பிரபல ஜோதிடரும், குமுதம் ஜோதிடம் முன்னாள் ஆசிரியருமான ஏ.எம்.ராஜகோபாலனின் சதாப்த பூர்த்தி விழா (நூறு ஆண்டுகள் நிறைவு) வெகு விமரிசையாக சென்னையில் நடைபெற்றது. அவரது உறவினர்கள், நண்பர்கள், அபிமானிகள் என அனைவரும் அதில் பங்கேற்று, ராஜகோபாலன் - பத்மாசனி தம்பதியினரிடம் ஆசி பெற்றார்கள். நூற்றாண்டு நாயகர் ஏ.எம்.ராஜகோபாலன் வாழ்க்கைப் பயணம் குறித்து இந்தப் பதிவில் காண்போம்.
ஏ.எம்.ராஜகோபாலன் ஸ்ரீரங்கத்திலும், திருச்சியிலுமாக தனது பள்ளி, கல்லூரிப் படிப்பை முடித்தவர். மாணவப் பருவத்தில், ‘வெள்ளையனே வெளியேறு’ போராட்டத்தில் பங்கேற்றவர். நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் இவரது மனம் கவர்ந்த தலைவர். ஆங்கிலேய ஆட்சிக்கு எதிரான அவரது வீரமான போராட்ட முறைகளால் கவரப்பட்ட ராஜகோபாலன் நேதாஜியின் இந்திய தேசிய ராணுவத்தில் சேரத் துடித்தவர். அதற்காக ஒரு நண்பர் மூலமாக ரகசியமாக ஒரு துப்பாக்கி கூட வாங்கி வைத்துக் கொண்டார். ஆனால், அதற்கான சூழ்நிலை ஏற்படவில்லை. நேதாஜியின் மர்ம மரணத்தின்போது மிகவும் மனமுடைந்து போனார்.
தமிழ்நாட்டில் சென்னை, மதுரை உள்ளிட்ட ஊர்களிலும், பம்பாயிலும் ஹிந்து, எக்ஸ்பிரஸ் உட்பட பல்வேறு நிறுவனங்களிலும் பணியாற்றியவர் ஏ.எம்.ஆர். ஆனாலும், அவருக்கு பத்தாவது வயது முதலே ஜோதிடத்தில் ஈடுபாடு ஏற்பட்டது. அதற்கு முக்கியக் காரணமாக இருந்தவர்கள் அவரது உறவினரான ஸ்ரீனிவாச பட்டாச்சாரியார் மற்றும் சௌமிய நாராயணாச்சாரியார் என்ற இருவரும்தான். அவர்களின் அபார ஜோதிடக் கலைத்திறன் ஏ.எம்.ஆரை ஜோதிடத்தின்பால் ஈர்த்தது.
“ஜோதிடம் என்பது ஒருவரது கிரக நிலைகளை ஆராய்ந்து பலன்களைத் தெரிந்து கொள்வதற்கு மட்டுமில்லை; மக்களின் அன்றாடப் பிரச்னைகளை எளிய பரிகாரங்கள் மூலமாகத் தீர்ப்பதற்கே!” என்ற கருத்தில் அழுத்தமான நம்பிக்கை கொண்டவர் ஏ.எம்.ஆர். அவர் ஜாதகப் பலன்களைத் துல்லியமாகக் கணித்து, சாமானிய மக்களும் செய்யத்தக்க வகையில் எளிய பரிகாரங்களைக் கூறுவது அவரது தனிச்சிறப்பு என்றால் அது மிகையில்லை.
ஒரு சமயம் அவர் தான் பார்த்து வந்த வேலையை விட்டுவிட நேர்ந்தது. அதனால், சென்னை திருவல்லிக்கேணியில் வசித்த அவரது பெரிய குடும்பம் சிரமதசையில் இருந்தது. ஒரு நாள் வட இந்தியர் ஒருவர், தன்னுடைய ஜாதகத்துடன் அவரைப் பார்க்க வந்தார். ஜாதகத்தை ஆராய்ந்து பார்த்துவிட்டு, ஏ.எம்.ஆர். கூறிய பலன்களால் பெரிதும் மகிழ்ந்த அவர் ஒரு நூறு ரூபாய் நோட்டை தட்சணையாகத் தட்டில் வைத்துக் கொடுத்தார். ஆனால், ஏ.எம்.ஆர்., “நான் ஜோதிடம் பார்க்கப் பணம் வாங்குவதில்லை” என்று கூறிவிட்டார். அவர் எவ்வளவோ மன்றாடியும், பணம் வாங்கிக்கொள்ள மறுத்து, அவருக்கு ஆசி வழங்கி அனுப்பி வைத்தார். ஏ.எம்.ஆரின் வீட்டுச் சூழலைப் பார்த்துவிட்டு, “இப்படியும் ஒரு மனிதரா?” என்ற வியப்புடன் அவர் புறப்பட்டுச் சென்றார்.
