகர், பாரதியாா் பாடல்களால் கவரப்பட்ட கலைமாமணி, பல நூல்களை எழுதியவர், சிறந்த அறிஞர், தமிழே தனது மூச்செனக் கருதி போராடிய போராளி, வரலாற்று நூல்கள் பல எழுதியவர், பல்கலைக்கழகங்களில் பட்டங்கள் பல பெற்றவர், தலைசிறந்த அரசியல்வாதி, தமிழகத்திற்குக் கிடைத்த தன்னடக்கமான தலைவர், மேல்சபை தலைவர், திருத்தணியை தமிழ்நாட்டுக்கு பெற்றுத் தந்த திறமைசால் பெருமைக்குாியவர் மயிலை பொன்னசாமி சிவஞானம், ம.பொ.சி. என அனைவராலும் அன்பாக அழைக்கப்பட்ட அவரது நினைவு நாளான இன்று (அக்டோபர் 3) அவரது நினைவலைகளோடு பயணிப்போம்.
1906ல் பிறந்து 1995ல் மறைந்தாலும் அவர் நம் தேசத்திற்கு ஆற்றிய தொண்டுகளை மறக்கவே முடியாதது. தமிழ் மொழி மீது அவர் வைத்திருந்த அளவு கடந்த பற்றுதலை சொல்ல வாா்த்தைகளே இல்லை. குழந்தைத் தொழிலாளியாய் நெசவுத் தொழிலில் தொடங்கி, அச்சு கோா்க்கும் பணியில் வேலை பாா்த்து, சுதந்திரப் போராட்டத்தில் பங்கெடுத்து பல போராட்டங்கள் மேற்கொண்டு ,ஏறக்குறைய எழுநூறு நாட்கள் சிறைவாசம் கண்ட தமிழகத்தின் விடிவெள்ளி.
சிறை வாசத்தில் சிலப்பதிகாரத்தை ஆராய்ந்து பதிமூன்றுக்கு மேற்பட்ட சிலப்பதிகார நூல்களை எழுதிய வரலாற்று நாயகர் ம.பொ.சி. 1956ல் தமிழர்களுக்கான தமிழ்நாடு தனி மாநிலம் படைத்ததால், ‘தமிழ் தேசத்தந்தை’ என அனைவராலும் போற்றப்பட்டவர். திருப்பதியை தமிழ்நாட்டோடு இணைக்க பாடுபட்டு, திருத்தணியை நமதாக்கியவர்.
தமிழ் மீதும், பாரதியாா் கொண்ட தமிழ்ப்பற்றின் மீதும் தீராத காதல் கொண்டவர். பாரதியாரைப் பற்றி பல நூல்களை படைத்த பெருமைக்குாியவர். சிலப்பதிகாரம் மீது கொண்ட தீராத பற்றுதலால் சிலம்புச் செல்வரானாா். மதுரை பல்கலைக்கழகப் பேரவை ‘செல்வர்’ பட்டம் தந்து கெளரவம் செய்தது. சென்னை மற்றும் அண்ணாமலை பல்கலைக்கழகங்கள் இவருக்கு டாக்டர் பட்டம் வழங்கி பெருமைப்படுத்தியது.
தமிழ் தேசிய முழக்கமே உயிா் மூச்செனக் கருதி பாடுபட்டவர். மத்திய அரசு பத்மஶ்ரீ விருது வழங்கி பெருமைப்படுத்தியது. தமிழ் அரசு கழகத்தின் நிறுவனரானவர். தமிழ் முரசு சஞ்சிகை நடத்தியவர். தமிழக மேலவையின் தலைவராகப் பதவி வகித்தவர். ‘மெட்ராஸ் ஸ்டேட்’ என்ற பெயரை மாற்றி தமிழ்நாடு என பெயர் வைக்க போராடியவர்.
வ.உ.சி. மற்றும் கட்டபொம்மன் ஆகியோா் செய்த தியாகங்களை நூல் வடிவில் தந்து உலகறியச் செய்தவர். பின்னா் அந்த இரண்டு நூல்களும் திரைப்படமானதே வரலாறு. சிலப்பதிகாரத்தின் பெருமையை உலகறியச் செய்ததோடு, அவரது குழந்தைகளுக்கு கண்ணகி, மாதவி எனப் பெயர் வைத்தவர். பாரதியாா், திருவள்ளுவர், இராமலிங்க அடிகளாா் ஆகிய பெருமகனாா்களைப் பற்றியும் நூல்கள் எழுதி உள்ளாா். இப்படி அவரது தொண்டுகளை, போராட்டங்களை வர்ணிக்க வாா்த்தைகளே இல்லை. இப்படி தமிழே மூச்சென பாடுபட்ட அருந்தவப் புதல்வரின் நினைவு நாளில் அவரது புகழ் பாடுவதோடு, அவர் தம் கொள்கைகளை தொடர்ந்து கடைபிடிப்போம்.