சில மணி நேரத்தில் அந்த வட இந்தியரிடம் பணியாற்றும் நிர்வாகி ஒருவர் வந்தார். “உங்களுக்காக பம்பாயில் ஒரு மில்லில் ஃபேக்டரி மேனேஜர் வேலை காத்திருக்கிறது. இதோ அப்பாயின்ட்மென்ட் ஆர்டர்! பயண டிக்கெட்டும், அட்வான்ஸ் தொகை 5000 ரூபாயும் இதில் உள்ளது. உடனே பம்பாய் சென்று வேலையில் சேரலாம்” என்று சொல்லி ஏ.எம்.ஆரிடம் கொடுத்தார். அந்த வட இந்தியர் மூலமான இறைவனின் கருணையை எண்ணி மனம் நெகிழ்ந்தார் ஏ.எம்.ஆர். உடனே பம்பாய் சென்று வேலையை ஏற்றுக் கொண்டார். பின்னர் அங்கே அவருக்கு வசிக்க ஒரு வீடு தரப்பட்டபோது, அவரது குடும்பமும் பம்பாய் சென்றது.
தினமணியில், ‘காலம் உங்கள் கையில்’ என்ற ஜோதிடப் பகுதியின் மூலமாக பேரும், புகழும் பெற்றார் ஏ.எம்.ஆர். அந்தப் பகுதியின் மூலம், ஏராளமானவர்கள் தங்கள் பிரச்னைகளுக்கு எளிய பரிகாரங்கள் மூலமாக பலன் பெற்றார்கள். அதன் பிறகு, குமுதம் ஜோதிடம் என்ற பத்திரிகை இவரை ஆசிரியராகக் கொண்டு துவக்கப்பட்டது. அதில், ஜோதிடம் மட்டுமில்லாமல், தமிழ் நாட்டின் மூலை முடுக்குகளில் உள்ள கோயில்களுக்கெல்லாம் சென்று வந்து அவற்றின் அருமை பெருமைகளை தனக்கே உரிய பாணியில் சிறப்பாகவும், விரிவாகவும் எழுதியது வாசகர்களை மிகவும் கவர்ந்தது. அவர் எழுதிய கோயில்களைப் பற்றிப் படித்த வாசகர்கள், அந்தக் கோயில்களுக்கு சாரி, சாரியாகப் படை எடுக்கத் தொடங்கினார்கள். அதுவரை மக்கள் அறியாமல் இருந்த பல கோயில்கள், மக்களின் கவனத்தை ஈர்த்தன. பல கோயில்களில் பல்வகை நற்பணிகளும் நடைபெறுவதற்கு இவரது எழுத்துக்கள் வழிசெய்தன.
நம் நாட்டின் ஆன்மிக, கலாசாரத்தில் ஆழ்ந்த பற்று கொண்ட ஏ.எம்.ஆர். 108 திவ்ய தேசங்களுக்கும் சென்று தரிசனம் செய்தவர். கைலாச யாத்திரையும் சென்று வந்தவர். கைலாய மலையின் புகைப்படம் ஒன்றை பிரிண்ட் போட்டு, ஆன்மிக அன்பர்களுக்கு வழங்குவதை 1997ம் ஆண்டு முதல் இவர் செய்து வருகிறார்.
ஒரு சமயம் திருச்சி சிறையில் ஆயுள் தண்டனை பெற்ற கைதி ஒருவர், “தான் செய்யாத குற்றத்துக்காக ஆயுள் தண்டனை அனுபவித்து வருவதாகக் குறிப்பிட்டு, ஏ.எம்.ஆருக்குத் தனது ஜாதகத்தை அனுப்பி வைத்து, அவரது கருத்தினைக் கேட்டிருந்தார். அந்த ஜாதகத்தை ஆராய்ந்த ஏ.எம்.ஆர்., “கவலைப்பட வேண்டாம்! இன்ன தேதியில் நீங்கள் விடுதலை பெறுவீர்கள்” என்று ஒரு தேதியைக் குறிப்பிட்டு பதில் எழுதினார். அந்தக் குறிப்பிட்ட தேதியில் அதிசயம் நிகழ்ந்தது! ஆம்! அந்த ஆயுள் தண்டனைக் கைதி, அன்று விடுதலையானார்.